Daily Archives: ஜூலை 8, 2011

”அந்த” மாதிரி பெண்கள்

தமிழகத்திலும் தலைதூக்குமா தாலிபானிஸம்?!……

ஜூலை 1-ம் தேதி… காலை நேரம். நாகை மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்புகளின் முக்கியப் பிரதிநிதிகள் மயிலாடு​துறை போலீஸ் ஸ்டேஷன் முன் திரண்டு இருந்தனர். எஸ்.பி., டி.எஸ்.பி-க்கள், இன்ஸ்பெக்டர்களும் அங்கு கூடியிருக்க, இஸ்லாமியப் பெருமக்கள் முகங்களில் கடுமையான கோபம்!

ஏன்?

‘பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா’ அமைப்பின் மயிலாடுதுறை மாவட்டப் பொறுப்பாளர் ஷபீக் அமீது, ”குத்தாலம் பகுதியில் எங்கள் மதத்தைச் சேர்ந்த சிலர், ‘இங்கு உள்ள ஒரு வீட்டில் விபசாரப் பெண்கள் கூடுகிறார்கள், அவர்களால் மதத்துக்கே கெட்ட பெயர் ஏற்படுகிறது. மற்றவர்களுக்கும் பெரும் இடைஞ்சலாக இருக்கிறது’ என்று ஐக்கிய ஜமாத்துக்குத் தகவல் கொடுத்தனர். ஐக்கிய ஜமாத்தினர் உடனே அந்த வீட்டுக்குப் போய், அங்கு இருந்த பெண்களை அழைத்து வந்து, மயிலாடுதுறையில் உள்ள மன்சூர் கைலி சென்டரில் வைத்து விசாரித்து அறிவுரை சொன்னார்கள்.

இதை யாரோ தப்பாக போலீஸில் தகவல் சொல்லிவிட, அவர்கள் எங்கள் இளைஞர்களையும், கைலி சென்டர் உரிமையாளர் அப்துல் ரஹூப்பையும் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டுசென்றனர். அதற்காக நியாயம் கேட்டுத்தான் இங்கே கூடி இருக்கிறோம்…” என்றார்.

”தவறு செய்தவர்களை அறிவுரை கூறித் திருத்த வேண்டிய போலீஸ், நல்லவர்​களைக் குற்றவாளி​களாக சித்திரிக்கிறது. எங்கள் இளைஞர்​​களையும் 60 வயது முதியவரான கைலி சென்டர் உரிமையாளர் அப்துல் ரஹூப்​பையும் கடுமையாகத் தாக்கி இருக்கிறார்​கள். எங்கள் ஆட்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விபசாரத்தில் ஈடுபட்டவர்களையும், அதில் சம்பந்தப்பட்ட பிரமுகர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால், போராட்டத்தில் இறங்கு​வோம்…” என்றார் முக்கியப் பிரமுகர்களை ஒருங்கிணைக்கும் ஷபியுல்லா.

போலீஸார் நம்மிடம், ”குத்தாலத்தில் உள்ள ஹமீது என்பவன் ஒரு விபசார புரோக்கர். அவனதுவீட்டில் பல ஊர்களில் இருந்தும் பெண்கள் கூடுகிறார்கள். அவர்களுக்கு பானு என்பவள்தான் தலைவி. இரண்டு, மூன்று மாவட்டங்களில் உள்ள முக்கியப் பிரமுகர்கள் பலருக்கும் இவர்கள்தான் பெண்களை அனுப்புகிறார்கள். இதைக் கேள்விப்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் சிலர், 30-ம் தேதி காலையில் ஒரு வேனில் குத்தாலம் போயிருக்கிறார்கள். வீட்டில் இருந்த ஹமீது மற்றும் ஆறு பெண்களை அடித்துக் கடத்தி வந்து, மயிலாடுதுறையில் ஒரு வீட்டில்வைத்து கடுமையாகத் தாக்கி இருக்கிறார்கள். அடுத்து, மன்சூர் கைலி சென்டருக்கு கூட்டி வந்து தனி அறையில் வைத்து, பைப்பாலும், குச்சியாலும் பெண்களைக் கடுமையாகத் தாக்கி இருக்கிறார்கள். வழக்கமாக ரோந்து போகும் போலீஸாருக்கு இந்தத் தகவல் தெரிய வரவே, எங்களுக்குத் தகவல் சொன்னார்கள். நாங்கள் சென்று அந்தப் பெண்களையும் ஹமீதையும் மீட்டு மருத்துவ​மனையில் சேர்த்ததோடு, தாக்குதலில் ஈடுபட்ட​வர்களை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தோம்…” என்று நடந்த சம்பவங்களைச் சொன்னார்கள்.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஹமீதிடம் பேசினோம். ”எனக்குப் பழக்கமான பெண்கள் சிலர் என் வீட்டில் ஃபாத்தியா ஓதுறதுக்காக வந்திருந்தாங்க. ஓதிக்கொண்டு இருந்த நேரத்தில், அங்கு வந்த இளைஞர்கள் சிலர், எங்களை அடித்து இப்படிச் செய்துவிட்டார்கள்!” என்றார்.

சிகிச்சையில் இருந்த பானு என்பவர், ”நான் சேலை வியாபாரம் செய்கிறேன். இந்தப் பெண் கவரிங் நகை விற்கிறார். இப்படி ஒவ்வொருத்தரும் ஒரு வியாபாரம் செய்றோம். ஹமீது வீட்டில் அன்னிக்கு ஃபாத்தியா ஓதத்தான் போனோம். எங்களைத் தப்பா நினைச்சு, சிலர் அடிஅடின்னு அடிச்சாங்க. ஆறு பேரில் ஒரு இந்துப் பெண்ணும் இருந்துச்சு. அதை அடிச்சு, ‘நான் இனிமே இப்படிப் பண்ண மாட்டேன்’னு எழுதி வாங்கிட்டு விரட்டிட்டாங்க. இன்னொரு முஸ்லிம் பொண்ணை அவங்க அண்ணன் வந்து அழைச்சுட்டுப் போயிட்டார். எங்க நாலு பேரையும்தான் போலீஸ் வந்து மீட்டுச்சு…” என்றார் மிரட்சியோடு.

எஸ்.பி-யான சந்தோஷ்குமாரிடம் பேசினோம். ”விபசாரம் நடக்கிறது என்றால் அதை எங்களிடம் சொன்னால், நாங்கள் நடவடிக்கை எடுக்கப் போகிறோம். அதை விட்டுவிட்டு, ஆட்களை சேர்த்துக்கொண்டு வீடு புகுந்து தாக்கி, அடைத்துவைத்து சித்ரவதை செய்வதை எப்படி அனுமதிக்க முடியும்? அதனால், ஹமீதின் வாக்குமூலத்தின்படி புகார் எடுத்துக்கொள்ளப்பட்டு, அவர்களைத் தாக்கியவர்களைக் கைது செய்தோம்!” என்றார்.

ஹமீது மற்றும் பெண்கள் மீது விபசார வழக்கு எதுவும் போடப்படாதது இஸ்லாம் பிரமுகர்களைக் கோபப்படுத்தி இருக்கிறது. அதனால் அடுத்த கட்டப் போராட்டங்களை ஆலோசித்து வருகிறார்கள்.

இந்த விவகாரத்தில் தவறு யார் பக்கம்? உண்மையில் அங்கு விபசாரம் நடந்ததா? நடந்திருந்தால், விபசாரம் செய்தவர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கியது இளைஞர்களா? விபசாரம் நடந்தும், இத்தனை நாட்களாகக் போலீஸ் ஏன் கண்டு கொள்ளவில்லை?

source:vikatan

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized