Daily Archives: மார்ச் 15, 2012

டுவிட்டரில் மதநிந்தனை? சவுதி ஊடகவியலாளர் மலேஷியாவில் கைது

டுவிட்டர் பக்கம் ஒன்று

டுவிட்டரில் தான் வெளியிட்ட ஒரு கருத்தில் இறைதூதர் முகமதுவை இழிவுபடுத்தினார் என்று குற்றம்சாட்டப்படும் சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரை மலேஷியாவில் பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

முகமது நபியின் பிறந்த நாள் சென்ற வாரம் வந்த சமயத்தில் ஹம்ஸா கஷ்காரி என்ற இந்த கட்டுரை ஆசிரியர் டுவிட்டரில் வெளியிட்ட ஒரு சர்ச்சைக்குரிய கருத்து, சுமார் முப்பதாயிரம் பேரிடம் இருந்து டுவிட்டரில் பதில் கருத்தைத் தூண்டியிருந்தது. நிறைய பேர் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று வியாழனன்று இவர் மலேஷியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வந்து இறங்கியபோது, சர்வதேச பொலிஸ் பிரிவான இண்டர்போல் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் சவுதி அரேபியாவிடம் ஒப்படைக்கப்படுவாரா என்பது இன்னும் தெளிவில்லாமல் இருக்கிறது.

முகமது நபி பிறந்தநாள் தொடர்பில் ஹம்சா எழுதியிருந்த டுவிட்டர் கருத்தில், "உன்னைப் பற்றிய பல அம்சங்களை நான் நெசிக்கிறேன். அதேநேரம் உன்னைப் பற்றிய சில அம்சங்களை நான் வெறுக்கவும் செய்கிறேன். உன்னைப் பற்றிய பல விஷயங்களை என்னால் புரிந்துகொள்ள முடியாமலும் இருக்கிறது. நான் உனக்காக பிரார்த்திக்க மாட்டேன்." என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

எதிர்வினைவகள் வெளியான நிலையில் இவர் தான் வெளியிட்ட கருத்துக்காக மன்னிப்புக் கேட்டிருந்ததோடு. அடுத்தவர் மனதைப் புண்படுத்தும் மாதிரியாக இருந்த கருத்துகளை டுவிட்டரில் இருந்து நீக்கியும் இருந்தார். ஆனாலும் அவர் மேலெழுந்த ஆத்திரம் கொந்தளிப்பு அடங்கியபாடில்லை..

மதநிந்தனை செய்ததாக குற்றம்சாட்டி இவர் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என மதகுருக்கள் கோரியுள்ளனர்.

இறைதூதரை இழிவுபடுத்தும் விதமான கருத்துகளைச் சொல்வது மதநிந்தனையாக கருதப்படுகிறது.

தவிர சவுதி அரேபியாவில் மதநிந்தனை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை கூட விதிக்கப்படலாம்.

ஹம்ஸா கஷ்காரி எந்த நாட்டிலிருந்து வந்த விமானத்தில் மலேஷியாவுக்கு வந்தார் என்ற தகவலை மலேஷியப் பொலிசார் வெளியிடவில்லை.

இவரைக் கைது செய்யுங்கள் என்று சவுதி மன்னர் உத்தரவிட்டதாக கூறப்படுவதை அடுத்து அவர் சவுதியை விட்டு வெளியேறியதாக டுவிட்டர் தகவல்களிலிருந்து அறியக்கூடியதாகவுள்ளது.

தற்போது இந்நபருடைய டுவிட்டர் கணக்கே இணையத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது.

மலேஷியாவுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையில் உத்தியோகபூர்வமான கைதிகள் பரிமாற்ற உடன்பாடு ஏதும் இல்லை.

ஆனாலும் தேசப் பாதுகாப்பு தொடர்பான இருதரப்பு ஒப்பந்தங்களின் கீழ் கஷ்காரி சவுதி அரேபியாவிடம் ஒப்படைக்கப்படலாம் என பெயர் குறிப்பிட விரும்பாத மலேஷிய அதிகாரிகள் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளனர்

source:BBC

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

ஆப்கானிஸ்தானில் இமாம்கள் பெண்களுக்கான வ ிதிகளை அறிவித்துள்ளனர்

பெண்கள் தொடர்பான புதிய கட்டுப்பாட்டு விதிகளுக்கு சமூக இணைய தளங்களில் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன

ஆப்கானிஸ்தானில் மதகுருமாரின் கவுன்சிலொன்று பெண்களுக்கென கடுமையான கட்டுப்பாடு விதிகளை அறிவித்துள்ளது.

ஆப்கன் அதிபர் ஹமீட் கர்சாயும் கூட இந்த புதிய விதிமுறைகளுக்கு அவரது அங்கீகாரத்தை வழங்கியிருந்தார்.

இந்த நிலையில் சமூக இணைய வலைத்தளங்களில் தோன்றியுள்ள அந்நாட்டு இளைஞர்கள், இந்த கட்டுப்பாடுகளையும் அதனை உருவாக்கிய மதகுருமாரையும் சாடி விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

‘இது மிக வன்முறைத் தனமானது’ என்று ஆப்கன் இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக் தளத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘அடுத்தபடியாக, அவர்கள் ஆப்கானிஸ்தானை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று கூறுவார்கள், பாதி ஆண்களுக்கு, அடுத்த பாதி பெண்களுக்கு’ என்று அந்த விமர்சனம் தொடர்கிறது.

நையாண்டியான விமர்சனங்கள்

பெண்களுக்கான புதிய கட்டுப்பாடுகளை நையாண்டி செய்யும் கேலிச் சித்தி்ரமொன்று

பெண்களுக்கான புதிய கட்டுப்பாடுகளை நையாண்டி செய்யும் கேலிச் சித்தி்ரம்

ஆப்கானிஸ்தானின் முக்கிய மதகுருமார்கள் கவுன்சில் பள்ளிக்கூடங்களிலும் வேலைத்தளங்களிலும் மற்ற எல்லா நாளாந்த நடவடிக்கைகளும் ஆண்களும் பெண்களும் பிரிந்திருக்க வேண்டும், அவர்களைக் ஒன்றுசேர விடக் கூடாது என்று அறிவித்ததை அடுத்து சமூக இணைய தளங்களில் இவ்வாறான ஆயிரக்கணக்கான கண்டனங்கள் வெளியாகியுள்ளன.

கவுன்சிலின் அறிவிப்பை அதிபர் கர்சாயும் அங்கீகரித்தை அடுத்தே மக்கள் தங்கள் ஆத்திரங்களை இவ்வாறு இணைய தளங்களில் கொட்டித்தீர்ப்பது இன்னும் தீவிரமடைந்துள்ளது.

ஆண்-பெண் வகுப்பு வாதத்துக்கு எதிராக அங்கு புதிய இணைய தளங்களும் இப்போது துவக்கப்பட்டு பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன.

இதேபோல இன்னும் சிலர் தமது கோபத்தை நையாண்டியாகவும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

காபூல்வாசி ஒருவர், ‘அரசாங்கத்தின் செலவினம் இன்னும் அதிகரிக்கும், இனி பெண்களுக்கு என்று தனியான நாடாளுமன்றம், தனியான பல்கலைக்கழகங்கள், வங்கிகள், அங்காடிகளை எல்லாம் அமைக்க வேண்டுமே’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இன்னும் கேலியாக, ‘ஆப்கன் பெண்களே, உங்கள் தந்தைமார், கணவன்மார் ,அல்லது உலமா கவுன்சிலின் அனுமதி இல்லாமல் எவரும் எனக்கு குறிப்புகளை போடவேண்டாம்’ என்று ஒருவர் டுவிட்டர் தளத்தில் எழுதியுள்ளார்.

பிபிசியின் பாரசீகமொழிச் சேவையிடம் காபூலில் இருந்து பேசிய இளம் மாணவி ஒருவர், ‘நாங்கள், இந்த அறிவிப்புகளைப் பொருட்படுத்தவும் போவதில்லை, கட்டுப்படவும் போவதில்லை’ என்று தெரிவித்தார்.

உலமா கவுன்சிலின் பரிந்துரைகளுக்கு ஆப்கன் அரசின் அங்கீகாரம் கிடைத்திருக்கின்றமை, தாலிபன் காலத்தை நோக்கி நாடு செல்வதையே காட்டுவதாக இளம் ஆப்கானியர்கள் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

தாலிபன்கள் அதிகாரத்தில் இருந்தபோது, ஆப்கனிலிருந்து இரானுக்கு தப்பியோடிய பெண் உரிமை ஆர்வலர் சாக்கியா நவா, ‘அரசின் நடவடிக்கை ஆப்கானிஸ்தானை மீண்டும் தாலிபன்கள் கட்டுப்படுத்தவே வழிவகுக்கும்’ என்று தெரிவித்தார்.

