Daily Archives: திசெம்பர் 10, 2010

ஒரு ரூபாய்க்கு ஒரு நாப்கின்…!

உயர்தர மற்றும் உயர் நடுத்தர குடும்பப் பெண்களை நோக்கியதாகவே இருக்கிறது. டி.வி.யில் தற்போது வரும் நாப்கின் விளம்பரங்களும், அதன் விலையும் நடுத்தர மற்றும் ஏழைப் பெண்களின் ‘அந்த’ நாட்களின் ஆரோக்கியத்துக்கு எந்த முயற்சிகளும் இங்கு இல்லை. அதைத்தான் முன்னெடுத்திருக்கிறார் கோவையைச் சேர்ந்த முருகானந்தம்.


சுமார் ஒரு ரூபாய் செலவில் ஒரு பீஸ் நாப்கின் செய்வதற்கான இயந்திரங்களைக் கண்டுபிடித்து அசத்தி இருக்கிறார். அதிலும் இந்த மெஷினை வியாபார நோக்கில் விற்பனை செய்யாமல் பெண்களின் சுய முன்னேற்றம் சார்ந்து மட்டுமே விற்பனை செய்து அதிசயிக்கவும் வைக்கிறார். இந்த இயந்திரத்தைக் கண்டுபிடிக்க இவரின் தளராத பரிசோதனை முயற்சிகள், அவரின் அக்கறையைச் சொல்கிறது.

முருகானந்தம் சொல்கிறார்.
‘‘கைத்தறி பிஸினஸ்ல ஓஹோன்னு இருந்த எங்கப்பா, திடீர்னு ஒரு நாள் இறந்துட்டார். வறுமை இழுத்த இழுப்புல கான்வென்ட்ல இருந்து கவர்ன்மென்ட் ஸ்கூல்ல வந்து விழுந்தேன். சூழ்நிலையால இட்லி சுட்டு குடும்பத்தைக் கரை சேர்த்த எங்க அம்மா மாதிரியான பல குடும்பப் பெண்களோட போராட்டமும் என் மூளையில இறங்கிச்சு. பத்தாங் கிளாசுக்கு மேலே ஸ்கூல் படிப்பை தொடரவிடாமல் விரட்டிய வறுமை… வொர்க்ஷாப், ஃபேக்டரின்னு சில இடங்கள்ல கொண்டு போய் நிறுத்துச்சு. அங்கே தான் எனக்கு இயந்திரங்களோட பரிச்சயம்.

கல்யாணமாகி குடும்பஸ்தனானேன். ஒரு நாள் டி.வி.யில நாப்கின் விளம்பரம் கடந்தப்போ, ‘‘இதெல்லாம் நமக்குக் கட்டுப்படியாகாது… மாசா மாசம் ஆகற செலவுல, ஒரு நாள் சாப்பாட்டுச் செலவையே முடிச்சிரலாம். நம்மள மாதிரி வசதியில்லாத பொண்ணுங்களுக்கு கந்த துணி தான் விதி’ன்னு என் மனைவி சொன்னதைக் கேட்டப்போ, ‘சுருக்’குன்னு பட்டுச்சு.

பெண்கள் மாதவிலக்கான நாட்களில் சுகாதாரமில்லாத துணிகள பயன்படுத்தறதால, பல பிரச்சனைகளுக்கு ஆளாகறாங்கன்னு மருத்துவ நண்பர்கள் மூலமா உணர்ந்தவன் நான். கோவை மாதிரியான மாநகரத்துல வசிக்கிற ப்ளஸ் டூ வரைக்கும் படிச்ச என் மனைவிக்கே, பொருளாதார பிரச்சனை காரணமா இந்த நிலைன்னா, கிராமத்து பெண்களை நினைச்சுப் பரிதாபமாயிடுச்சு. உடனே யோசிக்க ஆரம்பிச்சிட்டேன்.

மெடிக்கல் ஸ்டோர்ல ஒரு நாப்கினை வாங்கிப் பார்த்து. அது வெறும் காட்டன் அடைக்கப்பட்ட பாக்கெட்டுனு நினைச்சுக்கிட்டேன். நானே காட்டனை வாங்கி, அதைச் சின்னதா பாக்கெட் செஞ்சு என் மனைவியில ஆரம்பிச்சு அக்கம்பக்கத்து தோழிகள், ஹாஸ்டல் பொண்ணுங்கன்னு கொடுத்தேன். எல்லோருமே ‘இது வேஸ்ட்’னு சொன்னாங்களே தவிர என்ன பிரச்சனைன்னு சொல்லலை.

அதுக்குப் பிறகு ஒரு நாப்கின்ல ஒரு திரவத்தை விட்டப்போ, திரவத்தை உறிஞ்சுகிற அதே சமயம், அதைத் தேக்கி வெச்சுக்க முடியும்ன்னு புரிஞ்சுது. தளராம, அமெரிக்காவில உள்ள நாப்கின் தயாரிக்கிற கம்பெனியில் இருந்து மூலப்பொருளை வரவழைச்சேன். அதை லேப்ல ஆய்வு செஞ்சப்போ… அது காட்டன் இல்லை… ‘பைன் வுட் ஃபைபர்’ங்கிறது புரிஞ்சது. காட்டன் ஈரத்தைத்தான் உறிஞ்சும். இந்த ஃபைபரால உறிஞ்சவும், தேக்கி வைக்கவும் முடியும்.

ஃபைபர் நாப்கின் தயாரிக்கிற அமெரிக்க மிஷினோட விலை… நாலரை கோடி ரூபாய்னு சொன்னாங்க. தலை சுத்தி விழுந்தவன் ரெண்டே நாளில் தெளிஞ்சு, அடுத்த முயற்சியில இறங்கினேன். அந்த மெக்கானிசத்தை புத்தகங்கள், பரிசோதனைகள் மூலமா தெரிஞ்சுக்கிட்டு அந்த வேலையைச் செய்யக்கூடிய மெஷினை சின்ன அளவுல அறுபதாயிரம் ரூபாய் செலவுல 2005-ஆம் ஆண்டு உருவாக்கினேன். தரமான நாப்கின்களை அந்த மெஷினால தயாரிக்க முடிஞ்சது. ஒரு பீஸ் நாப்கின் ஒரு ரூபாய் விலை நிர்ணயம் பண்ண முடிஞ்சது!’’ என்கிறார்.

சமுதாய மேம்பாட்டுக்கான சிறந்த கண்டுபிடிப்பு என்ற வரிசையில் சென்னையில் உள்ள ஐ.ஐ.டி.யில் முருகானந்தத்துக்கு முதல் பரிசு கிடைத்திருக்கிறது. ஏராளமான விருதுகளையும் வென்ற இந்தக் கண்டுபிடிப்பு, கடந்த ஆண்டு குடியரசுத் தலைவரின் கையால் தேசிய விருதையும் பெற்றிருக்கிறது.

எட்டு மணி நேரத்தில் ஆயிரம் நாப்கின்களை தயாரிக்கும் வேகமுடைய இந்த இயந்திரத்தின் காப்புரிமையை உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் பல விலை பேசியிருக்கின்றன. ஆனால் முருகானந்தம் இதை முழுக்க முழுக்கப் பெண்களின் முன்னேற்றம் சார்ந்த விஷயத்துக்காக அர்ப்பணித்திருக்கிறார்.

‘சொந்தமா தொழில் செஞ்சு வாழ்க்கையில் வெற்றி பெறணும்ங்கிற வைராக்கியத்தோட இருக்கிற பெண்கள் பலர்.அவங்களுக்குத்தான் என் மெஷினை விற்பனை செய்யறேன். நாப்கின் தயாரிக்கிற பயிற்சியையும் நானே வழங்கறேன். இந்தியா முழுக்கப் பதினெட்டு மாநிலங்கள்ல முன்னூறு மெஷின்களை வித்திருக்கேன். பல பொருட்களோட விலையேற்றத்தின் காரணமா, இன்றைய தேதிக்கு இந்த மெஷினின் மதிப்பு எண்பத்தைந்தாயிரம் ரூபாய் ஆகியிருக்கு…’ என்றவர்,

‘இந்தியாவில அதிகபட்சமா 20 சதவிகிதப் பெண்கள்தான் நாப்கின் பயன்படுத்துறாங்கன்னு சொல்லுது ஒரு புள்ளிவிவரம். இப்போ பீகார், உத்திரப்பிரதேசம்னு நாகரிகத்துல ரொம்பப் பின்தங்கிய மாநிலங்களோட குக்கிராமங்கள்ல கூட என்னோட மெஷின் போய் சேர்ந்திருக்கு. காஷ்மீர் மாநில மலை உச்சியில உள்ள பழங்குடியின பெண்களோட சுகாதாரத்துக்கும் என் மெஷின் கை கொடுக்குது. பக்கத்து கிராமத்துப் பெண்களோட சுகாதார விதியை மாத்தியிருக்கு. இதை விட வேறென்ன பெரிய சந்தோஷம் இருந்துடப் போகுது சொலுங்க?’ என்று நிறைந்த மனதோடு கேட்கிறார் முருகானந்தம்

source:vikatan

Advertisements

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

வாக்கிங் சென்ற வக்கீலை கொத்திய சேவல் “கை து’

large_142299.jpg

சேலம்: சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த வக்கீல் விஜயகுமார் இரு தினங்களுக்கு முன், தேவேந்திரபுரம் எக்ஸ்டென்ஸன் பகுதியில் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது, வழியில் நின்ற சேவல், வக்கீல் விஜயகுமாரை கொத்தியுள்ளது.பொதுவாக கொத்திய சேவலை "கல்’லால் அடித்து துரத்தி விடுவர். ஆனால், சாலையில் நடந்து சென்ற போது சேவல் கொத்தியது குறித்து, வக்கீல் விஜயகுமார் சேலம் செவ்வாய்பேட்டை போலீஸில் புகார் தெரிவித்தார்.செவ்வாய்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, வக்கீல் விஜயகுமாரை கொத்திய சேவலை தேடிப்பிடித்து "கைது’ செய்து, ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர். சேவல் கைது செய்யப்பட்டது பற்றி தகவல் அறிந்த சேவலின் உரிமையாளர் கமலா என்பவர் நீதிமன்றத்திற்கு வந்து 200 ரூபாய் அபராதம் செலுத்தி, சேவலை மீட்டுச் சென்றார்.சேவல் மட்டுமல்ல, சாலையில் செல்லும் போது, எந்த விலங்கு தொந்தரவு செய்தாலும், போலீசில் புகார் தெரிவிக்கலாம் என, சேவலை "கைது’ செய்த போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

கூகுள் ட்ரெண்ட்ஸ்

E_1291712590.jpeg

கூகுள் தேடும் தளம் தான், இன்று இணையத்தில் அதிகம் நாடப்படும் தளமாகத் தொடர்ந்து இருந்து வருவது அனைவரும் அறிந்ததே. அப்படியானல், குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில், அதிகம் தேடப்படும் பொருள் தெரிந்தால், உலகம் எதனை நோக்கி அதிகம் கவலைப் படுகிறது அல்லது தெரிந்து கொள்ள ஆசையாய் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாமே. நாடு, இனம்,மொழி பாகுபாடின்றி, எது குறித்து மக்கள் அதிக சத்தம் எழுப்பிக் கொண்டிருக்கின்றனர் என்று தெரிந்து கொண்டு, நாமும் உலகத்தோடு ஒட்ட வாழ்கிறோமா என்று அறிந்து கொள்ளலாம் அல்லவா!

கவலைப் படவே வேண்டாம், கூகுள் தேடுதல் சாதனமே இந்த தகவல்களை கூகுள் ட்ரெண்ட்ஸ் என்ற தலைப்பில் தருகிறது. இதற்கு முதலில் Google.com செல்லுங்கள். இதன் மேல் பக்கத்தில் more என்று இருப்பதில் கிளிக் செய்திடுங்கள். பின்னர் இதனை அடுத்து even moreஎன்பதில் கிளிக்கிடுங்கள். கிடைக்கும் அடுத்த பக்கத்தில், அப்படியே மவுஸின் சக்கரத்தினை உருட்டிச் சென்று Trends என்று இருக்குமிடம் சென்று நிறுத்துங்கள். இதன் மீது கிளிக் செய்திடுங்கள். இங்குதான் மேலே முதல் பத்தியில் நாம் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைக்கும். இங்குதான், பன்னாட்டு மக்களும் எந்த செய்தி அல்லது தகவலுக்காக, கூகுள் தேடுதல் தளத்தினை நாடி உள்ளனர் என்று காட்டப்படும்.

இங்கு காட்டப்படும் தேடுதல் பட்டியலில் நீங்கள் எதிர்பார்த்த தேடுதல் விஷயம் இல்லை என்றால், உங்களுக்கு ஏமாற்றம் ஏற்படலாம். கவலைப்பட வேண்டாம். நீங்கள் எதனை எதிர்பார்க்கிறீர்களோ, அதனை தேடுதல் சொற்களாக அமைத்து, தேடுதல் கட்டத்திலேயே “Search Trends” என டைப் செய்து, என்டர் தட்டினால், உடன் ஒரு வரை படமாக முடிவுகள் காட்டப்படும். இந்த வரை படத்தின் மூலம், நீங்கள் காணவிரும்பிய அந்த தகவல் குறித்து எந்த ஆண்டில் எந்த மாதத்தில் அதிகத் தேடல்கள் இருந்தன என்று தெரிந்து கொள்ளலாம். நான் www.dinamalar.com என டைப் செய்து தேடச் சொன்ன போது, அருகே உள்ளது போல ஒரு கிராப் கிடைத்தது. இதிலிருந்து, தமிழ்ச் செய்தி நாளிதழ்களின் இணைய பதிப்புகளில் அதிகம் காணப்படும் நம் தினமலர் இணைய தளத்தினை எந்த எந்த மாதத்தில் அதிகம் பேர், தேடுதல் தளம் மூலம் தேடிப் பார்த்துள்ளனர் என்று தெரியவருகிறது அல்லவா! இந்த வரைபடத்தின் கீழாகவே, எந்த நாட்டில் மற்றும் எந்த நகரங்களில் அதிகம் தேடுதல் தள மூலம் பார்க்கப்பட்டது என்ற தகவலும் கிடைக்கிறது. இத்துடன் நின்றுவிடவில்லை. உங்கள் மனதில் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் குறித்த தேடல்களை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என எண்ணினால், அதனை தேடுதலுக்கான விண்டோவில், ஒரு கமா மூலம் பிரித்துக் கொடுத்தால், இதே போன்ற வரைபடத்தின் மூலம் முடிவுகள் காட்டப்படும்

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized