Daily Archives: நவம்பர் 3, 2010

3 November, 2010 10:33

editinside.jpg

1,39,652,00,00,000. ஒரு சராசரி இந்தியன் இந்தத் தொகையைக் குழப்பமின்றி எழுத்துக் கூட்டிக் கணக்கிட சில நிமிஷங்கள் ஆகும். ஒரு லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய்கள். இந்தியத் தொலைத்தொடர்புத் துறையின் இரண்டாம் தலைமுறைக்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டில், நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் இழப்பாக தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் அளித்திருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் தொகை இது.

இந்திய வரலாற்றின் மிகப் பெரிய ஊழல். நேற்று வரை உத்தேசமாகக் கணக்கிட்டு ஆளாளுக்கு ஒரு தொகை – ரூ. ஐம்பதாயிரம் கோடி – ரூ. எழுபதாயிரம் கோடி – என்று பேசிக்கொண்டிருந்தோம். ஆனால், இப்போது நாட்டின் உயரிய கணக்குத் தணிக்கை அமைப்பு நாட்டின் உச்சபட்ச நீதி அமைப்பிடம் அதிகாரப்பூர்வமாக – அறிக்கையாக அளித்திருக்கிறது. இன்னமும் ஏன் மெüனம்?

இந்த ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நாளிலேயே இது மாபெரும் ஊழலுக்கான சூதாட்டம் என்பது தெரிந்துவிட்டது. தொலைத்தொடர்புத் துறையின் இணையதளத்தில் திடீரென்று ஒதுக்கீடு குறித்து அறிவிப்பு வெளியானதும், முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்று அறிவிக்கப்பட்டதும், ஒரு மணி நேரத்தில் அவசர அவசரமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டதும், விண்ணப்பங்கள் பெறப்பட்ட "சஞ்சார் பவ’னில் நடந்த அடிதடியும்… இவையெல்லாமும் ஊடகங்களில் உடனுக்குடனே வெளியாயின. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், எடுக்கவில்லை.

தொலைத்தொடர்புத் துறையின் வர்த்தகச் செயலகம், தொலைத்தொடர்புக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் வழிகாட்டுதல்களை மீறி ஒதுக்கீட்டில் ஏல முறைக்குப் பதிலாக முதலில் வருவோருக்கு முன்னுரிமை முறையைக் கையாள அமைச்சகம் முடிவெடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதுவும் செய்யவில்லை.

தொலைத்தொடர்புத் துறையில் அதுவரை எந்தச் சம்பந்தமுமில்லாத நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டிருப்பதையும் உரிமங்களைப் பெற்ற நிறுவனங்கள் தாம் பெற்ற ஒதுக்கீட்டின் பெரும் பகுதியை பல மடங்கு லாபத்தில் பிற நிறுவனங்களுக்கு விற்றதையும் ஊடகங்கள் வெளியிட்டன. எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அப்போதும் அசையவில்லை.

பிரச்னை நீதிமன்றப் படியேறியது. ""நாட்டின் மதிப்புமிக்க வளமும் பொதுமக்களின் பணமும் வீணடிக்கப்பட்டிருப்பது அதிரவைக்கிறது” என்று கூறி விசாரணைக்கு உத்தரவிட்டது நீதிமன்றம். அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதாவது விழித்துக் கொண்டு செயல்பட்டிருக்கும்.

அரசியல் நிர்பந்தம் மற்றும் நீதித் துறையின் நெருக்கடியால் மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்கத் தொடங்குகிறது. பல ஆதாரங்கள் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. முக்கியமாக அதிகாரத் தரகர் ஒருவருக்கும் அமைச்சருக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல்களின் பதிவு மத்திய புலனாய்வு அமைப்புக்குக் கிடைத்திருப்பதாகவும், அந்த உரையாடலில் இந்த ஊழல் தொடர்பான குறிப்புகள் இடம்பெற்றிருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. அரசு நேர்மையானதாக இருந்தால், உடனடியாகச் செயல்பட்டிருக்க வேண்டும்.

தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் மேற்கொண்ட தணிக்கையில், இந்த ஒதுக்கீட்டில் பெரும் முறைகேடு நடந்திருப்பது தெரியவருகிறது. தொலைத்தொடர்பு அமைச்சகத்திடம் விளக்கம் கேட்கிறது தணிக்கை அலுவலகம். அளிக்கப்பட்ட விளக்கங்கள் திருப்திகரமாக இல்லை என்றும் அறிவிக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் தன்னுடைய அறிக்கையை அளிக்கிறது. அரசு நேர்மையானதாக இருந்தால், இனியும் மௌனம்காப்பது சரியல்ல என்று உணர்ந்து நடவடிக்கையில் இறங்கி இருக்க வேண்டும்.

இந்த வழக்கின் விசாரணையில் மத்திய புலனாய்வு அமைப்பு காட்டிவரும் அசாதாரண தாமதத்துக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கிறது உச்ச நீதிமன்றம். ""அரசு செயல்படும் லட்சணம் இதுதானா?” என்று கேள்வி எழுப்புகிறது. அரசு நேர்மையானதாக இருந்தால், இவ்வளவு கண்டனங்களுக்குப் பிறகாவது மௌனம் கலைத்திருக்க வேண்டும்.

ஒரு லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய்கள். சாதாரண தொகையல்ல. இந்த ஊழல் நடந்த 2007-08-ம் நிதியாண்டில், நாட்டிலுள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் சேர்த்து மத்திய அரசு ஒதுக்கீடு செய்த மொத்தத் தொகைக்கு ஏறத்தாழ இணையான தொகை இது.

இந்தத் தொகையில் நாடு முழுவதும் தலா ரூ. 25 லட்சத்தில் 5,58,608 பள்ளிக்கூடங்களை அமைத்திருக்கலாம்; ரூ. 1 கோடியில் 1,39,652 தரமான ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைத்திருக்கலாம்; ரூ. 5 கோடியில் 27,930 கல்லூரிகளை அமைத்திருக்கலாம்; ரூ. 100 கோடியில் எல்லா வசதிகளையும் கொண்ட 1,396 மருத்துவமனைகளை அமைத்திருக்கலாம்; 11,63,766 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைத்திருக்கலாம்; 27,930 கி.மீ. தொலைவுக்கு புதிய மின் ரயில் பாதைகளை அமைத்திருக்கலாம். ஆனால், சில தனிப்பட்ட நபர்களின் கைக் காசாக மாறியிருக்கிறது நாட்டின் வளமும் மக்களின் பணமும்.

ஏறத்தாழ 45.58 கோடி பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் ஒரு நாட்டில் – ஒரு நாளைக்கு 100 ரூபாய் சம்பாதிக்கக் குடும்பத்தோடு சேர்ந்து உழைக்கும் கோடிக்கணக்கானோர் வாழும் ஒரு நாட்டில் – இந்த ஊழல் எவ்வளவு பெரிய குற்றம்?

ஆனால், குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் ஆ. ராசா மீண்டும் அமைச்சராகி "நாளை மற்றுமொரு நாளே’ என்று தன் பணிகளைத் தொடர்கிறார்; பிரதமர் மன்மோகன் சிங், அரசு தன் கடமையைச் செய்வதாகக் கூறுகிறார்; எதிர்க்கட்சிகள் சில மணி நேரக் கூச்சலோடும் அறிக்கைகளுடனும் முடித்துக் கொள்கின்றன; ஊடகங்கள் சில பத்திச் செய்திகளோடு முடித்துக் கொள்கின்றன; மக்களோ எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். "ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே.

source:dinamani

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

பேஸ்புக் தரும் புதிய குரூப் வசதி

சென்ற அக்டோபர் 7 அன்று பேஸ்புக் தளத்தில் புதிய குரூப் என்று ஒரு வசதி தரப்பட்டுள்ளது. இது ஏற்கனவே இந்த தளத்தில் கிடைக்கும் குரூப்ஸ் வசதியைப் போலின்றி, சில தனிப்பட்ட சிறப்பு வசதிகள் கொண்டது. ஒரு சிறிய குழுவாக, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கொண்ட குழுவினை அமைத்து அரட்டை அடிக்க, போட்டோக்கள் மற்றும் பைல்களைப் பகிர்ந்து கொள்ள, மின்னஞ்சல்களை குழு உறுப்பினர் களுக்குள் அனுப்பிக் கொள்ள இது வசதி அளிக்கிறது. இந்தக் குழு உறுப்பினர்களுக்குள் மட்டுமே இதனை மேற்கொள்ள முடியும். எப்படி இது ஏற்கனவே உள்ள பெரிய அளவிலான குழுக்களில் இருந்து வேறுபட்டு ள்ளது என்று இங்கு பார்க்கலாம்.
1. எப்படி தொடங்குவது? வழக்கமான பேஸ்புக் குரூப் லிங்க், அதன் தளத்தில் இடது பிரிவில் கிடைக்கும். புதிய குரூப்ஸ் (New groups) செல்ல இங்கு லிங்க் கிடைக்காது. இதற்கு நீங்கள் செல்ல வேண்டிய இணையப் பக்க முகவரி at http://www.facebook.com/groups. இங்கு சென்ற வுடன், புதிய குரூப்ஸ் தொடங்க Create Group என்பதில் கிளிக் செய்திடவும். உங்கள் குடும்ப உறவினர்கள் அல்லது நண்பர்களுக்காக எனில் அதற்கேற்றார்போல் இந்த குழுவிற்குப் பெயரிடவும். வர்த்தக நோக்கு எனில் அதனை மையப்படுத்தி பெயர் அமைக்கவும். அடுத்து பேஸ்புக் தளத்தில் பதிந்த, நீங்கள் விரும்பும் நண்பர்களின் அல்லது உறவினர்களின் பெயர்களை டைப் செய்திடவும். இந்த குழுவிற்கான ஐகானையும் இங்கு மாற்றலாம். தொடர்ந்து இந்த குழுவில் இடப்படும் செய்திகள், தகவல்கள் யாருக் கெல்லாம் தெரியப் படலாம் என்பது குறித்தும் இங்கு செட் செய்திடலாம். அனைத்தும் முடித்த பின்னர், Create என்பதில் கிளிக் செய்து குழு அமைத்திடும் பணியை முடிக்கலாம்.
2.குரூப் அரட்டை: அடுத்த வசதி குழுவின் அரட்டை வசதி. இங்கு அரட்டையில் ஈடுபடும்போது, ஈடுபடும் இருவருக்கு மட்டும் அது தெரியாது. குழுவில் உள்ள அனைவரும் அரட்டையைத் தெரிந்து கொள்ளலாம். குரூப் பக்கத்தின் வலது பக்கத்தில் உள்ள “Chat with Group” என்பதில் கிளிக் செய்து அரட்டையைத் தொடங்கலாம்.
3. ஆவணங்கள் பகிர்ந்து கொள்ளல்: இந்த குழுவின் இன்னொரு சிறப்பு இதில் ஆவணங்களை உருவாக்குதல். இதில் உருவாக்கப்படும் ஆவணங்களை, குழு உறுப்பினர்கள் அனைவரும் பயன்படுத்தலாம். எடிட் செய்திடலாம்.
4.குழுவிற்கான மின்னஞ்சல் முகவரி: குழுவின் உறுப்பினர்களைத் தொடர்பு கொள்ள, இந்த குழு மட்டும் பயன்படுத்த ஒரு மின்னஞ்சல் முகவரியினை அமைக்கலாம். இதனை உறுப்பினர்கள் தவிர மற்றவர்கள் பயன்படுத்த முடியாது. குரூப்பில் மின்னஞ்சல் செய்திகள் அனைத்தும் அனைவரும் படிக்கும்படி அமைக்கப்படும்.
5. இமெயில் அறிவிப்புகள்: இந்த குழுவில் உள்ள உறுப்பினர்களும் தங்களுக்கு எவை எல்லாம் அறிவிக்கப்பட வேண்டும் என்பதனை எப்போது வேண்டுமானாலும் எடிட் செய்து கொள்ளலாம்.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized