Category Archives: பெண் பாதிரியார்

நன்றி: ஆனந்த விகடன்

இந்த வார விகடனில் 02-04-08 வெளிவந்த ஒரு கட்டுரை

சத்தமில்லாமல் ஒரு கிறிஸ்துவப் புரட்சி!

‘சபையில் பெண்கள் பேசக் கூடாது!’

(1.கொரி.14.34)

சென்னை, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருக்கும் செயின்ட் மேரிஸ் தேவாலயம். வெள்ளை அங்கியில் கைகளை உயர்த்தியபடி, ஆர்கனின் இசைப் பின்னணியில் பிரசங்கம் செய்கிறார் டெபோரா. கி.பி.1680ல் இருந்து ஆண் பாதிரியாரின் குரல் மட்டுமே கேட்டு வந்த அந்த ஆலயத்தில் இப்போது பெண் குரல் ஒலிக்கிறது.

சி.எஸ்.ஐ. என்று அழைக்கப்படும் தென்னிந்திய திருச்சபையில், இப்போது பெண் பாதிரியார்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். ‘சபையில் பெண்கள் பேசவே கூடாது!’, ‘பெண்கள் கற்றுக் கொடுக்கவோ, ஆண்களைக் கட்டுப்படுத்தவோ கூடாது’ என்கிற வழக்கம் எல்லாம் மறையத் தொடங்கிவிட்டன.

இந்தியாவில் தோன்றிய சமயங்கள் மட்டுமல்ல, உலக சமயங்கள் எதுவுமே பெண்களை கடவுளுக்கு மிக அருகில் விடவில்லை. ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவப் பிரிவில் கன்னியாஸ்திரீ கள் உண்டு; ஆனால், முழு உரிமை பெற்ற பெண் பாதிரியார்கள் கிடையாது. இந்தச் சூழலில்தான் தென்னிந்திய திருச்சபை பெண்களைப் பாதிரியார்களாக நியமித்து சத்தமில்லாமல் ஒரு புரட்சியை நடத்தியிருக்கிறது. முன்னாள் பிஷப் சுந்தர் கிளார்க்தான் இந்த மாற்றத்துக்குக் காரணமானவர்.

சூளை தேவாலயத்தில் ரெவரென்ட் இந்திரா, எண்ணூர் தேவாலயத்தில் ரெவ.லீலாபாய் மெர்ஸி, தண்டுறை குருசேகரத்தில் ரெவ.செலீன் சந்திரா என சென்னை பேராயத்தில் மட்டும் 25 பெண்கள் பாதிரியார்களாக இருக்கிறார்கள். பெண் பாதிரியார்கள் ஆசீர்வதிப்பதைப் பார்க்கவே அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது.

ஒரு பெண் பாதிரியார் ஆசீர்வதிப்பதை ஆண்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? பாதிரியார் ரெவ.டெபோரா பிரேம்ராஜிடம் கேட்டோம்.

”என் தந்தை, தாத்தா இருவருமே பாதிரியார்கள். என்னுடன் பிறந்தவர்கள் ஏழு பேர். அனைவருமே இறையியல் கல்வி படித்தோம். அதனால் இயல்பாகவே பாதிரியார் ஆகி இறைப்பணியில் ஈடுபட ஆசை ஏற்பட்டது. 1997ல் முழுப் பாதிரியாராகும் தகுதியை பேரா. அசரையா எனக்குக் கொடுத்தார். ‘வேடல்’ என்ற ஊரில் உதவி பாதிரியாராக முதலில் நியமிக்கப்பட்டேன். அங்கு என் கணவர் பாதிரியாராக இருந்தார்.

ஆண்களைவிடப் பெண்கள் தான் என்னை ஏற்றுக்கொள்ளத் தயக்கம் காட்டினார்கள். ஆனால், போகப்போகப் புரிந்துகொண்டார்கள். ஆண் பாதிரியார்களிடம் சொல்ல முடியாத விஷயங்களை என்னிடம் தயக்கமில்லாமல் சொல்ல முடியும் என்கிற நிலை, பெண் பாதிரியார்களின் தேவையை அனைவரும் உணர்ந்துகொள்ளச் செய்தது.

ஆரம்ப காலத்தில் இறையியல் கல்வி கற்ற பெண்களை உதவி ஆயர்கள் என்ற நிலையில்தான் வைத்திருந்தார்கள். இப்போது நிலைமை முழுக்க மாறிவிட்டது. ஓர் ஆலயத்தின் எல்லா பொறுப்புகளையும் பெண் பாதிரியார்களுக்குத் தந்துவிடுகிறார்கள். நாங்கள் ஆண் பாதிரியார்கள் அணியும் அங்கியைத்தான் அணிகிறோம்.

லண்டனில் உள்ள ‘ஸ்டோக் நியூக்டன்’ தேவாலயத்தில் என் பிரசங்கத்தைக் கேட்ட ஒருவர், ‘பெண்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைத்துக்கொண்டு இருந் தேன். உங்கள் உரையைக் கேட்ட பின்பு, என் கருத்தை மாற்றிக் கொண்டுவிட்டேன்’ என்று நெகிழ்ச்சியாகச் சொன்னார். இது பெண் சமூகத்துக்கே பெரு மையான விஷயம் என்றுதான் நான் கருதுகிறேன்.

பெண்களுக்கு இயல்பாக வரும் மாதவிலக்கை ‘தீட்டு’ என கிறிஸ்துவம் கருதுவது இல்லை. 12 ஆண்டுகள் ரத்தப்போக்குடன் இருந்த பெண்ணை இயேசு குணமாக்கி, ‘அவள் தொட்டால் தீட்டு ஏற்படாது’ என்று கூறியிருக்கிறார். ஞானமோ அல்லது வேறு எதுவோ ஆண்களுக்கு மட்டுமே சொந்தமானதல்ல. கடவுளின் படைப்பில் எல்லா உயிர்களும் சமமான தகுதி உடையவைதான்!” அழுத்தம்திருத்தமாகப் பேசி முடித்துவிட்டுத் தன் பிரசங்கத்தைத் தொடர்கிறார் டெபோரா.

இதமாகப் பரவ ஆரம்பிக்கிறது ஆர்கன் இசை!

நன்றி: ஆனந்த விகடன்

http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=13046#13046

பின்னூட்டமொன்றை இடுக

Filed under உலக சமயங்கள், கிறிஸ்தவ பெண்கள், பெண் பாதிரியார்