Monthly Archives: திசெம்பர் 2010

வேர்ட் – சின்ன சின்ன விஷயங்கள்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் வேர்ட் தொகுப்பு சார்ந்த சின்ன சின்ன தகவல்கள் இங்கு தரப்படுகின்றன. உங்கள் நினைவை ரெப்ரெஷ் செய்து கொள்வதற்காக. தெரிந்ததுதானே என்று ஒதுக்க வேண்டாம். வேர்ட் தொகுப்பைத் திறந்தவுடன் உங்களுக்கு, அதன் மெனு மற்றும் டூல்பார்கள் அமைந்திருக்கும் விதம் பிடிக்கவில்லையா? கவலைப்படாதீர்கள்; உங்கள் விருப்பப்படி மாற்றிவிடலாம். எந்த டூல் பாரின் இடத்தை மாற்ற விரும்புகிறீர்களோ, அந்த டூல்பாரின் ஓரத்தில் மவுஸின் கர்சரைக் கொண்டு செல்லுங்கள். கர்சர் நான்கு கால்கள் கொண்ட ஒரு அடையாளமாக மாறும். அப்படியே அழுத்தி இழுத்து, எங்கே இருக்க வேண்டுமோ அங்கே விட்டுவிடவும். மெனுபாரில், நிறைய பட்டன்கள் உள்ளன. சிலவற்றைப் பார்த்தவுடன் அவை எதனைக் குறிக்கின்றன என்று தெரியும். ஆனால் பல பட்டன்கள் எதற்காக என்று தெரிவதில்லை. இவற்றின் பெயர் மற்றும் பயன்பாடு அறிய, மவுஸின் கர்சரை இந்த பட்டன் அருகே கொண்டு செல்லுங்கள். உடனே அந்த பட்டனின் பெயர் தெரியும்.

டாகுமெண்ட்டில் ரூலர் இல்லையா? ரூலரைக் கொண்டு வரவும் மறைக்கவும் View மெனு சென்று Ruler என்பதில் கிளிக் செய்திடுங்கள்.

டாகுமென்ட் அமைக்க,புதிய பைலாக காலியாக உள்ள பக்கம் ஒன்றைத் திறந்தவுடன் அதில் தரப்பட்டிருக்கும் மார்ஜின் உங்களுக்குப் பிடிக்கவில்லையா? அதனை மாற்றி அமைக்க விரும்புகிறீர்களா? அப்படி யானால் File மெனுவில் Page Setup செல்லவும். அங்கு Margins டேப்பில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் மார்ஜின் வெளியைக் கூட்டவும் குறைக்கவும் வசதிகள் தரப்பட்டிருக்கும். மாற்றிக் கொள்ளலாம். காலியாக இருக்கும் போதுதான் மாற்ற வேண்டும் என்பதில்லை. டாகுமெண்ட் உருவானபின்னும் மேலே சொன்ன வழியில் மாற்றலாம். மாற்றுவதற்கேற்ப உங்கள் டாகுமெண்ட் தோற்றமும் மாறும். நீங்கள் மாற்றிக் கொள்ளும் மார்ஜின் நீங்கள் உருவாக்கும் அனைத்து டாகுமென்ட்களிலும் வர வேண்டும் எனத்திட்டமிட்டால் மார்ஜின் செட் செய்த பின்னர் Default என்பதில் கிளிக் செய்திடுங்கள். இதனை அழுத்தும்போது வேர்ட் உங்கள் நார்மல் டெம்ப்ளேட் மாற்றப்படுவதால் உங்கள் டாகுமென்ட் அனைத்தும் மாற்றம் பெரும் என்ற எச்சரிக்கைச் செய்தியினைத் தரும். ஏற்றுக் கொள்ளுங்கள்.

வேர்ட் திறந்தவுடன் கிடைக்கும் எழுத்து வகை (பொதுவாக டைம்ஸ் நியூ ரோமன் என்ற எழுத்துதான் இருக்கும்.) உங்களுக்குப் பிடிக்கவில்லையா? நீங்கள் எப்போதும் ஏரியல் அல்லது வெர்டனா அல்லது முற்றிலும் வேறாக ஒரு தமிழ் எழுத்து வகையினை தொடக்க எழுத்தாக வைத்துக் கொள்ள திட்டமிட்டால் கீழே குறித்துள்ள படி செயல்படவும். Format மெனுவில் இருந்து Font என்பதை செலக்ட் செய்திடவும். நீங்கள் பிரியப்படும் எழுத்துவகையைத் தேர்ந்தெடுக்கவும். தமிழ் பாண்ட் ஆக இருந்தாலும் தேர்ந்தெடுக்கவும். மேலும் அதன் சைஸ், தடிமனாக அல்லது சாய்வாக மற்றும் பிற பண்புகளைத் தேர்ந்தெடுத்தபின் Default என்பதைத் தேர்ந்தெடுங்கள். இதனை அழுத்தும்போது வேர்ட் உங்கள் நார்மல் டெம்ப்ளேட் மாற்றப்படுவதால் உங்கள் டாகுமென்ட் அனைத்தும் மாற்றம் பெரும் என்ற எச்சரிக்கைச் செய்தி யினைத் தரும். கவலைப்படாமல் ஓகே கிளிக் செய்து வெளியேறுங் கள். இனி நீங்கள் டாகுமெண்ட் ஒன்றை உருவாக்க புதிய பக்கத்தினைத் திறக்கையில், அது நீங்கள் தேர்ந்தெடுத்த எழுத்து வகையுடன் தான் திறக்கப்படும்

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

கம்ப்யூட்ட கேள்வி – பதில்

E_1291712245.jpeg

கேள்வி: எப்படியும் மாதம் ஒருமுறை ஏதேனும் ஒரு இமெயிலில், அதனைப் பார்வேர்ட் செய்தால், பணம், அதுவும் டாலராகக் கிடைக்கும் என்று செய்தி வருகிறது. இதனை நம்பலாமா? பெரும்பாலும் மத சம்பந்தப்பட்டது மற்றும் பரிதாபத்தைத் தூண்டுவதாக உள்ளது. பணம் எப்படி நமக்குக் கிடைக்கும்? -கே. தேவசேனா, திருத்தணி

