14 March, 2012 13:45


மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?

Posted on மே21, 2010 by செங்கொடி

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 20

சவுதி அரேபியாவின் ஹிஜாஸ் மாநிலத்திலுள்ள மக்கா எனும் நகரம் இஸ்லாமியர்களுக்கு மிகப் புனிதமான ஒரு நகராகும். இந்த நகரில் தான் உலகெங்கிலுமுள்ள முஸ்லீம்கள் நோக்கித்தொழும் கா அபா என்னும் பள்ளிவாசல் இருக்கிறது. இறைவனை வணங்குவதற்கு மனிதர்கள் கட்டிய முதல் பள்ளிவாசல் இது என்பது முஸ்லீம்களின் நம்பிக்கை. இந்தப்பள்ளிவாசலை மையப்படுத்தித்தான் ஹஜ் எனும் கடமையும் முஸ்லீம்களிடம் விதிக்கப்பட்டிருக்கிறது. இது வெறுமனே புனிதமான பள்ளி மட்டுமல்ல, இது குரானை மெய்ப்பிக்கும் திட ஆதாரங்களில் ஒன்றாகும் என்றும் இஸ்லாமிய மதவாதிகள் கூறுகிறார்கள். எப்படி?

….அபயமளிக்கும் இந்த நகரத்தின் மீது சத்தியமாக. குரான் 95:3

வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும் பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்…… குரான் 2:125

….என் இறைவனே இந்த ஊரை நீ அச்சந்தீர்ந்ததாய் ஆக்குவாயாக…….என்று இபுறாஹீம் கூறியதை. குரான் 14:35

அன்றியும் சூழ உள்ள மனிதர்கள் இறாஞ்சிச்செல்லப்படும் நிலையில் நாம் பாதுகாப்பான புனிதத்தலமாக ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா?…. குரான் 29:67

……எவர் அதில் நுழைகிறாரோ அவர் பாதுகாப்பும் பெருகிறார்…… குரான் 3:97

இவை அந்நகர் குறித்தும் அந்தப் பள்ளி குறித்தும் குரான் கூறும் பாதுகாப்புகள். இதில் குறிப்பிடப்படும் பாதுகாப்பு எனும் சொல்லுக்கான பொருளில் தான் குரான் இறைவனின் வார்த்தை தான் என்பதற்கான சான்று இருப்பதாக மதவாதிகள் கூறுகிறார்கள். கா அபா அபய பூமி என்று அறிவிக்கப்பட்டு 14 நூற்றாண்டுகள் கடந்த பின்பும் எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும் அது இன்றளவும் அபய பூமியாகவே அமைந்துள்ளது. 14 நூற்றாண்டுகளாக எந்தத்தாக்குதலுக்கும் உள்ளாகாத வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயமாகவும் அது இருந்து வருகிறது. திருக்குர் ஆன் கூறியவாறு அது அபய பூமியாகவே நீடித்து வருவது திருக்குர் ஆன் இறைவனின் வார்த்தைகள் தாம் என்பதற்கு சான்றுகளாக அமைந்துள்ளது.

குரான் கொடுக்கப்பட்டு(!) 1400 ஆண்டுகள் ஆனாலும், குரான் குறிப்பிடும் அந்த பாதுகாப்பு குரானுக்கு பிறகான பாதுகாப்பை மட்டுமல்ல, வரலாற்றுக்கு முற்பட்டகாலம் தொட்டே அந்த இடம் பாதுகாக்கப்பட்டுவருவதாக குரான் குறிப்பிடுகிறது. அந்தப்பள்ளி யாரால் கட்டப்பட்டது என்பது தெரியாவிட்டாலும் அதை புதுப்பித்தது இபுறாஹீம். அதாவது முகம்மதுவுக்கு ஆயிரத்திற்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் இபுறாஹீம் (ஆப்ரஹாம்). எங்கிருக்கிறது என தெரியாமல் கிடந்த பள்ளியை அடையாளம் காட்டி இறைவன் இபுறாஹீம் மூலம் புதுப்பித்ததாக ஐதீகம். அன்றிலிருந்து அது பாதுகாப்பான இடமாக, புனிதத்தலமாக அறியப்பட்டு வந்திருக்கிறது. முகம்மது இஸ்லாம் எனும் புதிய மதத்தை அறிவிக்கும் முன்னரும் அம்மக்களால் அது புனிதமானதாகவும் பாதுகாப்பானதாகவும் கருதப்பட்டு வந்திருக்கிறது. பண்டைய வரலாறுகளில் மக்காரபா அல்லது மக்கோரபா என்று அறியப்படும் அந்த நகரம் தென் அரேபிய (யெமன்) மொழியில் மக்பர் என்ற சொல்லிருந்தோ, எத்தியோப்பிய மொழியில் மெக்வராப் என்ற சொல்லிலிருந்தோ வந்திருக்கும் என்கிறார்கள் வரலாற்றாய்வாளர்கள். அந்த இரண்டு சொற்களும் பாதுகாக்கப்பட்ட இடம் எனும் பொருளைக் கொண்டிருக்கின்றன (குரான் ஒரு சில இடங்களில் பக்கா என்று குறிப்பிடுகிறது). ஆக மிகப் பழமையான காலம் தொட்டே மக்களிடம் அந்த இடம் பாதுகாக்கப்பட்டது எனும் நம்பிக்கை நிலவி வந்திருக்கிறது.

