”முடி வெட்ட மாட்டோம்; சலவை செய்ய மாட்டோம்”


அதிரவைக்கும் தீண்டாமை கிராமம்!

முடி வெட்டாத தலை, மழிக்காத தாடியுடன் கூடிய முகம். இந்த அடையாளங்களோடு அந்தக் கிராமத்தில் வசிப்பவர்களைக் கண்டால் பரிதாபமாகத்தான் இருக்கிறது. அதேபோல துணிகளை அயர்ன் பண்ணிப் போடுவதற்கும் வழியில்லை. சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் இருந்தும் அவர்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலைமை. காரணம், தீண்டாமை அரக்கன்தான்.

15p2.jpg

""சலவை பண்ணுகிறவர், முடி வெட்டுபவர் எங்களுக்கும் அந்தத் தொழிலைச் செய்ய வேண்டும்” என்ற சமதர்மக் கொள்கையை உயர்த்திப் பிடித்து தலித்கள் போர்க்கொடி தூக்க, ஊருக்குள் வெடித்தது பிரச்சினை. நீதிமன்றத்திற்குப் போயும் பிரச்சினை தீரவில்லை. இதற்கிடையே, ""நாங்கள் யாருக்கும் வேலை பார்க்க மாட்டோம்” என்று சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் எழுதிக் கொடுத்துவிட்டு ஒதுங்கிவிட, ஒட்டுமொத்த ஊரும் இப்போது அவஸ்தையை அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தாலுகாவில் உள்ளது இருஞ்சிறை. முக்குலத்தோர் அதிகமுள்ள இந்தக் கிராமத்தில் நாடார், வெள்ளாளர், விஸ்வகர்மா உள்ளிட்ட பிற ஜாதியினரும் உண்டு. அதேபோல தலித்களும் இருக்கிறார்கள். பிற சமூகத்திற்கு வேலை செய்யும் சலவை மற்றும் முடிவெட்டும் தொழிலாளர்கள் ஆரம்பத்திலிருந்தே தலித்களுக்கு வேலை செய்ய மறுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் பிற்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சலவைத் தொழிலாளி பெரியசாமியிடம் தலித் தரப்பைச் சேர்ந்த ஒருவர் அவசரத்திற்கு துணி தேய்க்கச் சொல்ல, அவர் மெஜாரிட்டி சமூகத்திற்குப் பயந்து மறுத்துள்ளார். இதையடுத்து வார்த்தைகள் தடிக்க, விஷயம் ஊர் பஞ்சாயத்துக்குப் போயிருக்கிறது. கைகலப்பில் தலித்கள் சிலர் தாக்கப்பட்டதால் தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவானதாம்.

இதற்கிடையே தலித்கள் உயர் நீதிமன்றத்தில் நியாயம் கேட்க, நீதித் துறையும் மாவட்ட நிர்வாகமும் ஊருக்கே சென்று விசாரணை நடத்தியது. ""தலித்களுக்கும் வேலை செய்ய வேண்டும்” என்று சம்பந்தப்பட்ட தொழிலாளர்களை அரசுத் தரப்பு வலியுறுத்தியது. ஆனால், ""நாங்கள் யாருக்கும் வேலை செய்யமாட்டோம்” என்று எழுதிக் கொடுத்துவிட்டார்களாம் அந்தத் தொழிலாளர்கள்.