பதில்: முதலில் நம் உழைப்பு எதுவுமின்றி நமக்குப் பணம் கிடைக்காது என்ற எண்ணத்தினை வளர்த்துக் கொள்ளுங்கள். இவை எல்லாம், நம்மை எதிலாவது சிக்க வைக்கும் முயற்சிகளே. வெளிநாட்டுப் பணம் என்றவுடன் இது உண்மையாகத்தான் இருக்கும் என்றெல்லாம் எண்ண வேண்டாம். சிறுவன் ஒருவன் புற்றுநோயில் பாதிக்கப் பட்டுள்ளதாகவும், அந்த மெயிலை அனுப்பினால், பணம் கிடைக்கும் அல்லது மைக்ரோசாப்ட் அல்லது கூகுள் நிறுவனம் நோய்க்கான வைத்திய செலவினை ஏற்றுக் கொள்ளும் என்றும் கடிதம் வரும். நீங்களே யோசித்துப் பாருங்கள். எத்தனை பேர் மெயிலைக் கண்டுபிடிக்க முடியும்? பின்னர் அவர்களின் பேங்க் அக்கவுண்ட் அல்லது முகவரி எப்படி கிடைக்கும்? இந்தச் சிக்கலில் சிக்கினால், சில வேளைகளில் உங்கள் பெர்சனல் பேங்க் தகவல்கள் திருடப்பட்டு, உங்கள் பணம் திருடப்படும். எனவே இவற்றைப் பார்த்தவுடனேயே அழித்துவிடுங்கள். ட்ரேஷ் பாக்ஸில் கூட இருக்க வேண்டாம்.

கேள்வி: கேமராவின் திறனை எப்போதும் மெகா பிக்ஸெல் என்று சொல்கிறீர்கள். இது என்ன அளவு? எப்படித் தெரிந்து கொள்வது? சற்று விளக்கவும். –மெ. கார்த்திகேயன், காரைக்கால்

பதில்: அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல். ஏனென்றால், கேமரா மட்டுமின்றி, மொபைல் போனில் உள்ள கேமரா குறித்தும் பேசப்படுகையில் இந்த மெகா பிக்ஸெல் அளவு சொல்லப்படுகிறது. இங்கு இதனைக் காணலாம்.

கீழே குறிப்பிட்டுள்ள தகவல்கள் பொதுவானவை. சில நிறுவனங்கள் தயாரிக்கும் கேமராக்களில் இது சிறிய அளவில் அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கும்.

2 மெகாபிக்ஸெல்ஸ்: 1600 x 1200

3 மெகாபிக்ஸெல்ஸ்: 2048 x 1536

4 மெகாபிக்ஸெல்ஸ்: 2274 x 1704

5 மெகாபிக்ஸெல்ஸ்: 2560 x 1920

6 மெகாபிக்ஸெல்ஸ்: 2816 x 2112

7 மெகாபிக்ஸெல்ஸ்: 3072 x 2304

8 மெகாபிக்ஸெல்ஸ்: 3264 x 2468

கேள்வி: ஐ.எஸ்.ஓ. இமேஜ் கட்டாயம் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டுமா? ஒவ்வொரு முறை சிடி அல்லது டிவிடி எழுதுகையில் இந்தக் கேள்வி கம்ப்யூட்டரில் வருகிறது. எனக்குச் சொல்லிக் கொடுத்தவர், இதனை அலட்சியப்படுத்தி விடுங்கள் என்றார். அலட்சியப்படுத்தலாம் என்றால் ஏன் இது ஒவ்வொரு முறையும் கேட்கப்படுகிறது? –டி.கே. உமையாள், கே.புதூர், மதுரை.

பதில்: உங்கள் நீண்ட கடிதத்தில் இருந்து, இந்த சந்தேகம் குறித்து பல நாட்கள் சிந்தித்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. பல வாசகர்கள் இது குறித்துக் கேட்டுள்ளனர். இதோ அது என்னவென்று பார்ப்போம்.

ஐ.எஸ்.ஓ. இமேஜ் என்பது ஐ.எஸ்.ஓ. என்ற துணைப் பெயர் கொண்ட பைலைக் (.iso) குறிக்கிறது.

நாம் தயாரிக்கும் சிடி அல்லது டிவிடியின் டிஸ்க் இமேஜ் அல்லது ஆப்டிகல் இமேஜ் என்பதற்கான இன்னொரு பெயர் தான் ஐ.எஸ்.ஓ. இமேஜ். ஏற்கனவே உள்ள பைல்களுக்கான இமேஜ்தான் இது. அதனால் தான் சிடி மற்றும் டிவிடி பர்னிங் உடன் இது இணைந்து பேசப்படுகிறது. ஐ.எஸ்.ஓ. பைல் இதற்கான ஸ்பெஷல் சாப்ட்வேர் மூலம் சிடியில் உள்ள பைல்கள் அனைத்திற்குமான காப்பி ஆக உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் சிடியில் உள்ள பைல்களை எடிட் செய்திடலாம். எனவே மியூசிக் அல்லது டேட்டா சிடி ஒன்றை நீங்கள் உருவாக்குகையில் அதற்கான ஐ.எஸ்.ஓ. இமேஜ் ஒன்றும் உருவாக்கப்படுகிறது. மியூசிக் மட்டுமின்றி சிடியில் என்ன தகவல்களை எழுதினாலும் அந்த பைல்களுடன் கூடிய சிடியின் ஐ.எஸ்.ஓ. இமேஜ் பைலும் உருவாக்கப்படுகிறது. இதனை எந்த பர்னிங் சாப்ட்வேர் தொகுப்பின் மூலமும் உருவாக்கலாம். இதற்கான பர்னிங் சாப்ட்வேர் கம்ப்யூட்டருடனேயே கொடுக்கப்பட்டிருக்கலாம். அல்லது சிடி டிரைவ் வாங்குகையில் தரப்பட்டிருக்கலாம். அல்லது நீங்களே தேர்ட் பார்ட்டி சாப்ட்வேர் எதனையாவது வாங்கியிருக்கலாம்; அல்லது டவுண்லோட் செய்திருக்கலாம். எந்த வகை சாப்ட்வேர் புரோகிராம் என்றாலும் அதன் மூலம் நிச்சயம் ஐ.எஸ்.ஓ. பைல் கிடைக்கும். இது தேவையா என்றால், அது நம் விருப்பத்தைப் பொறுத்தது. ஹார்ட் டிஸ்க்கில் இடம் இருந்தால், அதற்கென ஒரு பெயர் கொடுத்து எழுதி வைத்துக் கொள்ளலாம். பின் நாளில் உதவும்.

