குர்- ஆன் புத்தகம்
பிரிட்டனில் வாழும் முஸ்லிம் மாணவர்கள் குர்-ஆன் படிக்கச் செல்லும் மதராசா பாடசாலைகளில் அவர்கள் உடல்ரீதியாக துன்புறுத்தப்பட்டதற்கான 400 சம்பவங்கள் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாக பிபிசியின் புலனாய்வில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவாகியுள்ளன.
பிரிட்டனின் இரண்டாவது பெரிய சமூகமான முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த இரண்டரை லட்சம் பேர் தினந்தோறும் குர்- ஆன் பயில மதரசாக்களுக்கு செல்கின்றனர்.
தொடர்புடைய விடயங்கள்
இங்கே குழந்தைகளின் முதுகில் குத்தப்படுவதாகவும், அவர்களின் தலைமுடி ஆசிரியர்களால் பிடித்து இழுக்கப்பட்டதாகவும் சில நேரங்களில் மாணவர்கள் உதைபட்டதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
ஆனால் இந்த விடயம் குறித்து வெளியே வந்துள்ளது எள்முனையளவுதான் என்று வழக்குத் தெடுனர்கள் கூறுகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பல நேரங்களில் இது குறித்து நீதிமன்றங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று அழுத்தங்களை சந்திப்பதாக முன்னணி முஸ்லீம் பிரமுகர்கள் கூறுகின்றனர்.
அவசர விடயமாக இதனைக் கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மசூதிகள் மற்றும் இமாம்களுக்கான தேசிய ஆலோசனைக் குழுவின் தலைவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
பாலியல் புகார்
பிரிட்டனில் உள்ள இருநூறுக்கும் மேற்பட்ட உள்ளூராட்சி அமைப்புக்களிடம் இது குறித்த விபரங்களை பிபிசி கேட்டது. இதில் 191 அமைப்புக்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 421 புகார்கள் வந்துள்ளதாக தெரிவித்தன. ஆனால் இதில் பத்து வழக்குகள் மட்டுமே நீதிமன்றத்துக்கு சென்றுள்ளன. இதில் இரண்டு வழக்குகளில் மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது என்று பிபிசியின் விசாரணையில் தெரியவருகிறது.
உடல்ரீதியான துன்புறுத்தல்கள் தவிர பாலியல்ரீதியான துன்புறுத்தல்கள் தொடர்பாக 30 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இது தொடர்பாக நான்கு வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தும் ஒரு வழக்கில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அந்த வழக்கில் 12 வயதான சிறுவனை வன்புணர்ச்சி செய்தமைக்காகவும், 15 வயதான மற்றொறு சிறுவனை பாலியல் ரீதியாக தாக்கியதற்காகவும் ஸ்டோக் ஆன் டிரன்ட் என்ற இடத்தில் இமாமாக பணிபுரிந்த முகமது ஹனிவ் கான் என்ற நபருக்கு 16 ஆண்டுகால சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது.
source:BBC