ஆனால் ஏன் மதவாதிகள் குரானுக்குப் பின்னான 1400 ஆண்டுகளை மட்டும் குறிப்பிட வேண்டும்? ஏனென்றால் அந்த பாதுகாக்கப்பட்ட நகரத்தில் முகம்மது போர் நடத்தியிருக்கிறார். முகம்மது நடத்திய போரிலேயே அந்த நகரத்தின் பாதுகாப்பு கேள்விக்கு உட்படுத்தப்பட்டுவிட்டது. அபயமளிக்கும் அந்த நகரம் பற்றிய அல்லாவின் வாக்குறுதி முகம்மதாலேயே பொய்ப்பிக்கப்பட்டுவிட்டது. முகம்மதுவுக்கும் அது பாதுகாக்கப்பட்ட நகரம் என்பது தெரியும். அதனால் தான் முகம்மது அல்லா எனக்கு மட்டும் அனுமதி தந்திருக்கிறான் என்று சமாளிக்கிறார்.

………எச்சரிக்கை மக்காவில் யுத்தம் செய்வது எனக்கு முன்னர் எவருக்கும் அனுமதிக்கப்பட்டதில்லை, எனக்குப் பின்னர் எவருக்கும் அனுமதிக்கப்படப் போவதுமில்லை. எச்சரிக்கை……. புஹாரி ஹதீஸ் எண் 112.

ஆனால் முகம்மதுவுக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்படுவதாக குரான் வசனமோ, ஹதீஸ்களோ இருப்பதாக தெரியவில்லை. அதனால் தான் முற்காலத்தை தள்ளிவிட்டு முகம்மதுவுக்கு பிறகான 1400 ஆண்டுகளாக அது தாக்குதலில்லாமல் பாதுகாக்கப்படுவதாக வழக்கம்போல புழகமடைகிறார்கள்.

மக்காவையும் அதன் பள்ளிவாசலையும் இறைவன் பாதுகாப்பான் என்பதற்கு சான்று கூறுமுகமாகவும் குரானில் ஒரு கதை இருக்கிறது. ஐந்து வசனங்களைக்கொண்ட யானை எனும் அத்தியாயத்தில் இது கூறப்பட்டிருக்கிறது. யெமன் நாட்டின் அபிஸீனிய ஆளுனராக இருந்த அப்ரஹா எனும் மன்னன் மக்கவையும் பள்ளியையும் இடிக்க யானைப்படையுடன்(அல்லது யானைக்காரன் படை) வந்தபோது, அல்லா அந்த படைக்கு எதிராக பறவைகளை அனுப்ப அவை அந்தப்படைகளின் மேல் சுடப்பட்ட கற்களைப் போட அவர்கள் அழிந்தனர் என்று மக்கா காக்கப்பட்ட கதையை குரான் பேசுகிறது. பாலைவன நாட்டில் யானைப்படை இருந்ததா? மதவாதிகள் கூறுவது போல் அல்லா பறவை வடிவில் விமானங்களை அனுப்பி குண்டு போடச்செய்தானா என்பதையெல்லாம் ஒதுக்கிவைத்து விடலாம். 30 ஆண்டுகளுக்கு முன்பு மக்கா பள்ளி முற்றுகையிடப்பட்டபோது அல்லா படையையும் அனுப்பவில்லை பறவையையும் அனுப்பவில்லை. சவுதி அரசு தான் பிரான்ஸிலிருந்து ரகசிய தக்குதல் படையையும் நரம்பை செயலிழக்கச்செய்யும் ரசாயண குண்டுகளையும் வரவழைத்தது என்பது தான் உண்மை.

1979 நவம்பர் 20 ஆம் தேதி, மத அடிப்படையில் மட்டுமன்றி அரசியல் அடிப்படையிலும் அனைவராலும் ஊன்றிக் கவனிக்கப்பட்ட ஒரு நிகழ்வுக்கான தினம். ஜுஹைமான் அல் ஒத்தைபி, முகம்மது அப்துல்லா எனும் இருவரால் அவர்களால் அமைக்கப்பட்ட குழுவால் மக்காவின் கா அபா பள்ளிவாசல் முற்றுகையிடப்பட்டது. சவுதியில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டபிறகு வெளி நாடுகளிலிருந்து முஸ்லீமல்லாதவர்கள் இஸ்லாத்தின் புனித பூமியான சவுதியில் வந்திறங்குவதால் களங்கப்பட்டுப்போன புனிதத்தலத்தை சவுதி அரசிடமிருந்து மீட்கவேண்டும் எனும் அடிப்படையில் வஹ்ஹாபிய குழுவால் ரகசியமாக ஆயுதங்கள் எடுத்துச்செல்லப்பட்டு பள்ளிக்கு உள்ளிருந்து திடீரென பள்ளி தங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இது வெளியுலகிற்கு பரவாமல் இருக்க கடும் முயற்சிகளை அரசு எடுத்தபோதிலும் நியூயார்க் டைம்ஸ் நாளேடு மக்கா பள்ளி ஈரானியர்களால் கைப்பற்றப்பட்டதாக செய்தி வெளியிட்டது. அமெரிக்க அரசு (ஜிம்மி கார்ட்டர்) சவுதியின் பாதுகாப்புக்கு ஒரு போர்க்கப்பலை அனுப்பிவைத்தது. ஒரு வார காலத்திற்கும் அதிகமாக நடைபெற்ற இந்த முற்றுகைப் போருக்கு எதிராக சவுதி ராணுவம் கவச வாகனங்களுடன் போராடியது. முற்றுகையை முறியடிக்க முடியாமல் நாட்கள் நீளவே பிரான்ஸிடம் உதவி கோரப்பட்டது. அவர்கள் நவீன ஆயுதங்கள் குண்டுகளுடன், தாயிப் நகரில் சவுதி ராணுவத்திற்கு பயிற்சியளித்து, பின்னர் சுவர்களைத்துளையிட்டு நரம்புகளை செயலிழக்கச்செய்யும் குண்டுகளை வீசி ஒருவழியாக போர் முடிவுக்கு வந்தபோது முகம்மது அப்துல்லா போரில் இறந்து விட்டிருக்க ஜுஹைமானும் எஞ்சிய சிலரும் உயிருடன் பிடிக்கப்பட்டனர்.

இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், எனக்குப்பிறகு மக்காவில் போரிட யாருக்கும் அனுமதி வழங்கபடாது என்று அல்லாவின் பெயரால் முகம்மது கூறியிருக்க சவுதி அரசு எந்த அனுமதியின் பெயரில் போரிட்டது? அல்லாவின் அனுமதி இல்லாமல் போரிட முடியுமா? இதில் இரண்டு முடிவுகளுக்கு வரலாம். ஒன்று அல்லாவின் பெயரால் முகம்மது கூறியது பொய்யாக இருக்கவேண்டும், இரண்டு அல்லாவை மீறி சவுதி அரசு போரிட்டிருக்கவேண்டும். இரண்டில் ஒன்றுதான் உண்மையாக இருக்கமுடியும். எது உண்மை என்று முஸ்லீம்கள் சொல்வார்களா?

அப்ரஹா மன்னன் மக்காவின் மீது படையெடுத்த போது அதை அழித்த அல்லா இந்தப்போரில் இரண்டுமே இஸ்லாமியத்தரப்பாக இருந்ததால் எதை ஆதரிப்பது என்று தெரியாமல் நடுநிலை வகித்து விட்டதால் தான் பள்ளியை காக்க எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லையா? அல்லது குரானில் மக்காவின் பாதுகாப்பு குறித்து அறிவித்ததெல்லாம் வெறும் பகட்டுதானா?

மக்கா குறித்து இன்னொரு வேடிக்கயான செய்தியும் குரானில் இருக்கிறது.

…….ஒவ்வொரு வகை கனி வர்க்கமும் நம்மிடமிருந்துள்ள உணவாக கொண்டுவரப்படுகிறது……….. குரான் 28:57

அதாவது உலகிலுள்ள எல்லவகைப் பழங்களும் மக்காவிற்கு இறக்குமதி செய்து கொண்டுவரப்படுகின்றதாம். முன்னரே இப்படி நடக்கும் என்று அறிவித்திருப்பதால் இதுவும் குரான் இறைவனின் வேதம் என்பதற்கான சான்றாம். சவுதியின் பொருளாதாரத்தையே தலை கீழாக புரட்டிபோட்டு டாலர்களில் குளிக்கவைத்த எண்ணெய் வளம் குறித்து மூச்சு கூட விடாத குரான் பழங்களைப் பற்றி பேசுவது வேடிக்கையானது தானே.

ரசாயன காப்புக் கவசங்களுடன் சவுதி ராணுவம்

அன்றைய மக்கா பள்ளி

ஜுஹைமான் அல் ஒத்தைபி

முகம்மது அப்துல்லாஹ்

உயிருடன் பிடிபட்டவர்கள்

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

19.

சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?

18. நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்

17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை
16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்
15. விந்து குறித்த குரானின் விந்தைகள்
14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்
13. கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்
12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.
11. குரானின் மலையியல் மயக்கங்கள்
10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்
9. பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?
8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்
7. குரான் கூறுவது அறிவியலாகுமா?
6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.
5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.
4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?
3. குரானின் சவாலுக்கு பதில்
2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்
1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்
இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….

source:senkodi

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s