கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்


இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 16


குரானின் அறிவியல் குறித்த உரையாடல்களில் கருவறை அறிவியலை தவிர்த்துவிட முடியாது. அவ்வளவு விரிவான அளவில் கருவறை குறித்து மதவாதிகள் விதந்தோதியிருக்கிறார்கள். இன்றைய நுண்ணோக்கிகள் நுழைந்து பார்க்கவியலா அறிவியல் கூறுகளை எல்லாம் குரானின் வசனங்கள் படம்பிடித்து காட்டுவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். கருவரையையும் குழந்தை உருவாவதையும் பற்றி குரான் நிறைய வசனங்களில் குறிப்பிடுகிறது.

அலக் என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். குரான் 96:2

சொட்டுச்சொட்டாக ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா?, பின்னர் அவன் அலக் என்ற நிலையில் இருந்தான், அப்பால் படைத்து செவ்வையாக்கினான். பின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான். குரான் 75:37-39

……….உங்கள் தாய்மார்களின் வயிறுகளில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களை படைக்கிறான்……… குரான் 39:6

நிச்சயமாக நாம் மனிதரை களிமண்ணிலிருந்துள்ள சத்திலிருந்து படைத்தோம். பின்னர் நாம் அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத்துளியாக்கி வைத்தோம். பின்னர் அந்த இந்திரியத்துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம். பின்னர் அந்த அலக் கை ஒரு தசைப்பிண்டமாக ஆக்கினோம். பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம். பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம். பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாகச் செய்தோம்……… குரான் 23:12-14

……..இன்னும் அவன் உங்களுக்கு பார்வைப் புலன்களையும், செவிப் புலன்களையும், இருதயங்களையும் அமைத்தான்………. குரான் 32:9

ஒவ்வொரு பெண்ணும் சுமந்து கொண்டிருப்பதையும், கர்ப்பப்பைகள் சுருங்கிக் குறைவதையும், அவை விரிந்து அதிகரிப்பதையும் அல்லாஹ் நன்கு அறிவான். ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கிறது. குரான் 13:8

இவ்வளவு வசனங்கள் கர்ப்பப்பை குறித்தும் கரு பற்றியும் குரானில் பேசப்படுகின்றன. இந்த வசனங்களில் இருக்கும் கருத்துகளை தொகுத்துப்பார்த்தால் கரு, கருத்தரிப்பது குறித்து சாதாரணமாக ஒரு மனிதனின் பார்வையை விடுத்து மேம்பட்ட அறிவியல் கருத்துகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. சொட்டுச்சொட்டாக ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா?, ஆண், பெண் என்ற இரு ஜோடி, தசைப்பிண்டமாக, எலும்புகளாக, மாமிசமாக ஆக்குவது, பார்வைப் புலன்களும், செவிப் புலன்களும், இருதயங்களும் இருப்பது என்பதெல்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன் எந்த மனிதனும் அறிந்திராதவைகளா? இந்த வசனங்களுக்குள் அப்படி என்ன அறிவியல் இருக்கிறது? மதவாதிகளின் பார்வையினூடாகவே பார்ப்போம்.

முதலில் அலக் எனும் வார்த்தையை எடுத்துக்கொள்வோம். அநேக மொழிபெயர்ப்புகளில் இந்த அலக் எனும் அரபு வார்த்தை மொழிபெயர்க்கப்படாமல் அப்படியே பயன்படுத்தப்படுகிறது. பிஜே அவர்களின் மொழிபெயர்ப்பில் கருவுற்ற சினைமுட்டை என்று மொழிபெயர்த்திருக்கிறார். பல்நாட்டு அறிஞர்களும் சரிபார்க்கும் வாய்ப்பை பெற்றதாக நண்பர்கள் கருதும் யூசுப் அலி என்பவரின் ஆங்கில மொழிபெயர்ப்பில் உறைந்த இரத்தக்கட்டி (clot of congealed blood) என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஜாகிர் நாயக் என்பவர் இந்தச்சொல்லுக்கு அட்டைப்பூச்சி, தொங்கும் பொருள் என்றெல்லாம் விளக்கங்கள் சொல்கிறார். ஆக அலக் எனும் இந்த அரபுச்சொல்லுக்கு எதுதான் சரியான பொருள்? பொதுவாக பழைய மொழிபெயர்ப்புகளில் இரத்தக்கட்டி என்றுதான் மொழிபெயர்த்திருக்கிறார்கள். கர்ப்பப்பையில் கருவானது இரத்தக்கட்டியாக இருக்கிறதா? எனும் அறிவியல் ரீதியான கேள்வி எழுந்ததும் அதன் பொருள் அட்டைப்பூச்சி, தொங்கும் பொருள் என்றெல்லாம் பயணப்பட்டு நவீன அறிவியலை உள்வாங்கிக்கொண்டு தற்போது கருவுற்ற சினைமுட்டையாக ஆகியிருக்கிறது. இது தான் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லப்பட்ட அறிவியலின் லட்சணம்.

குரான் 75:37-39 வசனங்களில் சொல்லப்படும் கருவின் வளர்ச்சி குறித்து தோராயமான பிம்பம் காட்டப்படுகிறது. இதுவே இன்னும் சற்று விரிவாக குரான் 23:12-14 வசனங்களில் சொல்லப்படுகிறது. பெண்ணின் உடலினுள் செலுத்தப்படும் விந்து தான் குழந்தையாக மாறுகிறது என்று அறிந்துகொண்டபின் அது எப்படி குழந்தையாக உருமாறுகிறது சிந்தித்த ஒரு மனிதனின் கற்பனைதான் இந்தக் காட்சிகள் இரத்தம் தான் விந்தாக உருமாறுகிறது எனும் நினைப்பில் மீண்டும் விந்து உறைந்து இரத்தக்கட்டியாக மாறுகிறது பின்னர் அது சதைக்கட்டியாக மாறுகிறது பின்னர் எலும்பும் அதன் பின்னர் மாமிசமாகவும் மாறி பின்பு குழந்தையாக வெளிவருகிறது. இப்படித்தான் சாதாரணமாக எந்த மனிதனின் கற்பனையும் 1400 ஆண்டுகளுக்கு முன் இருந்திருக்கும், இப்படித்தான் முகம்மதுவும் உருவகித்திருக்கிறார். ஆனால், இன்று உருப்பெருக்கிகள் மூலம் கர்ப்பப்பையின் உள்ளே நடக்கும் மாற்றங்களை பதிவு செய்த பின்பு, ஆகா பாருங்கள் இதை அன்றே முகம்மது சொல்லிவிட்டார், படிக்காதவரான அவரால் எப்படி சொல்லமுடிந்தது? எனவே இது எல்லாவற்றையும் மிகைத்த அந்த சக்தியின் கருணைதான் இது என்று எடுத்துவிடுகிறார்கள்.

இதில் அறிவியலோடு ஒப்பிடும் படிநிலைகள் என்று எதுவுமில்லை என்பது ஒரு புறமிருந்தாலும், பின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான் எனும் வசனமும், பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாகச் செய்தோம் எனும் வசனமும் ஒரு செய்தியை நமக்கு உணர்த்துகிறது. அது என்னவென்றால், கரு உருவாகி ஆரம்பக்கட்ட வளர்ச்சிகள் அடைந்தபின்பு குறிப்பிட்ட ஒரு கட்டத்தில் தான் அந்தக்கரு ஆணா? பெண்ணா? என்பது தீர்மானிக்கப்படுகிறது என்பது தான். ஆனால் அறிவியல் இதை திட்டமாக மறுக்கிறது. உடலுறவு முடிந்து ஆணின் உயிரனுவானது பெண்ணின் சினை முட்டையை எந்தக்கணத்தில் துளைத்து நுழைகிறதோ அந்தக்கணத்திலேயே கருவானது ஆணா? பெண்ணா? என்பது தீர்மானமாகிவிடுகிறது. அதுமட்டுமன்றி அனைத்து விசயங்களும் தோலின் நிறம், அங்கங்களின் அமைப்பு, உயரமா? குள்ளமா? என்பன போன்ற அனைத்து செய்திகளும் டிஎன்ஏ ஏணிகள் மூலம் கருவுக்கு கடத்தப்பட்டு இதன் அடிப்படையிலேயே கருவின் வளர்ச்சி நடைபெறுகிறது.

குரானின் கருவளர்ச்சி நிலைகளோடு அறிவியலை ஒப்பிட்டால் அதுவும் ஒப்பிடக்கூடிய அளவில் இல்லை. அதிலும் முதலில் தசைப்பிண்டம் என்றும் பின்னர் மாமிசம் என்றும் இரண்டு வகையாக குறிப்பிடுவதும் பொருத்தமாக இல்லை. அறிவியல் கருவளர்ச்சியை பின்வருமாறு வகைப்படுத்துகிறது. இரண்டாவது மாதத்தில் ஆண் பெண் இன உறுப்புகள், மூன்றாவது மாதம் ஜீரண உறுப்புகள் எலும்புகள், நான்காவது மாதம் தோல் சுமாரான வடிவம் கண்கள் விரல்கள், ஐந்தாம் மாதம் தலைமுடி நகம் பல்முளைகள் முதுகெலும்பு சீராதல், ஆறாவது மாதம் கண்களில் பார்வை நாவில் ருசி, ஏழாவது மாதம் மூளை சீரடைதல் நரம்புகள் என்று தொடர்ச்சியான வளர்ச்சியில் எட்டு ஒன்பதாவது மாதங்களில் எல்லா உறுப்புகளுமே சீரான இயக்கத்திற்கு வந்து இறுதியில் வெளியேறுகிறது

அடுத்து குரான் 32:9 வசனத்தில் ஒரு வரிசை கூறப்படுகிறது. முதலில் பார்வை பின்னர் செவி அதன்பின்னர் இதயம் இந்த வரிசையில் உறுப்புகள் படைக்கப்படுவதாக அந்த வசனம் சுட்டுகிறது. இதில் முதல் இரண்டு புலன்களை மட்டும் எடுத்துக்கொண்டு பார்த்தீர்களா இன்றைய அறிவிலான முதலில் கண்ணும் பின்னர் காதும் உருவாகிறது என்பதை குரான் அன்றே சொல்லிவிட்டது என்கிறார்கள். ஆனால் இதில் மூன்றாவதாக வரும் இதயத்தை விட்டுவிட்டார்கள். ஏனென்றால் இதயமானது கண், காதுக்கு முன்னரே உருவாகிவிடுகிறது. ஆனால் குரானோ கண் காதுக்கு பின்னர் மூன்றாவதாக இதயத்தை குறிப்பிடுகிறது. இந்த வசனத்தில் இன்னொரு செய்தியும் இருக்கிறது. அவன் உங்களுக்கு பார்வைப் புலன்களையும், செவிப் புலன்களையும், இருதயங்களையும் அமைத்தான் என்கிறது அந்த வசனம். அதாவது பார்வைப் புலன்களையும் என்றால் கண்கள் இரண்டு, செவிப் புலன்களையும் என்றால் காதுகள் இரண்டு இந்த வரிசையில் அடுத்து இதயங்களையும் என்று குறிப்பிடுகிறது குரான். என்றால் இரண்டு இதயம் என்று குறிப்பிடுகிறதா குரான்? இந்த குழப்பங்களிலிருந்து விடுபடவேண்டும் என்று தான் அண்மைய மொழிபெயர்ப்புகளில் உள்ளங்கள் என்று மொழிபெயர்த்து விட்டார்கள்.

அடுத்து குரான் 13:8 வசனத்தில் ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கிறது என்று ஒரு வரி வருகிறது. அதாவது மனிதனுக்கு கர்ப்ப காலம் பத்து மாதங்கள் என்றால் ஏனைய விலங்குகளுக்கும் இதே காலஅளவு இருப்பதில்லை வெவ்வேறு கால அளவுகளில் அவை பிரசவிக்கின்றன. இதைதான் அந்த வரியில் முகம்மது குறிப்பிடுகிறார். ஆனால் இன்று அந்த வரிகளுக்கு புதிய பொருளை கற்பிக்கிறார்கள். எப்படி என்றால் மனித உடல் அன்னியப் பொருட்களை உடலுக்குள் அனுமதிப்பதில்லை. கண்களில் ஒரு தூசு விழுந்துவிட்டால் கண்கள் ஒரு உருத்துதலை ஏற்படுத்தி கண்ணீரை சுரந்து அதை வெளியேற்றுவதற்கு முயற்சிக்கிறது. மூச்சுக் குழாயில் ஒரு துரும்பு சென்றுவிட்டால் தும்மலின் மூலம் அதை வெளியேற்ற முயற்சிக்கிறது. ஆனால் ஒரு அன்னியப்பொருளான கருவை பத்து மாதங்களாய் உடலுக்குள் தங்க அனுமதித்து அதன் பின்பே வெளியேற்ற முயற்சிக்கிறது. இன்றைய அறிவியலான இதைத்தான் அந்த வசனம் குறிப்பிடுகிறது என்கிறார்கள். இது முழு உண்மையல்ல. எப்படியென்றால் நமது உடல் எல்லா அன்னியப் பொருட்களையும் எதிர்ப்பதில்லை. உடலுக்கு தீங்கு விளைவிப்பதை மட்டும் தான் எதிர்க்கின்றன. நாம் உண்ணும் உணவு உடலுக்கு அன்னியப் பொருள் தான் ஆனால் அதிலுருந்து தான் தனக்கு தேவையான சக்தியை உடல் பெற்றுக்கொள்கிறது. காற்று உடலுக்கு அன்னியப் பொருள்தான் ஆனால் அதிலிருந்து தான் தனக்கு தேவையான ஆக்ஸிஜனை உடல் பெற்றுக்கொள்கிறது. உடல்நலம் பாதிக்கப்பட்டால் வெளியிலிருந்து அன்னியப்பொருட்களான மருந்துகள் உட்செலுத்தப்படுகின்றன, உடல் அவற்றை ஏற்றுக்கொள்கிறது. செயற்கை உறுப்புகள் பொருத்தப்படுகின்றன அவைகளையும் உடல் சில நிபந்தனைகளுக்குட்பட்டு ஏற்றுக்கொள்கிறது. ஒவ்வாமை என்றொரு நோய் உண்டு, உடலுக்கு தீங்கு செய்யாத பொருட்களைக் கூட தீங்கு செய்பவை என்று தவறாக கருதிக்கொண்டு உடல் எதிர்ப்பதற்குத்தான் ஒவ்வாமை என்று பெயர். ஆக உடல் தீங்கு செய்யும் அன்னியப் பொருட்களை மட்டுமே எதிர்க்கிறது. அந்த வகையில் கரு ஒரு அன்னியப் பொருளும் அல்ல. ஒரே மனித இனத்தின் எதிர்பாலின் உயிரணுவை தன்னுடைய அண்டத்துடன் இணைத்துக்கொள்வதை அன்னியப் பொருள் என்று எப்படி வகைப்படுத்த முடியும்?

அடுத்து குரான் 39:6 வசனத்தில் சொல்லப்படும் மூன்று இருள்கள் என்பது எதை குறித்து முகம்மது சொன்னார் என்பது தெரியவில்லை (தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிடலாம்) ஆனால் அந்த மூன்று இருள் என்பது தாயின் அடிவயிறு, கர்ப்பப்பையின் சுவர், குழந்தையை சுற்றி இருக்கும் சவ்வுப்படலம் என்று அறிவியல் விளக்கம் அளிக்கிறார்கள். ஆனால் முகம்மது அந்த மூன்று இருள்கள் என்பதை இப்படி அறிவியல் பூர்வமாக கூறவில்லை என்பதை உறுதியாக கூறமுடியும். எப்படி என்றால் இதை அறிவியல் விளக்கமறிந்து கூறியவர் இதே வசனத்தில் அவன் உங்களுக்காக கால்நடைகளிலிருந்து எட்டு ஜோடி ஜோடியாக படைத்தான் எனும் பொருளற்ற வசனத்தை சொல்லியிருக்க முடியாது. கால்நடைகளில் எட்டு ஜோடிகள் தான் இருக்கின்றனவா? ஆக ஒரே வசனத்தின் மேல் வரி அர்த்தமற்றதாகவும், கீழ் வரி அறிவியல் பூர்வமாகவும் ஒருவர் கூறியிருக்க முடியாதல்லவா?

ஆக குரானின் வசனங்களில் அறிவியல் உண்மைகள் புதைந்து கிடப்பதாக கூறப்படுவதெல்லாம் வலிந்து ஏற்றப்படும் புனைபுரட்டுக்கள் என்பதை தவிர வேறொன்றுமில்லை.

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்
13. கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்
12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.
11. குரானின் மலையியல் மயக்கங்கள்
10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்.
9. பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?
8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

7. குரான் கூறுவது அறிவியலாகுமா?

6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.
5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.
4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?
3. குரானின் சவாலுக்கு பதில்
2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்.
1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்
இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே…..

source:senkodi

Advertisements

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s