டுவிட்டரில் மதநிந்தனை? சவுதி ஊடகவியலாளர் மலேஷியாவில் கைது


டுவிட்டர் பக்கம் ஒன்று

டுவிட்டரில் தான் வெளியிட்ட ஒரு கருத்தில் இறைதூதர் முகமதுவை இழிவுபடுத்தினார் என்று குற்றம்சாட்டப்படும் சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரை மலேஷியாவில் பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

முகமது நபியின் பிறந்த நாள் சென்ற வாரம் வந்த சமயத்தில் ஹம்ஸா கஷ்காரி என்ற இந்த கட்டுரை ஆசிரியர் டுவிட்டரில் வெளியிட்ட ஒரு சர்ச்சைக்குரிய கருத்து, சுமார் முப்பதாயிரம் பேரிடம் இருந்து டுவிட்டரில் பதில் கருத்தைத் தூண்டியிருந்தது. நிறைய பேர் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று வியாழனன்று இவர் மலேஷியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வந்து இறங்கியபோது, சர்வதேச பொலிஸ் பிரிவான இண்டர்போல் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் சவுதி அரேபியாவிடம் ஒப்படைக்கப்படுவாரா என்பது இன்னும் தெளிவில்லாமல் இருக்கிறது.

முகமது நபி பிறந்தநாள் தொடர்பில் ஹம்சா எழுதியிருந்த டுவிட்டர் கருத்தில், "உன்னைப் பற்றிய பல அம்சங்களை நான் நெசிக்கிறேன். அதேநேரம் உன்னைப் பற்றிய சில அம்சங்களை நான் வெறுக்கவும் செய்கிறேன். உன்னைப் பற்றிய பல விஷயங்களை என்னால் புரிந்துகொள்ள முடியாமலும் இருக்கிறது. நான் உனக்காக பிரார்த்திக்க மாட்டேன்." என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

எதிர்வினைவகள் வெளியான நிலையில் இவர் தான் வெளியிட்ட கருத்துக்காக மன்னிப்புக் கேட்டிருந்ததோடு. அடுத்தவர் மனதைப் புண்படுத்தும் மாதிரியாக இருந்த கருத்துகளை டுவிட்டரில் இருந்து நீக்கியும் இருந்தார். ஆனாலும் அவர் மேலெழுந்த ஆத்திரம் கொந்தளிப்பு அடங்கியபாடில்லை..

மதநிந்தனை செய்ததாக குற்றம்சாட்டி இவர் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என மதகுருக்கள் கோரியுள்ளனர்.

இறைதூதரை இழிவுபடுத்தும் விதமான கருத்துகளைச் சொல்வது மதநிந்தனையாக கருதப்படுகிறது.

தவிர சவுதி அரேபியாவில் மதநிந்தனை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை கூட விதிக்கப்படலாம்.

ஹம்ஸா கஷ்காரி எந்த நாட்டிலிருந்து வந்த விமானத்தில் மலேஷியாவுக்கு வந்தார் என்ற தகவலை மலேஷியப் பொலிசார் வெளியிடவில்லை.

இவரைக் கைது செய்யுங்கள் என்று சவுதி மன்னர் உத்தரவிட்டதாக கூறப்படுவதை அடுத்து அவர் சவுதியை விட்டு வெளியேறியதாக டுவிட்டர் தகவல்களிலிருந்து அறியக்கூடியதாகவுள்ளது.

தற்போது இந்நபருடைய டுவிட்டர் கணக்கே இணையத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது.

மலேஷியாவுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையில் உத்தியோகபூர்வமான கைதிகள் பரிமாற்ற உடன்பாடு ஏதும் இல்லை.

ஆனாலும் தேசப் பாதுகாப்பு தொடர்பான இருதரப்பு ஒப்பந்தங்களின் கீழ் கஷ்காரி சவுதி அரேபியாவிடம் ஒப்படைக்கப்படலாம் என பெயர் குறிப்பிட விரும்பாத மலேஷிய அதிகாரிகள் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளனர்

source:BBC

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

பின்னூட்டமொன்றை இடுக