கேள்வி: கண்ட்ரோல் + ஆல்ட்+ டெலீட் கொடுத்து கிடைக்கும் இயங்கும் பைல்கள் குறித்த அட்டவணையில், “lsass.exe” என்னும் ஒரு பைல் . காட்டப்படுகிறது. இது வைரஸ் பைலா? இது எதற்காக எப்போதும் தெரிகிறது? –எஸ். சம்பத், போரூர், சென்னை

பதில்: வைரஸ் என்று எண்ணி அழித்துவிடாதீர்கள். விண்டோஸ் இயக்கத்திற்குத் தேவையான முக்கிய பைல் இது. lsass (LSASS) என்பது Local Security Authority Subsystem Service என்பதன் சுருக்கமாகும். விண்டோஸ் இயக்கத்தின் பாதுகாப்பினையும், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களையும் கண்காணித்துச் செயல்படும் ஒரு பைல் இது. C:/windows/system32 or C:/winnt/system32 என்ற போல்டரில் இந்த பைல் காணப்படும். இதனை அழிக்கக் கூடாது. கம்ப்யூட்டர் பாதுகாப்பிற்கு இந்த பைல் தேவை. எனவே, உங்களுக்கு கண்ட்ரோல் + ஆல்ட் +டெலீட் கீகள் மூலம் கிடைக்கும் டாஸ்க் மேனேஜர் மூலம், இதனை நிறுத்தவோ, அழிக்கவோ முயற்சிக்கக் கூடாது. முதலில் விண்டோஸ் அதனை அனுமதிக்காது. உங்களுக்கு ஒரு கூடுதல் தகவல் சொல்லட்டுமா? 2004 ஆம் ஆண்டில் Sasser என்னும் வைரஸ் பரவி வந்த போது, உங்களைப் போலவே, பலரும் அது இந்த பைலுடன் இணைந்ததாக எண்ணினார்கள். எனவே இந்த பைல் டாஸ்க் மேனேஜரில் இருந்த போது இதனை வைரஸாக எண்ணிப் பயந்தார்கள். இப்போது அப்படி எதுவும் இல்லை. எனவே உங்கள் கம்ப்யூட்டர் வாட்ச்மேனாக, இந்த பைலை எண்ணிக் கொள்ளுங்கள். இந்த பைல் நம் நண்பன்தான்.

கேள்வி: ஜிமெயில் பயன்படுத்துகிறேன். இதில் பயன்படுத்த முக்கிய ஷார்ட்கட் கீகளைத் தரவும். அவை இயங்க என்ன செட் செய்திட வேண்டும்? சாதாரணமாக சில ஷார்ட் கட் கீகளை அழுத்திய போது அவை இயங்கவில்லை. –ஆ. நாகராஜ் மாணிக்கம், மதுரை

பதில்: ஜிமெயிலில் ஷார்ட்கட் கீ தொகுப்புகள் செயல்பட, சில செட்டிங்ஸ் அமைப்புகளை மேற்கொள்ள வேண்டும். பின்னரே அவை செயல்படும். கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ளவும்.

1. ஜிமெயில் பக்கத்தில் வலதுபுறம் மேலாக, Settings என்பதில் கிளிக் செய்திடவும்.

2.அடுத்து Settings பக்கம் கிடைக்கும். இதில் “Keyboard Shortcuts” என்பதனை அடுத்துள்ள ரேடியோ பட்டனில் கிளிக் செய்திடவும். கீ போர்ட் ஷார்ட்கட் கீகள் செயல்பட இதுதான் வழி தருகிறது.

3. இதனை அடுத்து Save Changes என்பதில் கிளிக் செய்திடவும். இனி அனைத்து கீ போர்டு ஷார்ட்கட் கீகளும் செயல்படும். நீங்கள் கேட்டுக் கொண்டதற் கிணங்க, ஒரு சில முக்கியமான ஷார்ட்கட் கீகளைத் தருகிறேன்.
/ – செய்திகளைத் தேட
c புதிய இமெயில் செய்தி உருவாக்க
n அடுத்த மெசேஜ் பெற
o இருவருக்கிடையேயான பல மெசெஜ் அடங்கிய செய்தி (இணிணதிஞுணூண்ச்tடிணிண) திறக்க
p முந்தைய மெசேஜ்
r அப்போது பார்த்துக் கொண்டிருக்கும் கடிதத்திற்கு பதில் தயாரிக்க.

கேள்வி: வேர்ட் 2010 தொகுப்பில் தயாரிக்கப்படும் ஆவணங்களில் உள்ள சொற்களை அடிக்கோடிடுகையில், கோட்டினை மட்டும் கலரில் அமைக்க முடியுமா? எனக்கு வரும் சில ஆவணங்களில் அது போல உள்ளது. –எஸ்.நீரஜா, சென்னை

பதில்: ஆம், நீங்கள் கூறுவது சரியே. டெக்ஸ்ட்டில் சில சொற்களை முக்கியமாகக் காட்டிட, அதில் அடிக்கோடிடுகிறோம். இந்த முக்கியத்துவத்தை மேலும் கூட்டிட, அல்லது உடனடியாகக் கண்களில் படும்படி காட்ட, கோடுகளை மட்டும் கலரில் அமைக்கலாம். கோடிட உங்களுக்குத் தெரியும். டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்து கண்ட்ரோல் +க் அழுத்தவும். அடிக்கோடு இடப்படும். இதனை மட்டும் கலரில் அமைக்க, மீண்டும் அந்த சொல்லைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து “Font” டயலாக் பாக்ஸ் திறக்க வேண்டும். இதற்கு ரிப்பனில் ஹோம் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் “Font” பிரிவில் வலது கீழாக உள்ள அம்புக்குறியில் கிளிக் செய்திடவும். அல்லதுCTRL + SHIFT + F கீகளை அழுத்தவும். இப்போது “Font” டயலாக் பாக்ஸ் திறக்கப்படும். இதில் “Underline style” என்பதன் கீழாக பல ஆப்ஷன்கள் அடங்கிய பிரிவுகள் கிடைக்கும். words only, various line combinations and weights, dots, dashes, எனப் பல பிரிவுகள் இருக்கும். இதில் ஏதேனும் ஒரு ஸ்டைலைத் தேர்ந்தெடுத்த பின்னர்,“Underline color” என்பதன் கீழ், கீழாக இழுக்கவும். இதில் எந்தக் கலர் வேண்டும் எனத் தேர்ந்தெடுக்க பல்வேறு வண்ணங்கள் தரப்பட்டிருக்கும். கூடுதலாக “More Colors” என்ற பிரிவும் இருக்கும். இதில் உள்ள “Preview” பிரிவில், நீங்கள் தேர்ந்தெடுக்கும் வண்ணத்துடன் சொல்லில் உள்ள கோடு எப்படி தோற்றம் அளிக்கும் என்பதனைப் பார்க்கலாம். அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். நீங்கள் தேர்ந்தெடுத்த சொல்லில் இட்ட அடிக்கோடு, தேர்ந்தெடுத்த வண்ணத்தில் இருப்பதனைக் காணலாம்