இதையடுத்து பிரச்சினையைத் தீர்த்து வைக்க சலவைத் தொழிலாளர் ஒருவரையும், முடிவெட்டுவதற்கு இன்னொருவரையும் வெளியிலிருந்து கொண்டுவந்து ஊருக்குள் அரசுத் தரப்பே குடி வைத்தது. "பெரியார் நினைவு சமத்துவத் துணி தேய்ப்பு நிலையம்’ என்று எழுதப்பட்ட ஒரு வண்டியை சலவைத் தொழிலாளிக்கும் அதே போல முடி திருத்துபவருக்கு ஒரு பெட்டிக் கடையையும் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்கள். இப்படி வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்தும் இருபது நாட்களுக்கு மேல் அந்தத் தொழிலாளர்கள் அக்கிராமத்தில் நீடிக்கவில்லை. கட்டுப்படியாகவில்லை என்ற காரணம் சொல்லி காலி செய்துவிட்டார்களாம். சம்பந்தப்பட்ட சாதனங்கள் மட்டும் அநாதையாகக் கிடக்க, முடி வெட்டவும் துணி தேய்க்கவும் வெளியூரைத் தேடிப் போகின்றனர் இருஞ்சிறை கிராம மக்கள். குழந்தையைக்கூட கூட்டிச் செல்ல வேண்டிய நிலைமை. சில பெரியவர்கள் அதற்கும் வழியில்லாமல் தாடியுடன் காணப்படுகிறார்கள்.

இவர்களுக்கிடையே சமத்துவத்தை உண்டாக்க அதற்கு முன்பே அரசு ஒரு முயற்சி மேற்கொண்டதாம். சமபந்தி விருந்து நடத்தினால் சரியாகப் போகும் என்றும் நம்பியிருக்கிறார்கள். அதற்குப் பொறுப்பேற்ற ஒரு தொழிலதிபர், தொடர்ந்து சில நாட்கள் உணவை லாரிகளில் கொண்டுவந்துள்ளார். ஊர் மக்களும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தியிருக்கிறார்கள். அதுபற்றி நம்மிடம் பேசிய இருஞ்சிறை கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெரியவர், ""சமபந்தியில் ஒரே இடத்தில் சாப்பிட்டோம். ஃபோட்டோ எடுத்தார்கள். ஆனால் அப்படி உட்கார்ந்து சாப்பிட்டால் மட்டும் சமத்துவம் வந்துவிடுமா? முடிவெட்டுகிற, தேய்க்கிற இடத்துக்கு அது வரணுமில்ல. மனமாற்றம் என்பது தானாக வரணும். அரசாங்கம் திணிக்க நினைக்கக் கூடாது” என்கிறார்.

நாம் இருஞ்சிறை கிராமத்திற்கே நேரடி விஸிட்டடித்து சிலரை சந்தித்தோம். முதலில் நம்மிடம் பேசிய சேதுராமன், ""நான் தாடி வளர்த்து ஒரு மாசமாச்சு. இன்னைக்குத்தான் நரிக்குடியில போய் ஷேவ் பண்ணிட்டு வந்திருக்கேன். கிராமத்திற்கென சில கட்டுப்பாடுகள் இருக்கும். நகர வாழ்க்கையை கிராமத்தோடு ஒப்பிடக் கூடாது. ஒற்றுமையாக இருந்த கிராமத்தில் நக்ஸலைட் மாதிரி உருவாகி அதைக் கெடுத்துட்டாங்க. தொழில் பண்ணுகிறவர்களுக்கும் சில வரம்புகள் இருக்கும். இன்னாருக்கு பார்க்கணும் என்று அவர்களைக் கட்டாயப்படுத்த முடியாது. அந்த உரிமை யாருக்கும் இல்லை. சட்டத்தாலும் சர்வாதிகாரத்தாலும் அரசாங்கம் அவர்களை மிரட்டி இப்ப எங்களுக்குக் கெடுதல் பண்ணிவிட்டது” என்றார் வேதனையோடு.

அதேபோல தனக்கு எண்பது வயதாகிவிட்டது என்று ஆரம்பித்த பெரியவர் ராசு, ""ஷேவ் பண்ணி மூணு மாசமாச்சு. என்னால பஸ் ஏறிப் போகமுடியல. கை காலெல்லாம் நடுங்குது. கூட்டிட்டுப் போகவும் ஆள் இல்லை. இங்கே நாங்க சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு வருஷக் கூலி கொடுப்போம். வருஷத்துக்கு 250 ரூபாய். வெளியூர்ல போய் அதிக பணம் கொடுப்பது என்னை மாதிரியான வயதானவங்களுக்குக் கட்டுபடியாகாது” என்கிறார் ஒருவித ஆதங்கத்துடன்.

""இருஞ்சிறை கிராமத்தில் இருந்த தொழிலாளிகளும் வெளியேறிட்டாங்க. அரசாங்கம் கொண்டு வந்தவங்களும் ஓடிப்போயிட்டாங்க. எங்க ஊர்ல யாருக்கு யார் வேலை பார்க்கணும் என்பது முன்னோர்கள் வகுத்தது. அரசாங்கம் இப்ப பிரச்சினையை இழுத்து வச்சிருச்சு. எல்லா சமூகமும் வேணும் என்று அரசாங்கம் நினைக்கணும். தனிப்பட்ட ஒரு சமுதாயத்திற்காக மற்றவர்களைப் புறக்கணிக்கக் கூடாது. எல்லா இனத்தவர்களும் ஓட்டு போட்டுத்தான் ஒரு முதலமைச்சர் உருவாகிறார். இப்பகூட கட்டனூர்ல சொலகு முடைய பணம் கொடுத்த ஒருவருக்கும் அந்தத் தொழிலாளிக்கும் பிரச்சினை. ஒண்ணு சொலகு கொடு.. இல்லேன்னா பணத்தைத் திருப்பிக் கொடுன்னு கேட்டதில் வார்த்தைகள் தடித்திருக்கிறது. காசை திருப்பிக் கேட்டவர் மீது உடனே தீண்டாமை வழக்கு போட்டுவிட்டார்கள். புகார் கொடுத்தவருக்கு மன உளைச்சலாம். அதற்காக அவருக்கு அரசு உதவித் தொகை ஆறாயிரம். ஆக கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டவருக்கு பி.சி.ஆர். வழக்கு. அதைத் தராதவருக்கோ ஆதாயம். இதைச் சுட்டிக்காட்டி இப்ப சுற்றுவட்டாரக் கிராமங்களில் போஸ்டர் ஒட்டியிருக்காங்க” என்கிறார் பாலச்சந்திரன் என்பவர்.

நாம் தலித் தரப்பின் கருத்தறிய குருசாமி என்பவரை சந்தித்தோம்.

""மேல் ஜாதிக்கு வேலை பார்க்கிற நாங்க கீழ் ஜாதியான உங்களுக்கு எப்படிப் பார்க்க முடியும்?’ என்ற கருத்து சம்பந்தப்பட்ட தொழிலாளிகளிடம் இருக்கு. அவசரத்திற்குப் போய் துணி தேய்க்கக் கொடுத்தாலும் செய்து கொடுக்க மாட்டாங்க. தலித்களுக்கு எப்பவுமே அந்தக் கஷ்டம் இருக்கு. பிரச்சினைக்குப் பிறகு அதிகாரிகளே வெளியூரிலிருந்து ஆள் கொண்டுவந்தாங்க. எந்தப் பிரச்சினையும் இல்லை. அவங்களும் வந்து அந்தக் கடையில் முடி வெட்டினாங்க. நாங்களும் போனோம். ஆனால் அந்தக் கடை வச்சிருந்தவரோட எதிர்பார்ப்பு அதிகம். கடையை மூடிட்டுப் போயிட்டாரு. அதேபோல துணி தேய்க்கிறவரும் காலிபண்ணிட்டாரு. எப்பவுமே நாங்க மட்டும்தான் முடிவெட்டவும் துணி தேய்க்கவும் வெளியூர் தேடிப் போவோம். இப்ப அவங்களும் 8 கிலோ மீட்டர் போய் வருவதைப் பார்த்தால் கஷ்டமாத்தான் இருக்கு. புதுசா வேற ஆள் கிடைச்சுட்டா நிலைமை சரியாகிவிடும். அதை அதிகாரிகளிடமும் சொல்லியிருக்கிறோம். முடிவெட்டுகிறவர்கள் சங்கத்தில் பேசி வைத்திருக்கிறார்களோ என்னவோ… யாரைக் கேட்டாலும் இருஞ்சிறைக்கு வரமாட்டோம் என்றே சொல்கிறார்கள்.
15t2.jpg

அதேசமயம் நிலைமை முன்பைவிட இப்போ பரவாயில்லை. இந்தப் பிரச்சினைக்குப் பிறகு இரட்டை டம்ளர் முறை ஒழிக்கப்பட்டுள்ளது சந்தோஷமான விஷயம். ஆனால் எங்களுக்கும் விவசாய நிலங்கள் இருக்கு. அதற்கு மற்ற சமுதாயத்துக்காரங்க தண்ணீர் விடமாட்டாங்க. ஆழ்குழாய் கிணறு அமைத்துத் தரச் சொல்லி அரசாங்கத்திடம் கேட்டோம். அதை அமைக்கும்போது ஏற்பட்ட தவறால் குழாயே மூடிப்போச்சு. ஆறுமாசமா விவசாயம் பண்ண முடியல” என்றார்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட தொழிலாளர்களைச் சந்தித்துப் பேசினோம். முதலில் நம்மிடம் பேசிய முடிதிருத்தும் தொழிலாளி மாரிமுத்து, ""நாங்க ரெண்டு வீட்டுக்காரங்க. ஊரை மீறி நாங்க செயல்பட முடியாது. நாங்க எப்பவும் தலித் மக்களுக்கு வேலை செய்ததில்லை. இவங்களுக்காக ஊரைப் பகைச்சுக்க முடியாது. தலித்களுக்கு வேலை பார்க்க புதரைவண்ணான் ஜாதியிலிருந்து ஒருவர் இருக்கிறார். அவரைக் கூட்டிக் கொண்டுபோய் அதிகாரிகளிடம் நிறுத்தினோம். அதை அவங்க கண்டுக்கிடல. அதுமட்டுமில்லாம தலித்களுக்கு வேலை பார்க்கலேன்னா நீங்க யாருக்கும் பார்க்கக் கூடாது என்றும் மீறினால் இன்னின்ன செக்ஷன்படி வழக்குப் போடுவோம் என்றும் மிரட்டிட்டாங்க. நாங்க அதிகாரிகளையும் மீற முடியல. கிராமத்தையும் மீற முடியல. மொத்தத்துல யாருக்கும் வேலை பார்க்கலேன்னு எழுதிக் கொடுத்துட்டு வந்துட்டோம். இப்ப எங்களுக்கு பிழைப்பு போச்சு. நான் காங்கிரஸ்காரன். இதுவரை தேய்க்காமல் சட்டை போட்டதில்லை. இப்ப நானே வீரசோழம் போய்த்தான் தேய்ச்சுக்கிட்டு வர்றேன்” என்றார் வருத்தத்தோடு.

அடுத்து பிழைப்பு தேடி வெளியூரில் தங்கியிருக்கும் சலவைத் தொழிலாளி பெரியசாமியிடம் பேசினோம். ""நாங்க பாண்டிய வண்ணார் ஜாதி. தலித்களுக்கு நாங்க எப்பவுமே வேலை செய்யுறதில்லை. இப்ப புதுசா செய்யச் சொன்னதால மறுத்திட்டோம். புதரை வண்ணான் ஜாதியைச் சேர்ந்தவங்கதான் அவங்களுக்கு வேலை செய்வாங்க. இவங்க நாலு பேருக்காக நாங்க ஊரைப் பகைச்சுக்க முடியாது. இன்னொன்றையும் பார்க்கணும். இறந்தவர்களை குழிவெட்டி அடக்கம் செய்கிற வேலையை தலித் சமூகத்தைச் சேர்ந்தவங்கதான் பார்ப்பாங்க. அதேபோல இழவு செய்தி சொல்லப் போவாங்க. அதை இழிவாகக் கருதி அவங்க நிறுத்திட்டாங்க. கார்த்திகை மாதம் எங்க அப்பா இறந்துபோனாரு. அதுக்கு முன்னால என்னோட மாமியார் செத்துப்போனாங்க. குழி வெட்டி அடக்கம் செய்ய அவங்க வரல. மத்த சமுதாயத்தைச் சேர்ந்தவங்கதான் அந்தக் காரியத்தைப் பார்த்தாங்க. இப்படி எங்களுக்கு வேலை செய்ய வராதபோது நாங்க மட்டும் அவங்களுக்கு வேலை செய்யணுமின்னு எதிர்பார்க்கிறது என்ன நியாயம்?” என்று கேள்வி எழுப்பினார்.

இருஞ்சிறை பஞ்சாயத்துத் தலைவரின் கணவரும் கிராம முக்கியப் பிரமுகருமான முருகேசன் நம்மிடம், ""இந்தக் கிராமத்தில் தீண்டாமை என்பது சுத்தமா கிடையாது. யாரோ சிலர் தனிப்பட்ட ஆதாயத்திற்காக அந்த சட்டத்தைப் பயன்படுத்துகிறார்கள். அதனால் இப்ப ஊர் நிம்மதி கெட்டுப் போச்சு. இந்தப் பிரச்சினையை மையமா வச்சு அவர்களில் சில பேர் தொழில் பண்ண லோன் வாங்கினாங்க. ஆனால் இதுவரை ஒரு கடைகூட வைக்கல. எங்களைப் பொறுத்தவரை அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்கத் தயாராகவே இருக்கிறோம். எங்களுக்குத் தேவை ஊர் ஒற்றுமையும் அமைதியும். சலவைத் தொழில் செய்யவும், முடிவெட்டவும் உள்ளூர்காரர்கள் இருப்பதே சரியாக வரும். அடுத்து அரசாங்கம்தான் நல்லதொரு தீர்வைச் சொல்லணும்” என்கிறார்.

இருஞ்சிறையைப் பொறுத்தவரை அரசாங்கம் எடுத்த முடிவு வெற்றி பெறவில்லைதான். ஆனால் விலகியிருக்க முடியாது. அது தன் கடமையைச் செய்திருக்கிறது. மனித மனங்களிலிருந்துதான் ஜாதி என்னும் துவேஷம் அகலவேண்டும். இந்த சூழ்நிலையிலும் தலித் சமூகத்தைச் சேர்ந்த குருசாமி, ""எப்பவும் முடிவெட்ட, துணி துவைக்க நாங்க மட்டுமே வெளியூர் போவோம். இப்ப மத்தவங்களும் போய் வருவதை நினைத்தால் கஷ்டமாகத்தான் இருக்கு” என்று சொல்லியிருப்பது உருக்கமாக இருக்கிறது.

SOURCE:TAMILAN express

1 பின்னூட்டம்

Filed under Uncategorized

One response to “”முடி வெட்ட மாட்டோம்; சலவை செய்ய மாட்டோம்”

  1. karthik

    இந்த சூழ்நிலையிலும் தலித் சமூகத்தைச் சேர்ந்த குருசாமி, “”எப்பவும் முடிவெட்ட, துணி துவைக்க நாங்க மட்டுமே வெளியூர் போவோம். இப்ப மத்தவங்களும் போய் வருவதை நினைத்தால் கஷ்டமாகத்தான் இருக்கு என்று சொல்லியிருப்பது உருக்கமாக இருக்கிறது////
    இந்த மாதிரி அவங்க கவலபடுவதள த்தான் உயர் சதிகரன்ன்னு சொல்லிடு திரியறானுங்க உனக்கு ஒரு வேலை செய்ய பிடிக்கலன்ன முடியாது அப்படின்னு சொல்லிட்டு போலாம் அதிவிட்டுட்டு ந அவனுக்குத வேல செய்வனு இவனுக்கு செய்யமட்டனு சொன்ன எப்படி. எல்லாரும் சமமா இருக்கனுமன்ன சொகுசா இருக்கறவன கச்டபடுதின தா வழிக்கு வருவானுங்க
    இல்லன மேல நின்னு மிதிபனுங்க ………

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s