அப்துல் கலாமை அவமதித்த அமெரிக்கா கேட்டத ு மன்னிப்பு


Tamil_News_large_348869.jpg

புதுடில்லி:பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் அமெரிக்க அதிகாரிகள், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை மீண்டும் அவமதித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலையத்தில், கலாமின் கோட், ஷூ ஆகியவற்றை கழற்றும்படி கூறி, அமெரிக்க அதிகாரிகள், அத்துமீறி நடந்து கொண்டதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. "இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தால், இந்தியா வரும் அமெரிக்க வி.ஐ.பி.,களிடம், நாங்களும் அதுபோல் நடக்க வேண்டியிருக்கும்’ என, எச்சரித்துள்ளது. இதையடுத்து, அமெரிக்க நிர்வாகம் மன்னிப்பு கேட்டது.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், கடந்த 2009ல் அமெரிக்கா செல்வதற்காக டில்லி விமான நிலையத்துக்கு சென்றபோது, அங்கிருந்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள், சோதனை என்ற பெயரில் அவரை அவமதித்தனர். இந்த சம்பவம், அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது, மீண்டும் அதுபோன்ற ஒரு அவமதிப்பு சம்பவம், கலாமுக்கு நடந்துள்ளது.கடந்த செப்டம்பரில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்ற அப்துல் கலாம், 29ம் தேதி, இந்தியாவுக்கு திரும்ப திட்டமிட்டிருந்தார். நியூயார்க்கில் உள்ள ஜான் கென்னடி விமான நிலையத்துக்கு வந்தார். விமானத்தில் ஏறுவதற்கு முன், அவரிடம் சோதனை நடத்தப்பட்டது. இதன்பின் அவர், டில்லி செல்லும் ஏர்-இந்தியா விமானத்தில் ஏறி அமர்ந்தார்.

விமானம் புறப்படுவதற்கு முன்பாக, விமானத்திற்குள் வந்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள்,"உங்களை சோதனையிட வேண்டும். உங்களின் கோட், ஷூ ஆகியவற்றை கழற்றிக் கொடுங்கள். அதில் வெடிபொருட்கள் இருக்கின்றனவா என, சோதனையிட வேண்டும்’ என்றனர்.

இதற்கு, அங்கு இருந்த ஏர்-இந்தியா அதிகாரிகளும், மற்றவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். "அவர், முன்னாள் ஜனாதிபதி. விமான நிலையங்களில் சோதனையிட, அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

அமெரிக்க அதிகாரிகள், இதைப் பொருட்படுத்தவில்லை. கலாமும், இதை பெரிதுபடுத்தாமல், தன் கோட் மற்றும் ஷூக்களை கழற்றி, அவர்களிடம் கொடுத்தார்.அவற்றை சோதனையிட்டு விட்டு, சில நிமிடங்களுக்கு பின், கலாமிடம் திருப்பி அளித்தனர். ஆனாலும், இந்த சம்பவம் குறித்து, அப்துல் கலாம் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், ஏர்-இந்தியா அதிகாரிகள் மூலமாக, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்து, நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பதிலடி கொடுப்போம்:இந்த சம்பவத்துக்கு, மத்திய வெளியுறவு அமைச்சகம், கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா, அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி நிருபமா ராவை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இந்த பிரச்னையை உடனடியாக, அமெரிக்க அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும்படி, நிருபமா ராவிடம் வலியுறுத்தியுள்ளார். மேலும், விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் ஏர்-இந்தியா அதிகாரிகளிடம், இந்த சம்பவம் தொடர்பாக விவரமான அறிக்கை அளிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார்.

வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில்,"பாதுகாப்பு சோதனை என்ற பெயரில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவமதிக்கப்பட்டதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. விமான நிலையங்களில், சோதனையிடுவதில் விலக்கு அளிக்கப்பட்ட நபர்களின் பட்டியலில், அவரின் பெயரும் உள்ளது. அதையும் மீறி, அவருக்கு இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தொடருமானால், இந்தியாவுக்கு வரும், அமெரிக்க வி.ஐ.பி.,களிடம், நாங்களும் இதுபோல் நடந்து கொள்ள வேண்டியிருக்கும்’ என்றனர்.

மன்னிப்பு கேட்ட அமெரிக்கா:அப்துல் கலாம் அவமதிக்கப்பட்ட சம்பவத்துக்கு, இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதை அடுத்து, அமெரிக்க அரசு, இதற்காக மன்னிப்பு கேட்டுள்ளது. அப்துல் கலாம் மற்றும் இந்திய அரசுக்கு, அமெரிக்க தூதரகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:நியூயார்க் விமான நிலையத்தில் நடந்த சம்பவத்துக்காக, வருந்துகிறோம். வி.ஐ.பி.,களுக்கான பாதுகாப்பு சோதனை விதிமுறைகளை, பாதுகாப்பு அதிகாரிகள் உரிய முறையில் பின்பற்றாததன் காரணமாக, இவ்வாறு நடந்து விட்டது. எதிர்காலத்தில், இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருப்பதற்கான, அனைத்து நடவடிக்கைகளையும் அமெரிக்க அரசு மேற்கொள்ளும்.இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா கண்டனம் : பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஷாநவாஸ் உசேன் கூறியதாவது:முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு, அமெரிக்க விமான நிலையத்தில் நடந்த அவமதிப்பை, பொறுத்துக் கொள்ள முடியாது. இது மிகவும் கண்டனத்துக்குரிய நடவடிக்கை. கலாம், அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளால், அவமதிப்புக்கு உள்ளாவது, இது முதல் முறையல்ல. ஏற்கனவே ஒருமுறை, இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் உறுதி செய்ய, மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு உசேன் கூறினார்.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s