எதிர்காலம்?

ஆப்கன் நாடாளுமன்றம்

ஆப்கன் நாடாளுமன்றம்

இந்தப் புதிய பரிந்துரைகளை நாடாளுமன்றத்திலும் சிலர் கண்டித்துள்ளனர்.

ஆப்கன் அரசியலமைப்பையே மீறும் செயல் என்று எதிரணியின் துணைத் தலைவர் அஹ்மட் பேஹ்சாட் தெரிவித்துள்ளார்.

அங்குள்ள பிரபல கவிஞர் சமய் ஹமெத்,’ ‘நீ பெண்களுக்கு எதிரான கருத்துடையவன் என்றால், நீ உன் தாய்க்கு எதிரானவன் என்று தானே அர்த்தம்’, வாழ்க்கையில் எல்லாமே பெண்ணால் தானே சாத்தியம், ஆனால் தொடர்ந்து நீ அவளுக்கு எதிராகத் தானே குரல் எழுப்புகிறாய்’ என்று பதிவு செய்திருக்கிறார்.

இதேவேளை, ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை, இப்போது இந்த சமூக வலைத்தளங்களில் இந்தக் கருத்துக்களை வெளிப்படுத்திவருபவர்கள், அங்குள்ள இளம், படித்த, மேல்தட்டு வர்க்கத்தில் இருப்பவர்கள் தான்.

ஆனால், அங்கு இன்னொரு உலகம் மிகத் தீவிரமாக இயங்கி வருகிறது. ஆழமாக பாரம்பரிய நடைமுறைகளை பின்பற்றும், நம்பும் ஒரு ஆப்கானும் அங்கு இருக்கிறது என்பதை மறுத்துவிட முடியாது.

தெற்கு ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இஸ்லாமிய கோட்பாட்டுக் கல்வியை பயிலும் மாணவன் அப்துல் சலாம், ‘உலமா சபையின் பரிந்துரைகளை நான் ஆதரிக்கிறேன், ஏனென்றால் அவை இஸ்லாமிய சட்டத்துக்கு அமைவானவை’ என்று கூறுகின்றார்.

இனி, அடுத்தகட்டமாக இந்த பரிந்துரைகளுக்கு என்ன நடக்கும், புதிய சட்டமாக அமுலுக்கு வருமா என்பது தெளிவில்லை. ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் பற்றி சர்வதேச அரங்கில் பல கேள்விகளுக்கு இன்னும் பதில் காணப்பட வேண்டியிருக்கின்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

source:BBC

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

கன்னித்தன்மை பரிசோதனை

சமீரா இப்ராஹிம்

எகிப்தில் சென்ற ஆண்டு முபாரக் ஆட்சிக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டங்களின்போது கைதுசெய்யப்பட்ட பெண்களை கட்டாயப்படுத்தி அவர்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்தார் என்று குற்றம்சாட்டப்பட்ட இராணுவ மருத்துவர் ஒருவரை குற்றமற்றவர் என்று அந்நாட்டின் இராணுவ நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்து விடுதலை செய்துள்ளது.

பாதிக்கப்பட்டதாகக் கூறும் பெண்களில் ஒருவரான சமீரா இப்ராஹிம், இந்த மருத்துவருக்கு எதிராக குற்றச்சாட்டு தெரிவித்து வழக்கைத் தொடுத்திருந்தார்.

கடந்த மார்ச் மாதம் தான் தஹ்ரீர் சதுக்கத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டதன் பின்னர் தனது கன்னித்தன்மையை பரிசோதிக்கும் ஒரு சோதனைக்கு தன்னை வற்புறுத்தி உட்படவைத்தார்கள் என்று அவர் தெரிவித்தார்.

தனக்கு நேர்ந்தது தொடர்பில் சாட்சியளிக்க முன்வருவார்கள் என்று தான் நம்பிக்கொண்டிருந்தவர்கள் இராணுவ நீதிமன்றத்தில் கதையை மாற்றிச் சொல்லிவிட்டார்கள் என்று அப்பெண் கூறுகிறார்.

பெண்களுக்கு கட்டாயப்படுத்தி கன்னித்தன்மை பரிசோதனை செய்வதென்பதை எகிப்திய இராணுவம் ஒரு தண்டனை உத்தியாக பரவலாக பயன்படுத்தி வருகிறது என மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.

source:BBC

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized