தாய்ப்பால்: உணர்ச்சிகரமான ஓர் உண்மைக் கத ை


‘தாய்ப் பாலுக்கு ஈடு இணையில்லை’ என்பது உலகறிந்த விஷயமே! அதற்கு மகுடம் சூட்டுவதுபோல… பல தாய்களிடம் இருந்து பெறப்பட்ட பால் மூலமாக… ஒரு குழந்தையை மறுபிறவி எடுக்க வைத்து, தாய்ப்பாலின் பெருமையை மேலும் ஒரு படி உயர்த்திப் பிடித்திருக்கின்றனர் திண்டுக்கல், அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவக் குழுவினர்!

திண்டுக்கல் மாவட்டம், தவசிமேடை கிராமத்தைச் சேர்ந்தவர் நீதிமேரி. கூலி வேலை செய்துவரும் இவருக்கு, கொசவபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. ஆஷா என்று பெயரிடப்பட்ட அந்தக் குழந்தை, தாய்ப்பால் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகளால் பிறந்ததிலிருந்தே நோய்களால் தாக்கப்பட்டு, சாவின் விளிம்புக்கே சென்றுவிட… கடைசிக் கட்டத்தில் ஆஷாவைக் காப்பாற்றியிருக்கிறது, தாய்(களின்) பால்!

ஏழு மாதக் குழந்தை ஆஷாவை கைகளுக்குள் அடைக்கலப்படுத்தியபடி அமர்ந்திருந்த நீதிமேரி, ”தாய்ப்பால் போதாதால, ஆறாவது நாள்ல இருந்தே புட்டிப்பால் கொடுக்க ஆரம்பிச்சுட்டோம். நாப்பத்தி ரெண்டாவது நாள்ல வயித்துப் போக்கு ஆரம்பிக்க, திண்டுக்கல், கெவருமென்ட் ஆஸ்பத்திரியில சேர்த்தோம். ரத்தம், குளுகோஸ்னு ஏத்தியும் ஒண்ணும் சரியாகல. என்ன ஆகப்போகுதோனு தவியா தவிச்சுக்கிடந்தேன்.

என் நிலையைப் பார்த்து ரொம்பவும் பரிதாபப்பட்ட டாக்டர் ஜெயின்லால் பிரகாஷ், ‘பக்கத்து பெட்கள்ல குழந்தை பெத்திருந்தவங்ககிட்ட இருந்து தாய்ப்பாலை வாங்கிக் கொடுக்கலாம்’னு சொன்னார். இப்போ குழந்தை உயிர் பிழைச்சுக் கிடக்கறதுக்கு அவர்தான் முக்கிய காரணம்! வெவரமெல்லாம் அவர்கிட்டயே கேட்டுக்கோங்க” என்றார் கண்கள் கலங்கியபடி.

அரசு மருத்துவமனையின் குழந்தைகள் நல தலைமை மருத்துவர் ஜெயின்லால் பிரகாஷிடம் பேசினோம். ”நீதிமேரி, ரொம்ப கஷ்டப்படற குடும்பம். ஊட்டம் பத்தாததால அவங்களுக்கு போதுமான அளவு தாய்ப்பால் சுரக்கல. குழந்தைக்கு அடிக்கடி வயித்துப் போக்கும் ஏற்பட, குழந்தை பத்தின கவலையால தாய்ப்பால் ரொம்பவும் சுண்டிப் போச்சு. தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஆகவே… நோய்க்கிருமிகளோட தாக்கம் அதிகமாகி, ரத்தத்துல கலந்து ‘செப்டிமீசியா ஸ்டேஜு’க்கு வந்துடுச்சு குழந்தை. இறுதியா, ‘மராஸ்மிக் ஸ்டேஜ்’ல, உடம்புல உயிர் ஒட்டிக்கிட்டு இருந்ததுனுதான் சொல்லணும்.

குளுக்கோஸ், ரத்தம் எல்லாம் ஏத்தினோம்… ஏகப்பட்ட மருந்துகளையும் கொடுத்தோம். பொதுவா அரசு மருத்துவமனையில வெளியில இருந்து மருந்துகளை வாங்கிக் கொடுக்கக் கூடாது. இந்தக் குழந்தைக்காக மேலிடத்துல ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கி, அரசு செலவுலேயே வெளியில இருந்து மருந்துகள வாங்கிக் கொடுத்தோம். ஆனாலும், குழந்தையோட உடம்புல முன்னேற்றம் இல்லை. இறுதியா, அந்த சிசுவை எப்படியும் காப்பாத்தியே ஆகணும்ங்கற பொறுப்போட ஜூனியர் டாக்டர்ஸ், ஸ்டாஃப் நர்ஸ்கள், டிரெய்னிங் நர்ஸ்கள்னு எங்க டீம் போட்ட மீட்டிங்லதன்… ‘தாய்ப்பாலை இரவல் வாங்கிக் கொடுக்கலாம்’ங்கற முடிவுக்கு வந்தோம்.

வார்டுல குழந்தை பெற்றிருந்த எல்லா தாய்மார்கள்கிட்டயும் குழந்தை ஆஷாவோட நிலையையும், தாய்ப்பாலோட மகத்துவத்தையும் எடுத்துச் சொல்லி புரிய வெச்சோம். சிசேரியன் பண்ணினவங்க, குழந்தை சரியா பால் குடிக்காம இருக்கிற தாய்மார்கள், போதுமான அளவைவிட அதிகமா பால் சுரக்கிற தாய்மார்கள்னு எல்லாரும் சந்தோஷமா பாலை எடுத்துத் தர ஆரம்பிச்சாங்க. ரெண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை தாய்ப்பாலை கொடுக்க ஆரம்பிச்சோம். நாலஞ்சு நாள்லயே குழந்தை தேறிடுச்சு! பல தாய்களோட பால் மூலமா… வைட்டமின், புரோட்டீன்னு எல்லாச் சத்தும் கிடைச்சதுல… இப்ப முழுசா குணமாகி நல்ல ஆரோக்கியமா இருக்கு குழந்தை” என்று நிம்மதி பெருமூச்சு விட்டபடி சொன்ன டாக்டர் ஜெயின்லால் பிரகாஷ், நிறைவாகச் சொன்னது… ஒவ்வொரு பெண்ணும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம். அது…

”இந்தக் குழந்தை பிழைச்ச விஷயத்தை ‘மிராக்கிள் ஆஃப் பிரெஸ்ட் மில்க்’னுதான் சொல்லணும். ‘தாய்ப்பால், இத்தனை சக்தி வாய்ந்ததா!’னு மத்த தாய்மார்கள் எல்லாம் அதோட அற்புதத்தை நேரடியா பார்த்து முழுமையா உணர்ந்தாங்க. இப்போ இருக்கிற இளம் தாய்மார்களும், அமிர்தமா இருக்கற தாய்ப்பாலோட மகிமையைப் புரிஞ்சு, உயிர் காக்கும் அந்த விலையில்லாத மருந்தை வீணாக்காம கொடுத்து, குழந்தைகள நோயில்லாமலும், புத்திசாலியாவும் வளர்க்கணும்!”

source:vikatan

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s