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

வெப்சைட்டில் நம் குறிப்புகள்

E_1291712520.jpeg

இணையத்தில் தளம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அதில் உள்ள தகவல்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும், அல்லது யாருக்கு அனுப்ப வேண்டும் என்று திட்டமிடுகிறீர்கள். இப்படிப் பல குறிப்புகள் அது குறித்து அமைக்க எண்ணுகிறீர்கள். இவற்றைக் குறித்து வைக்க என்ன செய்யலாம்? மேஜை மீதுள்ள ஒரு தாளில், இணைய தள முகவரி மற்றும் தகவல்கள், அனுப்ப வேண்டிய நபர்களின் மின்னஞ்சல் முகவரி அல்லது பெயர் குறித்து வைக்கலாம். அல்லது இதற்கென டெக்ஸ்ட் எடிட்டரில் ஒரு பக்கம் திறந்து மேலே குறிப்பிட்டவற்றை தனியே அமைத்து வைக்கலாம். ஏன், இணையப் பக்கத்திலேயே, ஆங்காங்கே குறித்து வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். பி.டி.எப். பைல்களில் பயன்படுத்தும் ""ஸ்டிக்கி நோட்ஸ்” போல இணைய தளப் பக்கங்களிலும் குறித்து வைத்தால், நமக்கு வசதி தான். ஆனால் முடியவில்லையே என்று எண்ணுகிறீர்களா! கவலையை விடுங்கள். நீங்கள் குரோம் பிரவுசர் பயன்படுத்துபவராக இருந்தால், உங்களுக்கு இந்த வசதியை “Note Anywhere” என்ற எக்ஸ்டன்ஷன் தொகுப்பு தருகிறது. இந்த தொகுப்பின் மூலம், குரோம் பிரவுசரில் ஒரு இணைய தளத்தினைக் காண்கையில், அதில் குறிப்புகளை எழுதி வைக்க எண்ணினால், உடனே அமைத்து வைக்கலாம். நீங்கள் மீண்டும் குரோம் பிரவுசர் மூலம், அந்த இணைய தளத்தினைப் பார்க்கையில், அந்த குறிப்புகளும் சேர்ந்து உங்களுக்குக் கிடைக்கும்.

இதனைப் பதிந்து கொள்ள, குரோம் பிரவுசரைத் திறந்து இயக்கவும். இதிலிருந்துhttps://chrome.google.com/extensions/detail/ bohahkiiknkelflnjjlipnaeapefmjbh என்ற முகவரி யில் உள்ள தளம் செல்லவும். அடுத்து கிடைக்கும் “Confirm Installation” என்ற டயலாக் பாக்ஸில் “Install” பட்டனில் கிளிக் செய்திடவும். இந்த எக்ஸ்டென்ஷன் பதிவு செய்யப்படும்.

நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும், இணைய தளத்தில் குறிப்பினை அமைக்க, டூல்பாரில் கிடைக்கும் நோட் ஐகானில் கிளிக் செய்து நோட்ஸ் டைப் செய்திடவும். இப்போது அந்த ஐகான், நீங்கள் டைப் செய்திடும் நோட்ஸ்களின் எண்ணிக்கையைக் காட்டும். டைப் செய்த குறிப்பினை நீக்க வேண்டும் என்றால், அதன் மீது கர்சரைக் கொண்டு சென்று, கிடைக்கும் கட்டத்தில் உள்ள ‘x’ அடையாளம் மீது கிளிக் செய்திடவும்.

அமைத்த நோட்ஸ் ஒன்றை, வேறு ஒரு இடத்தில் அமைக்க, அதனை அப்படியே இழுத்துச் சென்று விட்டுவிடலாம். இந்த நோட் ஐகானில் ரைட் கிளிக் செய்தால், ஆப்ஷன்ஸ் மூலம் அமைக்கப்பட்ட நோட்ஸ் சுருக்கத் தினைப் பார்க்கலாம். மேலும், நோட்ஸ் அமைக்கப்பட வேண்டிய எழுத்துவகை, எழுத்தின் வண்ணம், பின்புற வண்ணம் ஆகிவற்றையும் செட் செய்திடலாம். இவ்வாறு செட் செய்தவற்றை செட்டிங்ஸ் பிரிவில் Save கிளிக் செய்து, விரும்பும் வரை நிரந்தரமாக அமைத்துக் கொள்ளலாம்.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

சேவ் செய்யாத ஆபீஸ் பைலைப் பெறும் வழி

E_1291712556.jpeg

எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில், ஏதேனும் ஒரு, எடுத்துக்காட்டாக வேர்ட், எக்ஸெல், தொகுப்பினை இயக்கி அதில் புதியதாக ஒரு பைலை உருவாக்குகிறீர்கள். நம்மில் பலர், அந்த முழு பைலும் முடிந்த பின்னர்தான், அதற்குப் பெயர் கொடுத்து சேவ் செய்திடுவோம். முதலிலேயே சேவ் செய்து பெயர் கொடுத்தாலும், பின்னர் பைலின் பெரும்பகுதியினை முடித்து இறுதியில் தான் சேவ் செய்திடுவோம்,

ஒருவேளை, ஒருவேளை என்ன பல வேளைகளில், இதனை தொடக்கத்திலிருந்தே சேவ் செய்யாமல் மூடிவிடுவோம். அவசரமாகக் கம்ப்யூட்டரை மூடிவிட்டுச் செல்ல வேண்டும் என்ற சூழ்நிலையில் பலர் என்ன ஆப்ஷன் கேட்கப்படுகிறது என்று அறியாமலேயே, படக் என பைலை சேவ் செய்யாமல் மூடிவிட ஆப்ஷன் கிளிக் செய்துவிடுவார்கள். அப்புறம் அடடா தவறு செய்துவிட்டோமே என்று பைலை எப்படிப் பெறுவது என்று விழிப்பார்கள். வழி இல்லை என்ற முடிவிற்கு வந்தால், மீண்டும் அந்த பைலை உருவாக்குவார்கள்.

இவர்களுக்காகவே, எம்.எஸ். ஆபீஸ் 2010 தொகுப்பில்AutoRecover என்ற ஒரு வசதி உள்ளது. இந்த வசதியை சேவ் செய்யப்படாத பைல்களையும் சேவ் செய்திடும் வகையில் செட் செய்திடலாம். அது இந்த வசதியில் ஒரு போனஸ் வசதியாகும். இந்த மந்திரத்தை அமைத்து செயல்படுத்திட, File டேப் கிளிக் செய்து, அதில் Options என்னும் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். ஆப்ஷன் டயலாக் பாக்ஸ் கிடைத்தவுடன், இடது பக்கம் உள்ள Saveபிரிவைத் தேர்ந்தெடுக்கவும். வலது பக்கம், Save last auto saved version if I close without saving என்று இருப்பதனை செக் செய்திடவும். பின்னர், ஓகே கிளிக் செய்திடவும். இனிமேல், நீங்கள் சேவ் செய்திடாத பைலையும், மீண்டும் பெற்றுப் பயன்படுத்தலாம்.

கொஞ்சம் பொறுங்கள், எப்படி சேவ் செய்யாத பைலை மீட்டுப் பெறுவது என்று சொல்லவில்லையே! File டேப் செல்லவும். இந்த டேப்பில் Recent என்பதைத் தேர்ந்தெடுக் கவும். இதனடியில் கிடைக்கும் தகவல்களில், கீழாக வலது மூலையில், Recover Unsaved Documents என்று ஒரு பட்டன் இருப் பதனைக் காணலாம். இந்த பட்டன், உங்களை புரோகிராம் தானாக, நீங்கள் சேவ் செய்யாத பைலை சேவ் செய்திட்ட இடத்திற்கு எடுத்துச் செல்லும். இங்கே இத்தகைய பைல்கள் அனைத்தும் இருக்கும். உங்களுக்கு, அப்போது எந்த பைல் வேண்டுமோ, அதனைக் கிளிக் செய்து பின்னர் Open என்பதில் கிளிக் செய்திடவும். பைல் திறக்கப்படும். இப்போதாவது ஞாபகமாக சேவ் செய்திடவும்.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

சமையல் செய்முறை:மார்கழி பலகாரங்கள்….

பால் பாயசம்

தேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கைப்பிடி, பால் – இரண்டு லிட்டர், சர்க்கரை – 200 கிராம், நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு – 10, ஏலக்காய்த்தூள் – சிறிதளவு.

செய்முறை: பாசுமதி அரிசியை ரவை போல உடைத்து, பால் சேர்த்துக் குழைவாக வேகவிடவும். அரிசி நன்றாக வெந்ததும், சர்க்கரை சேர்த்து… வறுத்த முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த்தூள் போட்டு இறக்கவும்.

குறிப்பு: சாதாரண அரிசியைவிட, பாசுமதி அரிசியில் செய்தால் டேஸ்ட் அருமையாக இருக்கும்.

அவல் பாயசம்

தேவையானவை: அவல் – ஒரு கப், பால் – அரை லிட்டர் (காய்ச்சி, ஆற வைக்கவும்), சர்க்கரை – 2 கப், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, வறுத்த முந்திரி – 10, நெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை: நெய் விட்டு அவலை லேசாக சிவக்க வறுத்து, ரவை போல பொடித்துக் கொள்ளவும். ஒரு கப் தண்ணீரை கொதிக்கவிடவும். கொதிக்கும் நீரில் அவலைத் தூவி, கிளறி வேகவிடவும். வெந்ததும் பாலை சேர்த்துக் கிளறி, சர்க்கரை சேர்த்து ஐந்து நிமிடம் கலக்கி… வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும்

ஜவ்வரிசி பாயசம்

தேவையானவை: ஜவ்வரிசி – 100 கிராம், பால் – ஒரு லிட்டர், சர்க்கரை – 200 கிராம், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, வறுத்த முந்திரிப்பருப்பு – 10, கேசரி பவுடர் – சிறிதளவு.

செய்முறை: ஜவ்வரிசியை லேசாக வறுக்கவும். இதில் பாலை ஊற்றி வேகவிடவும். நன்றாக வெந்ததும் இறக்கி, சர்க்கரை சேர்க்கவும். வறுத்த முந்திரிப்பருப்பு, கேசரி பவுடர், ஏலக்காய்த்தூள் போட்டு நன்றாகக் கலக்கவும்.

தேங்காய்அரிசி பாயசம்

தேவையானவை: அரிசி – அரை கப், தேங்காய் துருவல் – ஒன்றரை கப், பொடித்த வெல்லம் – 2 கப், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, வறுத்த முந்திரிப்பருப்பு – சிறிதளவு, பால் – அரை லிட்டர்.

செய்முறை: அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து, தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும். பாலைக் காய்ச்சி, ஆற வைக்கவும். அரைத்ததை சிறிது தண்ணீர் விட்டுக் கரைத்து அடுப்பில் வைத்து பத்து நிமிடம் வரை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். நன்றாக வெந்ததும், வெல்லம் சேர்த்துக் கொதிக்க வைத்து… வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள், காய்ச்சிய பால் சேர்த்துக் கலந்து இறக்கவும்.

குறிப்பு: தேங்காயை மெல்லிய துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்துப் போடலாம். வாழைப்பழம், பலாச்சுளையை பொடியாக நறுக்கிப் போடலாம். பாலுக்குப் பதிலாக தேங்காய்ப்பால் சேர்த்தால் சுவை கூடும்.

பைனாப்பிள்|பருப்பு பாயசம்

தேவையானவை: பாசிப்பருப்பு – ஒரு கப், கடலைப்பருப்பு – அரை கப், பைனாப்பிள் – 2, வெல்லம் – கால் கிலோ, ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, வறுத்த முந்திரிப்பருப்பு – 10, பால் – 1 லிட்டர் (காய்ச்சி ஆற வைக்கவும்).

செய்முறை: பாசிப்பருப்பையும், கடலைப்பருப்பையும் வெறும் கடாயில் போட்டு பொன்னிறமாக வறுத்து, குழைவாக வேகவிடவும். வெந்த பருப்புகளுடன் வெல்லம் சேர்த்துக் கலந்து, கொதிக்க வைத்து இறக்கி… ஏலக்காய்த்தூள், முந்திரிப்பருப்பு சேர்க்கவும். காய்ச்சிய பாலை இதில் விட்டுக் கலந்து, சாப்பிடுவதற்கு முன்பு பைனாப்பிளை சிறு துண்டுகளாக நறுக்கி மேலே போடவும்.

குறிப்பு: பருப்பு, பால், பைனாப்பிள் என மணமும், ருசியும் வித்தியாசமாக இருக்கும் இந்தப் பாயசம். விருப்பப்பட்டால், சிறிது பாதாம், முந்திரியை அரைத்துச் சேர்க்கலாம்.

மசால் வடை

தேவையானவை: பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒரு கப், உளுத்தம்பருப்பு – 200 கிராம், இஞ்சி – ஒரு சிறு துண்டு (தோல் சீவி நறுக்கவும்), பச்சை மிளகாய் – 4, மிளகு – 10, பூண்டு – 4 பல், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து, களைந்து, தண்ணீரை வடிகட்டவும். இதில் உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு, மிளகு சேர்த்து கெட்டியாக அரைத்து, வெங்காயம் சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிசைந்த மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: இதற்கு சட்னி (அ) சாம்பார் பிரமாதமாக இருக்கும். மணக்கும் இந்த வடை, மழைக்காலத்துக்கு ஏற்ப மொறுமொறுவென்று இருக்கும்.

வெஜிடபிள் வடை

தேவையானவை: வெள்ளை உளுத்தம்பருப்பு – கால் கிலோ, பொடியாக நறுக்கிய கோஸ், வெங்காயம், துருவிய கேரட் – தலா ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 4, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து, களைந்து. தண்ணீரை வடிகட்டி… இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். இதில் உப்பு, நறுக்கிய வெங்காயம், கோஸ், கேரட் துருவல், கறிவேப்பிலை சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிசைந்த மாவை வடைககளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: சட்னி, சாஸ் இதற்கு சிறந்த காம்பினேஷன். கீரையைப் பொடியாக நறுக்கி மாவில் போட்டும் செய்யலாம்.

மிளகு வடை

தேவையானவை: உளுத்தம்பருப்பு – கால் கிலோ, மிளகு – 15, காய்ந்த மிளகாய் – இரண்டு, இஞ்சி – சிறிய துண்டு, பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரை மணி நேரம் உளுத்தம்பருப்பை ஊற வைக்கவும். பிறகு களைந்து, தண்ணீரை வடிகட்டி… மிளகு, இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். இதில் பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிசைந்த மாவை வடைகளாக தட்டிப் போட்டு, வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: மிளகு, இஞ்சி வாசனையுடன் மிகவும் ருசியாக இருக்கும். எளிதில் ஜீரணமும் ஆகும்.

தானியம்-பருப்பு வடை

தேவையானவை: முளைகட்டிய கொள்ளு, முளைகட்டிய பாசிப்பயறு, முளைகட்டிய சோளம், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு கப், பூண்டுப்பல் – 4, இஞ்சி – சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் – 2, மிளகு – 10, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒரு கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து, தண்ணீரை வடிகட்டவும். இதனுடன் சோளம், கொள்ளு, பாசிப்பயறு சேர்த்து… பூண்டு, காய்ந்த மிளகாய், இஞ்சி, மிளகு போட்டு கெட்டியாக அரைக்கவும். உப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.

குறிப்பு: புரதச்சத்து நிறைந்த வடை இது. இந்த மாவை சிறு உருண்டையாக உருட்டி, வேக வைத்து குழம்பும் தயாரிக்கலாம். சிறிய குணுக்குகளாகவும் உருட்டிப் போட்டு பொரித்து சாப்பிடலாம்.

வாழைப்பூ வடை

தேவையானவை: ஆய்ந்து நறுக்கிய வாழைப்பூ – இரண்டு கைப்பிடி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு – ஒரு கப், உளுத்தம்பருப்பு – கால் கப், காய்ந்த மிளகாய் – 4, இஞ்சி – ஒரு துண்டு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு மூன்றையும் சேர்த்து ஊற வைத்து, தண்ணீரை வடிகட்டி, காய்ந்த மிளகாய், இஞ்சி போட்டு கெட்டியாக அரைக்கவும். சிறிது எண்ணெயில் வாழைப்பூவை வதக்கி, அரைத்த மாவில் போட்டு… உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மாவை வடைகளாக தட்டிப் போட்டு, வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: இது லேசான துவர்ப்புச் சுவையில் இருப்பதால், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்லது. இதே முறையில் வாழைத்தண்டை சேர்த்தும் செய்யலாம்.

கல்கண்டு பொங்கல்

தேவையானவை: அரிசி – கால் கிலோ, கல்கண்டு – அரை கிலோ, பால் – ஒரு லிட்டர், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ – சிறிதளவு, முந்திரிப்பருப்பு, காய்ந்த திராட்சை – தலா 10, நெய் – 4 டீஸ்பூன்.

செய்முறை: அரிசியுடன் பால் சேர்த்து குக்கரில் வைத்து, ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். நன்றாகக் குழைந்து இருக்க வேண்டும். இதனுடன் கல்கண்டு சேர்த்து மசிக்கவும். சூட்டில் கல்கண்டு கரைந்து விடும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து சேர்க்கவும். ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ போட்டுக் கலக்கவும்.

குறிப்பு: பாலும் கல்கண்டும் சேர்ந்த இந்தப் பொங்கலுக்கு உளுந்து வடை வித்தியாசமான காம்பினேஷன்.

ரவா பொங்கல்

தேவையானவை: ரவை – கால் கிலோ, முந்திரிப்பருப்பு, மிளகு – தலா 10, நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ரவையை நெய்யில் பொன்னிறமாக வறுக்கவும். மிளகு, சீரகத்தைப் பொடிக்கவும். ரவையின் அளவில் நான்கு மடங்கு தண்ணீர் எடுத்து, நன்றாகக் காய்ச்சி, கொதிக்க விட்டு… அதில் ரவையைப் போட்டுக் கிளறி, உப்பு போட்டு வேகவிடவும். நெய்யில் முந்திரிப்பருப்பு, பொடித்த மிளகு-சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை இவற்றை தனித்தனியே வறுத்து, எல்லாவற்றையும் வெந்த பொங்கலில் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

குறிப்பு: இதற்கு வெங்காய சட்னி சூப்பர் சைட் டிஷ்! கோதுமை ரவையிலும் இதேபோல் பொங்கல் செய்யலாம்.

வெண் பொங்கல்

தேவையானவை: பச்சரிசி – கால் கிலோ, பாசிப்பருப்பு – ஒரு கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், பொடித்த மிளகு – சீரகம் – 4 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, முந்திரிப்பருப்பு – 10, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் கடாயில் அரிசியைப் போட்டு லேசாக சூடு வரும் வரை வறுக்கவும். பாசிப்பருப்பையும் சிவக்க வறுக்கவும். அரிசியும் பருப்பும் கலந்து, மஞ்சள்தூள் சேர்த்து, ஒரு மடங்குக்கு 4 மடங்கு தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து, ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். பொடித்த மிளகு, சீரகத்தை நெய்யில் வறுத்து, வெந்த பொங்கலில் சேர்க்கவும். கறிவேப்பிலை, முந்திரிப்பருப்பையும் நெய்யில் வறுத்துப் போடவும். உப்பு சேர்த்து, நன்றாக மசித்து, மேலாக நெய் விட்டுக் கலக்கவும்.

குறிப்பு: இதற்கு தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி அருமையாக இருக்கும்.

பால் பொங்கல்

தேவையானவை: அரிசி – கால் கிலோ, பால் – ஒரு லிட்டர், சர்க்கரை – அரை கிலோ, குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, வறுத்த முந்திரிப்பருப்பு – 10, நெய் – 4 டீஸ்பூன்.

செய்முறை: அரிசியை அரை லிட்டர் பால் சேர்த்து குக்கரில் வைத்து, ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். மீதமுள்ள பாலை நன்றாகக் காய்ச்சி வேக வைத்த சாதத்தில் விட்டு மசித்து, சர்க்கரை சேர்த்து நன்றாக மசித்து, அடுப்பில் வைத்துக் கிளறவும். இதில் வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் போட்டு, நெய் விட்டுக் கலக்கி, குங்குமப்பூ சேர்த்துக் கிளறி இறக்கவும்.

குறிப்பு: அரிசியை ரவை போல உடைத்து வேக வைத்தால் சீக்கிரம் குழையும். குழந்தைகளுக்குப் பிடித்த பழங்களை சிறு துண்டுகளாக நறுக்கிப் போட்டு கொடுக்கலாம். பாலுடன் பழங்களும் சேரும்போது, ருசி அபாரமாக இருக்கும்.

சர்க்கரைப் பொங்கல்

தேவையானவை: அரிசி, பாகு வெல்லம் – தலா கால் கிலோ, பால் – 2 கப், நெய் – 100 கிராம், முந்திரிப்பருப்பு, காய்ந்த திராட்சை – தலா 10, ஏலக்காய்த்தூள் – சிறிதளவு.

செய்முறை: அரிசியுடன் பாலும், தண்ணீரும் கலந்து சேர்த்து (அரிசி அளவில் நான்கு மடங்கு இருக்க வேண்டும்), குக்கரில் வைத்து, ஆறு விசில் வந்ததும் இறக்கவும். வெல்லத்தை நன்றாகப் பொடித்து தண்ணீர் விட்டுக் கரைத்து வடிகட்டி பாகு காய்ச்சவும். பாகு கெட்டியானதும் வேக வைத்த சாதத்தை நன்றாக மசித்துக் கலக்கவும். முந்திரிப்பருப்பு, திராட்சையை நெய்யில் வறுத்து சேர்க்கவும். ஏலக்காய்த்தூள் போட்டு, நெய் விட்டு நன்றாகக் கலக்கவும்.

குறிப்பு: சர்க்கரைப் பொங்கலுடன் சிறு வாழைப் பழத்துண்டுகள், பொடியாக நறுக்கிய பலாச்சுளை ஆகியவற்றை சேர்த்தும் சாப்பிடலாம்.

source:vikatan

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

பேய் ஆட்சி செய்தால்…

பேய் ஆட்சி செய்தால்…

‘மக்கள், சுதந்திரத்தை வென்றடைய வேண்டும் என்று விரும்பும்போது, ஆகாய விமானத்தைக் கல் எறிந்து வீழ்த்துவார்கள். ராணுவ டேங்குகளை வெறும் கையால் திருப்பு வார்கள்!’ – பாடிஸ்டா நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்ட ஃபிடல் காஸ்ட்ரோ, தனது வாக்கு மூலத்தில் சொன்னது இது!

கடந்த வாரம், லண்டன் வீதிகளில் இது நிஜமாகவே நடந்தது. இலங்கை தேசத்தின் ‘மாட்சிமை தாங்காத’ அதிபர் மகிந்தா ராஜ பக்ஷேவுக்கு இங்கிலாந்து அரசு ஆறு அடுக்குப் பாதுகாப்பு கொடுத்தாலும், அவர் தங்கி இருந்த விடுதியைச் சூழ்ந்த தமிழர்களின் முழக்கத்தில், முழி பிதுங்கிப்போய்… ஆறு நாட்கள் பயணத்தை இரண்டே நாட்களில் முடித்துக்கொண்டு கொழும்பு போய்க் குதித்தார்.

முல்லைத் தீவில், கிளிநொச்சியில், வன்னியில் திரண்ட தமிழர்கள் கைகளில் ஆயுதங்கள் இருந்தன. ஆனால், லண்டனில் நின்றவர்கள் கைகளில் ஆயுதங்கள் இல்லை. நெஞ்சுரம் இருந்தது. அதில், ‘நம் கண் முன்னால் இத்தனை பேரைச் சாகக் கொடுத்துவிட்டோமே’ என்ற குற்ற உணர்வும் கூடுதலாக இருந்தது. கண்ணி வெடிகள் சாதிக்க முடியாததை, அவர்கள் டிசம்பர் 2-ம் தேதி நிரூபித்துக் காட்டி இருக்கிறார்கள்.

இலங்கையில் சர்வதேச மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் நடந்தனவா என்பதை விசாரிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு யஸ்மின் சூகா, மார்சுகி டரூஸ்மன், ஸ்ரிவன் ரட்னர் ஆகியோர் வரும் ஜனவரி மாதம் அறிக்கை அளிக்க இருக்கிறார்கள். சிங்களர்களின் காவல் தெய்வமாகத் தன்னைத்தானே அறிவித்துக்கொண்டு இருக்கும் மகிந்தா ராஜபக்ஷேவுக்கு மிகப் பெரிய நெருக்கடி காத்திருக்கிறது. இதை உடைப்பதற்குத்தான் பகீரத முயற்சி செய்து வருகிறார் ராஜபக்ஷே.

உலகம் உருவான காலம் முதல் அனுபவிக் காத மிகப் பெரிய சோகத்தைச் சந்தித்த வன்னி, கிளிநொச்சி, முல்லைத் தீவு மக்களை 300 கிலோ மீட்டர் தாண்டிப் போய் இன்னும் பார்க்காத ராஜபக்ஷே… பல்லாயிரம் கி.மீ தூரத்துக்கு வாரம்தோறும் பல நாடுகளுக்குப் பயணம் போய்க்கொண்டு இருப்பதன் சூட்சுமமும் அந்த விசாரணையை நீர்த்து போகச் செய்யும் முயற்சிகளுக்காகத்தான். லண்டனுக்குப் போவதைத் தனது வாழ்நாள் வெற்றியாக நினைத்து இருந்தார் ராஜபக்ஷே. மூன்று லட்சம் ஈழத் தமிழர்கள் அங்கு இருக்கிறார்கள் என்பது மட்டும் இதற்குக் காரணம் அல்ல; போர்க் குற்றவாளியாக அவரைக் குற்றம் சாட்டும் முக்கிய நாடுகளில் பிரிட்டன் முதலாவது நாடு. அங்கே போய்த் திரும்பிவிட்டால் போதும் என்று நினைத்தார் ராஜபக்ஷே.

ஆனால், அன்றைய தினம் சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ காட்சிகள் ராஜபக்ஷே மீதான கோபத் தீயில் நெய் வார்த்தன. கண்கள் கட்டப்பட்டு… இரண்டு கைகளும் பின்னால் பிணைக்கப் பட்டு… உடம்பில் ஒட்டுத் துணிகூட இல்லா மல் நிர்வாணமாக… ஒவ்வொரு ஈழத் தமிழர்களும் சுட்டுக் கொல்லப்படும் அந்தக் காட்சிகளைப் பார்க்கவே பதறித் துடிக்கிறது. எப்படித்தான் அரங்கேற்றினார்களோ அரக்கர்கள்?

அருட்பிரகாசம் சோபனா என்கிற இசைப்பிரியா. ஈழத் தமிழர் அனைவரும் அறிந்த பெயர். அவரது நளினமான குரலும் குறும்படங்களில் யதார்த்தமான நடிப்பும் அம் மக்களை வசீகரித்து இருந்தது. இரக்கமற்ற சாத்தான்கள் சுற்றி நிற்க… வெறி நாய்களிடம் சிக்கிய முயலாக அந்த சகோதரி துடிதுடிக்கப் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்ட பிறகு கொல்லப்பட்டார் என்பதை வீடியோ ஆதாரத்துடன் வெளிப்படுத்தியது சேனல்-4. தமிழ் இனத்தில் பிறந்தவள் என்பதைத் தவிர, இசைப்பிரியா மீது என்ன குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துவிட முடியும்?

வெள்ளைக் கொடி ஏந்தி வரச் சொல்லிவிட்டு, நடேசன், புலித்தேவனைக் கொன்றதற்கும் சாட்சி இருக்கிறது. தமிழர் வாழ்ந்த பகுதியில் எல்லாம் மனிதப் புதைகுழிகள் வெட்டப்பட்டதற்கான சேட்டி லைட் படங்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இராக் யுத்தக் கொடுமைகளை அம்பலப்படுத்திய ‘விக்கிலீக்ஸ்’ இணையதளம் இப்போதுதான் இலங்கை தொடர்பான ஆவணங்களை வெளியில் விட ஆரம்பித்துள்ளது.

இந்தக் கொலை பாதகச் சூழ்நிலை 2009 மே மாதத் துக்குப் பிறகு, மாறிப் போய்விடவில்லை. இணைய தளத்தில் ஒரு தமிழ் இளைஞர் நான்கு வரி எழுதி இருக்கிறார். ‘நான் குவைத்தில் இருக்கிறேன். சமீபத்தில் ஸ்ரீலங்கா சென்று வந்த என் தமிழ் நண்பன் என்னிடம், ‘என் ஊரில் 13, 14 வயதுச் சிறுமிகள் எல்லோருமே இப்போது கர்ப்பமாக இருக்கிறார்கள்’ என்று அந் நாட்டின் நிலைமையைச் சொன்னதும், என் நெஞ்சம் பதறியது. எனக்குத் தமிழக, இந்திய அரசுகள் மீது வெறுப்புதான் வந்தது!’ என்று எழுதி இருக்கிறார்.

குளோபல் தமிழ் அமைப்பைச் சேர்ந்த இமானுவேல் அடிகளார் கொடுத்த புகாரின் அடிப்படையில், ராஜபக்ஷே மீது வழக்கு பதிவு செய்திருப்பதன் மூலம், இங்கிலாந்துதான் தமிழர் தாயகம் என்று சொன்னால் தப்பா?

ப.திருமாவேலன்

source:vikatan

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

சவுதி அரச குடும்பத்தினரின் அந்தரங்க களி யாட்டம் : விக்கிலீக்ஸ்

300saudi.jpgசவுதியின் மன்னர் குடும்ப இளம் வாரிசுகள் சவூதி நாட்டின் கடுமையான இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு முரணாக அந்தரங்க களியாட்டங்களில் ஈடுபடுவதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள இரகசிய ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெத்தாவிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் ஆவணம் ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது சவூதியின் அரச குடும்பத்தினரின் குறிப்பாக இளம் வாரிசுகளின் களியாட்டங்களில் விபசாரிகள் மற்றும் மதுவகைகள், போதைப்பொருள் முக்கிய அம்சமாக உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அல்-துனயான் அரச குடும்ப உறுப்பினர் ஒருவர் கடந்த வருடம் நடத்திய களியாட்டம் ஒன்றில் சவூதியின் முற்றுமுழுதான இஸ்லாமிய சட்டதிட்டங்கள் மீறப்பட்டதாகவும் மதுபானம் விநியோகப்படுத்தப்பட்டதுடன் விலைமாதர்களும் களியாட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொகெயின் மற்றும் அசீஸ் வகை போதைபொருட்களும் இங்கு பரிமாறப்பட்டமை தொடர்பில் தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக அவர்கள் அச் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

இவை அனைத்தும் இரகசியமாகவே இடம்பெற்றதாகவும், சுமார் 150 இற்கும் மேற்பட்ட 20 – 30 வயதுக்கிடைப்பட்ட ஆண் மற்றும் பெண்கள் இதில் கலந்து கொண்டதாகவும் இவர்களைத் தடுப்பதற்கு அந்நாட்டு பொலிஸார் கூட அஞ்சியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இத்தகைய களியாட்டங்கள் சவூதி நாட்டின் இளவரசர்களிடையே தற்போது சகஜம் எனவும் சிலரின் வீடுகளுக்குள்ளேயே மதுபானசாலை, டிஸ்கோ ஆகியவை உள்ளதாகவும் அவ் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விக்கிலீக்ஸினால் வெளியிடப்பட்ட அவ் ஆவணத்தினை இங்கு காணலாம்.

source:vilihal

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized