இடிமுழங்கும் குரலில் அசிம்முடன் ஒரு உரையாடல் தொடங்கியது.
இறை : அசிம், நான்தான் இறைவன். நீ என்னை அல்லாஹ் என்று சொல்கிறாய். நான் உலகைப்படைத்தவன். மிக்க பலசாலியும், எல்லாம் அறிந்தவனும், எங்கும் உள்ளவனும் ஆவேன்.
அசிம்: அல்லாஹூ அக்பர்!!! அல்லாஹூ அக்பர்!!! சுப்ஹான் அல்லாஹ். இறைவரே! நான் அசிம். உங்கள் உண்மையான அடிமை.
இறை: அசிம், நீ யாரென்று தெரியும். நான் இறைவன் இல்லையா?
அசிம்: மன்னிக்கவேண்டும் அல்லாஹ்! நான் இந்த கியாம நாளுக்காக இவ்வளவு நாட்கள் காத்திருந்தேன்.
இறை: ஆமாம். நீ காத்திருந்ததை அறிவேன். நீ எங்கே போவாய் என்று அறிய ஆவலாய் இருக்கிறாய் – என்னுடன் சுவனத்திற்கா, அல்லது மீளாத நரகத்துக்கா!
அசிம்: ஆமாம், சர்வ வல்லமை படைத்தவரே!, நான் சுவனத்திற்காக எவ்வளவு ஆவலாக காத்திருந்தேனோ, அது போல இப்போது தங்கள் முடிவை அறிந்துகொள்ள ஆவலாகத்தான் இருக்கிறேன். அல்லாஹ் அவர்களே!, நான் உங்களுக்கு என்னால் முடிந்த எல்லா விதத்திலும் சேவை செய்தேன், உங்கள் கட்டளைகளை விடாமல் பின்பற்றினேன்.
இறைவன்: என்னிடம் முடிவு இருக்கிறது. ஆனால், அதற்கு முன்பு சுவனத்தை பற்றி நீ தெரிந்துகொண்டதை சொல். நான் எல்லாம் அறிந்திருந்தாலும், உன் எண்ணங்களை அறிய முடிந்தாலும், உன்னுடன் இது குறித்து உரையாட விரும்புகிறேன்.
அசிம்: மிக்க நன்றி, அல்லாஹ்வே! நீங்கள் பரம கருணையானவர். சுவனத்தில் தங்கள் அருகாமையில் வசிக்கவும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், வெண்முத்து, பவளைத்தை போன்ற அழகிய, யாரும் தீண்டாத கன்னியர்களும் எனக்கு கிட்டும் என்பதை அறிவேன்.
இறைவன்: ஓகோ!, நரகத்தை பற்றி என்ன அறிவாய்?
அசிம்: அய்யோ! கொழுந்துவிட்டு எறியும் நரக நெருப்பில் வீழ்ந்து, கொதிக்கும் நீரில் கருக்கப்பட்டு, அதையே பருகுவது அல்லவா நரகத்தில். அதுதான் இறை மறுப்பாளர்களான காபிர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் இறக்கிய புத்தகத்தையும் தங்கள் கட்டளைகளையும் மறுத்தவர்கள்!
இறைவன்: சரி அசிம், நீ போகும் இடத்தை தெரிந்துகொள்வாய். தேவைப்பட்டால் என்னை நினைத்துக்கொள். சென்றுவா!
உடனை அசிம் பார்வையில் சில காட்சிகள் தோன்றின. ஆவலுடன் எதிர்பார்த்த தெளிந்த நீரோடைகளுக்கு பதில், கொதிக்கும் நீரும் நெருப்பும் துன்பமும் தென்பட்டன. அசிம் பதட்டப்பட்டான், கால்கள் நடுங்கின, பரிதாபமாக இறைவனை நினைத்துக்கொண்டான். இறைவன் மீண்டும் தோன்றினார்.
அசிம்: எல்லாம் வல்ல இறைவரே! நான் எங்கிருக்கிறேன்? சுவனத்தின் எந்த பகுதி இது? ஏன் சுவனம் நரகத்தின் காட்சிகள் போல தோன்றுகிறது?
இறைவன்: அசிம், நீ சொல்வது சரிதான். நீ நரகத்தில்தான் இருக்கிறாய். இந்த அனுபவங்களை உன் நம்பிக்கை மற்றும் கற்பனைக்கு ஏற்ப கொடுத்துள்ளேன். இந்த அனுபவம், நீ பூமியில் பலருக்கும் விவரித்த நரகத்தை போலவே தோன்றும்.
அசிம்: ஆனால், ஆனால், இறைவரே, நான் தங்கள் கட்டளைகள் எல்லாவற்றையும் கடைபிடித்தேன். தங்கள் புத்தகத்தில் அசையாத நம்பிக்கை வைத்து அவற்றில் கூறிய அனைத்தையும் செய்தேன்.
இறைவன்: இல்லை அசிம், இது உன் தவறான எண்ணம். நீ நான் சொன்னது போல செய்யவில்லை. நபிகளார் முகம்மது என்று நீ அழைக்கும் ஒரு மனிதர் சொன்னதுபோல செய்தாய்.
அசிம்: ஆனால், அவர் தங்களின் தூதர். நீங்கள் ஜிப்ரயில் மூலமாக அவருக்கு ஆணையிட்டீர்கள்.
இறைவன்: இது உனக்கு எப்படி தெரியும்? உன் கண்களால் பார்த்தாயா? நான் அப்படி உன்னிடம் சொன்னேனா?