Daily Archives: ஓகஸ்ட் 9, 2010

நீரில் மூழ்கி மாணவன் சாவு: உயிரை விட்டது பாசக்குதிரை

large_33792.jpg

கோவை : கோவை அருகே, நண்பர்களுடன் அணையில் விளையாடிய கல்லூரி மாணவன், நீரில் மூழ்கி இறந்தார். இவர், வீட்டில் பராமரித்து வந்த நடனக்குதிரை, மறுநாளே உயிரைவிட்டது. இவ்விரு நிகழ்வுகளும், மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, குனியமுத்தூர், சுகுணாபுரம் கிழக்கு பகுதியில் வசிப்பவர் செந்தில்முருகன்; மில் தொழிலாளி. இவரது இளைய மகன் மணிகண்ணன் (21); வி.எல்.பி., கல்லூரியில் பி.காம்., இரண்டாமாண்டு படித்து வந்தார். கடந்த 2ம் தேதி தனது கல்லூரி நண்பர்களுடன், தமிழக – கேரள எல்லையிலுள்ள வாளையார் அணையில் குளிக்கச் சென்றார். ஒவ்வொருவரும் போட்டி போட்டு அணையில் குளித்துக்கொண்டிருந்தபோது, மணிகண்ணன் மட்டும் வெகுநேரம் வரை வெளியே வரவில்லை. அதிர்ச்சியடைந்த நண்பர்கள், அருகிலிருந்த வாளையார் போலீசுக்கு தகவல் தெரிவிக்க, தீயணைப்பு துறையினர் வந்து மணிகண்ணனின் உடலை மீட்டனர். கல்லூரிக்குச் சென்ற மகன் பிணமாக மறுநாள் வீட்டுக்கு திரும்பியது கண்டு அதிர்ச்சியில் நிலைகுலைந்தனர் பெற்றோர்.

உற்றார், உறவினர் கூடி அன்று மாலையில் உடல் அடக்க சடங்குகளை முடித்து வீட்டுக்கு திரும்பியபோது, அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. மணிகண்ணன் கடந்த ஐந்து ஆண்டுகளாக பராமரித்து வந்த, நடனக் குதிரை மயங்கி கிடந்தது. கால்நடை டாக்டரை அழைத்து வந்து காண்பித்த போது, அதுவும் உயிரை விட்டிருந்தது. "தனது எஜமானன் உயிரிழந்ததை அறிந்து, இந்த குதிரையும் உயிரை விட்டுவிட்டதாகவே’ பலரும் கருதி பரிதாபத்துடன் வேடிக்கை பார்த்துச் சென்றனர்.

இது குறித்து, மணிகண்ணனின் தந்தை செந்தில்முருகன் கூறியதாவது:நீரில் மூழ்கி இறந்த எனது மகன், படிப் பில் அக்கறை கொண்டவன். அதே வேளை யில், குதிரை வளர்ப்பிலும் ஆர்வம் கொண்டவன். அவனது விருப்பத்தின்படி ஐந்து ஆண்டுகளுக்கு முன் குதிரை வாங்கினோம். அதற்கு "புயல் ராணி’ என பெயரிட்ட அவன், நடனமாடும் பயிற்சியையும் அளித்தான். கடந்த 2009ல் கேரள மாநிலம், கொல்லத்தில் நடந்த "டான்சிங் ஹார்ஸ்’ (நடனக் குதிரை) போட்டியில் பங்கேற்ற எங்களது குதிரை, சிறப்பு பரிசு பெற்றது. அதே போன்று, முந்தைய ஆண்டுகளில் நடந்த போட்டியிலும் பல பரிசுகளை பெற்றது. குதிரை மீது மிகுந்த பாசம் வைத்து, பராமரித்து வந்தான். நீரில் மூழ்கி இறந்த மகனின் உடலை வீட்டுக்கு எடுத்து வந்து வாசலில் வைத்திருந்தோம் (அருகில் குதிரை இருந்தது). நீண்ட நேரத்துக்கு பின் எடுத்துச் சென்று உடலை அடக்கம் செய்துவிட்டு திரும்பியபோது, வீட்டில் இருந்த குதிரையும் இறந்துவிட்டது. நல்ல திடகாத்திரமான நிலையில் இருந்த குதிரை திடீரென இறக்க வாய்ப்பே இல்லை. எது எப்படியோ, மகனின் இறப்புக்கும், குதிரையின் இறப்புக்கும் தொடர்பு இருப்பதாகவே கருதுகிறோம்.இவ்வாறு, செந்தில்முருகன் தெரிவித்தார்.

.
source:dinamaalr

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

வீடியோ கன்வர்டர்

E_1281250570.jpeg

இந்த வார டவுண்லோட்
கடந்த பத்து ஆண்டுகளில் வீடியோ இயக்கும் சாதனங்களின் எண்ணிக்கையும், வகையும் அதிகரித்து உள்ளன. வீடியோ கேம் சாதனங்கள், மொபைல் போன்கள், எம்பி3 பிளேயர்கள், லேப்டாப் கம்ப்யூட்டர்கள், நெட்புக் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் என இந்தப் பட்டியல் தொடர்கிறது.
ஒவ்வொரு சாதனமும் வீடியோ பைல்களை இயக்க தனித்தனி வரையறைகளைக் கொண்டுள்ளன. இந்த சாதனங்களுக்கேற்ற பார்மட்டுகளில் வீடியோ பைல்கள் இருக்க வேண்டியது கட்டாயமாகிறது. இவற்றுடன் திரை அளவு மற்றும் ரெசல்யூசன் அளவுகளும் வீடியோ இயக்கத்திற்கு வரையறை களைத் தருகின்றன.
எனவே வீடியோ பைல்களை இந்த சாதனங்களில் இயக்க முயற்சிக்கையில், அவற்றின் பார்மட் வரையறைகளை, அந்த சாதனங்களுக்கேற்ற வகையில் மாற்றி அமைக்க வேண்டியுள்ளது. பார்மட் மாற்றம் ஓர் அவசியத் தேவையாகிவிட்ட சூழ்நிலையில், இதற்கு உதவிட பல இலவச புரோகிராம்கள், இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றில் மிக அதிகமாகப் பயன்படக் கூடிய புரோகிராம் ஹேம்ஸ்டர் பிரீ வீடியோ கன்வர்டர் (Hamster Free Video Converter) ஒன்று.
இந்த புரோகிராம் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கக் கூடியது.வீடியோ பார்மட் மாற்றம் மூன்று நிலைகளில் மிக வேகமாக மாற்றப்படுகிறது. ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வீடியோக்களை ஒரே நேரத்தில் மாற்றுகிறது.
முதலில் வீடியோ பைல்களை மொத்தமாக இதன் இன்டர்பேஸுக்குள் இழுத்து அமைத்துவிடலாம். ஏறத்தாழ அனைத்து வீடியோ பார்மட்களுக் கிடையேயும் (AVI, MPG, WMV, MPEG, FLV, HD, DVD, M2TS மற்றும் பிற) இந்த புரோகிராம் மாற்றத்தினை ஏற்படுத்தித் தருகிறது. இரண்டாவது நிலையில் மாற்றத்திற்கான வரையறைகளைத் தேர்ந்தெடுக்கிறோம். பைல் பார்மட் அடிப்படையில் மட்டுமின்றி, சாதனங்களுக்கு ஏற்ற வகையிலும் இது பார்மட்டை மாற்றித் தருகிறது. எடுத்துக் காட்டாக, ஐபேட், ஐபோன், எக்ஸ்பாக்ஸ், பி.எஸ் 3, ஆப்பிள் டிவி, பிளாக்பெரி, ஐரிவர் என சாதனங்களின் பெயர்களைக் கொடுத்தும் வீடியோ பைல்களின் பார்மட்டினை மாற்றிக் கொள்ளலாம்.
எந்த பார்மட்டில் வெளியாக வேண்டுமோ, அதற்கான வீடியோ தன்மை, ரெசல்யூசன், கோடக் பைல் ஆகியவற்றையும் தேர்ந்தெடுக்கலாம். இவை அனைத்தையும் முடித்த பின்னர்,இறுதி பட்டன் அழுத்தி, மாற்றம் மேற்கொள்ள கட்டளை இடலாம். நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டரின் செயல் வேகத்திற்கிணங்க, வீடியோ பார்மட் மாற்றம் ஏற்படுத்தப்படும்.
இந்த புரோகிராமின் சிறப்பு, வீடியோ பைல் பார்மட்டுகள் குறித்து அவ்வளவாக அறியாதவர்கள் கூட இந்த புரோகிராம் மூலம் தங்கள் வீடியோ பைல்களை மாற்றிக் கொள்ளலாம். அந்த அளவிற்கு எளிமையான வழி நடத்துதல் தரப்பட்டுள்ளன.
இதனை இலவசமாக டவுண்லோட் செய்திடhttp://videoconverter.hamstersoft.com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்ல வேண்டும். விண்டோஸ் இயக்கத்தில் 32 பிட் மற்றும் 64 பிட் இயக்கத்திற்கான தனித்தனி புரோகிராம்கள் தரப்பட்டுள்ளன. விண்டோஸ் 7 இயக்கத்திற்கும் இணைவாக மாற்றத்தை மேற்கொள்ளலாம். அத்துடன் இந்த புரோகிராம் குறித்த் தகவல்கள் 40 மொழிகளில் கிடைக்கின்றன

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized