கம்ப்யூட்டரும் தமிழும்


– டாக்டர் பெ.சந்திர போஸ் சென்னை

இந்த நூற்றாண்டின் பயன்பாட்டிற்கு வந்த கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும், மனித சமுதாயத்தின் சிந்தனைப் போக்கினையே மாற்றி அமைத்தன என்றால் அது மிகையாகாது. கம்ப்யூட்டருக்குப் பின்னர், காலம், மனிதன் நினைத்தபடி ஓடத் தொடங்கியது. உலக உருண்டை அவன் கரங்களுக்குள் இருந்து உருளத் தொடங்கியது. உலகின் எந்த மூலையையும் அவனால் பார்க்க முடிந்தது. எந்த முகவரிக்கும் அடையாளம் காட்ட முடிந்தது.

இதுவரை மொழி மட்டுமே, சமுதாயத் தொடர்பிற்கு ஒரு வழியாய் இருந்த நிலையில், கம்ப்யூட்டர் வழித் தொடர்பு அனைத்து தடைகளையும் தகர்த்தது. ஒவ்வொரு மனிதனும், தன் மொழி கம்ப்யூட்டரில் வர வேண்டும் என எண்ணி, அதற்கான முயற்சியில் இறங்கினான். உலகம் முழுவதும் பரவி இருந்த தமிழ்ச் சமுதாயம் இந்த முயற்சியில் முழு மூச்சாய் இறங்கியது. பரவிக் கிடந்த தமிழர்கள் ஆங்காங்கே அவரவர் ஆர்வத்தில் தமிழைக் கம்ப்யூட்டரில் கொண்டு வரும் முயற்சியில் இறங்கினார்கள். இதனால் பல்வேறு வகைகளில், நிலைகளில் அவர்களின் முயற்சிகள் இருந்தன. இந்த முயற்சிகள், தமிழ்ச் சமுதாயத்தினைப் போலவே, ஒருங்கிணைந்த முயற்சியாய் இல்லாமல், தெருவீதிக் கோவில்கள் போல, பலவகை வெளிப்பாடுகளாய் வெளிச்சத்திற்கு வந்தன.

1980 ஆம் ஆண்டுவாக்கில், கம்ப்யூட்டர் பயன்பாடு பெருகத் தொடங்கிய காலத்தில், டாஸ் இயக்கம் செழிப்பான ஒரு நிலையை அடைந்த காலத்தில், கனடாவில் வசித்த தமிழரான சீனிவாசன், டாஸ் இயக்கத்தில் ஆதமி என்ற சிறிய தமிழ் எடிட்டரைக் கொண்டு வந்தார். இலவசமாக அனைவருக்கும் விநியோகித்தார். அப்போதே, வேர்ட் லார்ட் என்ற டாஸ் இயக்க வேர்ட் சாப்ட்வேர் மூலம் பல மேல்நாடுகளில் பிரபலமான, பெங்களூர் சாப்ட்வேர் நிறுவனம், தமிழுக்கு பாரதி என்றொரு தமிழ் சாப்ட்வேர் தொகுப்பினைக் கொண்டு வந்து பிரபலப்படுத்தியது. தினமலர் ஆசிரியர் தன் சொந்த முயற்சியில். புனே மாடுலர் நிறுவனத்தின் துணையுடன் பல எழுத்து வகைகளை உருவாக்கி, பத்திரிக்கையாக்கத்திற்குப் பயன்படுத்தினார். விண்டோஸ் புழக்கத்திற்கு வந்த பின்னர் சீனிவாசன் ஆங்கிலம் + தமிழ்+விண்டோஸ் பெயர் இணைத்து ஆதவிண் என்றொரு தமிழ் சாப்ட்வேர் தொகுப்பினை உருவாக்கி இலவசமாகத் தந்து உதவினார்.

இதே காலக் கட்டத்தில் மலேசியா மற்றும் சிங்கப்பூரினைச் சேர்ந்த அறிஞர்கள் மற்றும் வல்லுநர்கள் துணைவன், கணியன் மற்றும் முரசு அஞ்சல் ஆகிய தொகுப்புகளைக் கொண்டு வந்தனர்.

ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பாலா பிள்ளை தமிழ் நெட் என்ற வலை அமைப்பினை ஏற்படுத்தி, தமிழர்களிடையே இந்த முயற்சிகளுக்கான ஒரு இணைய தளத்தை உருவாக்கினார். தமிழில் மின்னஞ்சல்கள் உருவாவதில் இவரின் முயற்சி முதலாவதாகவும் முன்னுதாரணமாயும் இருந்தது. பின்னர் சிங்கப்பூர் மாகோ உருவாக்கிய குளோபல் தமிழ், மலேசிய ஜேபி அமைத்த அகத்தியர், சிங்கப்பூர் பழனி கட்டமைத்த தமிழ் உலகம் ஆகிய மின்னஞ்சல் குழுக்களை, தமிழ் மின்னஞ்சல் குழுக்களின் முன்னோடிகள் எனலாம். இப்போது இணையத்தில் தமிழ் பயன்படுத்தும் குழுக்கள் பல இயங்குகின்றன. எந்த அஞ்சல் குழுவிலும் எந்த மொழியையும் பயன்படுத்தும் நிலை வந்துவிட்டது.

மலேசிய கம்ப்யூட்டர் ஆராய்ச்சியாளர் முத்து நெடுமாறன் உருவாக்கிய முரசு அஞ்சல் என்னும் தொகுப்பு இலவசமாக, இணையம் வழியாக வழங்கப்பட்டது. இது கம்ப்யூட்டர் மற்றும் இணையத்தில் தமிழைப் பயன்படுத்துவதில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. இதன் எளிமை, திறன், பயன்படுத்த வழங்கப்பட்ட இடைமுகம் அனைத்தும், தமிழ் மக்களைக் கவர்ந்திட, அதுவே தமிழின் சாப்ட்வேர் தொகுப்பாக உலகத் தமிழரிடையே உலா வந்தது. இன்றும் முன்னேறிய நிலையில் பலவகைகளில் மேம்படுத்தப்பட்டு இத்தொகுப்பினை இலவசமாகவும், கட்டணம் செலுத்தியும் பயன்படுத்தலாம். இணையத்தில் மட்டுமின்றி மின் அஞ்சல்களிலும், இன்ஸ்டண்ட் மெசேஜ் விண்டோக்களிலும் தமிழைக் கொண்டு வந்த பெருமை முரசு அஞ்சலையே சேரும். இதனை அடுத்து இணையத்தில் பயன்படுத்த வந்த தொகுப்புகளில், கனடாவைச் சேர்ந்த கலையரசன் உருவாக்கி, இலவசமாகத் தந்த, குறள் தமிழ்ச் செயலி பலராலும் மின்னஞ்சல்கள், மற்றும் பிற பயன்பாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.

தொடர்ந்து பல தமிழ் சாப்ட்வேர் தொகுப்புகள் தமிழகத்திலிருந்தும், மற்ற நாடுகளிலுருந்தும் வெளியாகின. இந்திய அரசின் சி–டாக் நிறுவனம், வட இந்திய மொழிகளுக்கான கட்டமைப்பில், தமிழையும் கொண்டு வந்தது. ஆனால் அது மக்களிடையே வரவேற்பைப் பெறவில்லை. வர்த்தக ரீதியிலும் பல நிறுவனங்கள் தமிழ் சாப்ட்வேர் தொகுப்புகளை வெளியிட்டன. இதில் புனேயைச் சேர்ந்த மாடுலர் நிறுவனத்தின் லிபி சொல் தொகுப்பு, தமிழை அச்சுப் பணிகளில் பயன்படுத்துவோருக்கு மிகவும் உதவியாக இருந்தது; இருந்து வருகிறது.

ஆனால் இவற்றிற்கிடையே எழுத்து வகை, அதனை கம்ப்யூட்டருக்கென அமைக்கப்படும் என்கோடிங் எனப்படும் கட்டமைப்பு வகையில் ஒற்றுமை இல்லாததால், தமிழில் அமைக்கப்பட்ட ஆவணங்கள், தாங்கள் உருவாக்கப்பட்ட எழுத்து வகைகளுடன் வந்தால் தான் படித்து அறிய முடியும் என்ற நிலை தொடர்ந்து தமிழுக்கான தடுப்புக் கட்டையாக இருந்து வந்தது.

1999 ஆம் ஆண்டில், தமிழக முதல்வராய் இருந்த கருணாநிதி அவர்களின் முயற்சியால் கூட்டப்பட்ட இணைய மாநாடு தமிழ்நெட் 99,இதற்கு ஒரு தீர்வுகாணும் முயற்சியில் தீவிரமாக இறங்கியது. அந்த மாநாட்டுக் கருத்தரங்கத்தில் அமைக்கப்பட்ட குழு, டாம் மற்றும் டாப் என்னும் கட்டமைப்பில் உருவான எழுத்துவகைகளைப் பரிந்துரை செய்தது. வெளிநாட்டில் வாழும் தமிழர்களால்,திஸ்கி என்ற வகையும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் உடன் இருந்தது. ஆனால் இந்த முடிவுகளை எல்லாம் பற்றிக் கவலைப்படாத தமிழ் உலகத்தினர் தொடர்ந்து தாங்கள் கொண்டிருந்த எழுத்து வகைகளிலேயே, இணைய தளங்களை உருவாக்கி, அவற்றைப்படிக்க தங்களின் எழுத்துருக்களை இறக்குவதனைக் கட்டாயமாக வைத்திருந்தனர்.

தொடர்ந்து வந்த கம்ப்யூட்டர் அறிவியல் வளர்ச்சி, இந்த சிக்கல்களுக்குத் தானாக ஒரு முடிவினைக் கண்டது. இது உலகின் அனைத்து மொழிகளுக்குமான ஒரு தீர்வாக இருந்தது. அதுவே யூனிகோட் ஆகும். ஏற்கனவே இருந்த எழுத்து கட்டமைப்புகள் எல்லாம் 8 பிட் என்னும் குறுகிய அமைப்பில் இருந்து வருகையில், யூனிகோட் 32 பிட் கட்டமைப்பில் உருவானதால், எழுத்துக்களை நாம் விரும்பிய வகையில் அமைக்கின்ற வசதி, நமக்குக் கிடைத்தது. இதில் கிடைத்த தமிழ் எழுத்து அமைப்பு முறை, பலரால் குறை சொல்லப்படும் வகையில் இருந்தாலும், இன்றைய நிலையில், அனைத்து தமிழரையும் இணைக்கும் பாலமாக தமிழ் யூனிகோட் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே, தமிழ்ப் பயன்பாடு இணையத்திலும், கம்ப்யூட்டர்களிலும் பெரும் அளவில் பெருகி உள்ளது. இன்றைக்கு இருக்கின்ற வலைமனைகள் என்னும் பிளாக்குகளே இதற்கு எடுத்துக் காட்டுகளாகும்.

மேலும் கூகுள், யாஹூ போன்ற இணையத்தில் இயங்கும் நிறுவனங்கள் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தமிழைத் தங்கள் வலையகங்களில் பயன்படுத்த வசதி செய்து கொடுத்து வருகின்றனர். தமிழிலேயே தங்களின் தளங்களைத் தந்துள்ளனர். பயன்படுத்துபவர்கள் தமிழைப் பயன்படுத்த இடைமுகங்களை ஏற்படுத்தித் தந்துள்ளனர்.

தமிழக அரசு, கம்ப்யூட்டர் கல்வியைக் கற்பதில் மொழி ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில், +1,+2 வகுப்புகளில் கம்ப்யூட்டர் பாடங்களை அனைத்து தமிழ் மாணவர்களும், குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற இலக்குடன் தமிழ் வழியில் கம்ப்யூட்டர் பாடங்களைக் கற்றுக் கொடுக்கத் தொடங்கியது. இதற்கானப் பாட நூல்களை தமிழக அரசின் பாட நூல் கழகம் தமிழில் 1996 முதல் வெளியிட்டு வருகிறது.

தமிழில் பல கம்ப்யூட்டர் நாளிதழ்கள் வெளி வந்தன. முதன்முதலாக கம்ப்யூட்டர் பயன்பாட்டினை மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற இலக்குடன், 1992 முதல் கம்ப்யூட்டர் குறித்து,தினமலர் நாளிதழ், தமிழில் கட்டுரைகளைத் தந்தது. மக்கள் பாராட்டுதலை மிகப் பெரிய அளவில் பெற்றதனாலும், அவர்களின் தொடர்ந்த வேண்டுகோள்களினாலும், வாரம் ஒரு முறை சிறிய இணைப்பு நூல் ஒன்றினை வெளியிட்டது. இலவசமாகத் தமிழில் கம்ப்யூட்டர் குறித்து இவ்வாறு இணைப்பு நூல் வழங்கும் ஒரே தமிழ் நாளிதழ் தினமலர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. கம்ப்யூட்டர் குறித்த முறையான கல்வி இல்லாத பல்லாயிரக்கணக்கானோர், தங்கள் வாழ்க்கை ஆதாரத்திற்கும், வேலைகளிலும் கம்ப்யூட்டரைப் பயன்படுத்த வேண்டிய நிலையில், கம்ப்யூட்டர் மலர் பெரும் அளவில் அவர்களுக்குக் கை கொடுத்தது.

இன்று தமிழ்ப் பத்திரிக்கைகள் பல தங்களின் இணைய பதிப்பையும் வெளியிட்டு வருகின்றன. தமிழ் யூனிகோட் எழுத்து முறையினை முதலில் பயன்படுத்தித் தன் இணையப் பதிப்பினை வெளியிட்ட பெருமை தினமலரையே சேரும். இதனால் உள் நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் மிக எளிதாகத் தமிழகச் செய்திகளை அறிந்து கொள்ள முடிகிறது.

எந்த பிரவுசரைப் பயன்படுத்தி, எந்த தளத்தில் உலா வந்தாலும், இணையத்தில் இருக்கையில், செய்திகளைத் தமிழில் தரும் டூல் பார் சாதனத்தினையும் தினமலரே முதலில் தந்தது. இன்னும் தொடர்கிறது. இதனால் உலகெங்கும் வாழும் தமிழர்கள், தங்கள் தாய்த் தமிழ்த் திரு நாட்டில் என்ன நடக்கிறது என்பதனை உடனுக்குடன் அறிய முடிகிறது.

கம்ப்யூட்டர் இன்று உலக மக்களை நேயத்துடன் இணைக்கும் பாலமாக மாறி வருகிறது. அதில் தமிழ் பயன்படுத்தப்படுகையில், கம்ப்யூட்டர் தமிழ் தனது மக்களைப் பாசத்துடன் சேர்க்கும் கருவியாக மாறுகிறது. இனி கம்ப்யூட்டர் என்பது தமிழ் மக்களுக்குத் தமிழில் தான் அமையும் என்ற நிலை விரைவில் உருவாகும் என்பதில் ஐயமேதும் இல்லை. இந்த முயற்சியில் இப்போது நடைபெற்று வரும் செம்மொழி மாநாடு போன்ற நிகழ்வுகள் நிச்சயம் கை கொடுக்கும்.

கம்ப்யூட்டரில் தமிழைக் கொண்டு வரும் முயற்சியில் பாடுபட்ட, தொடர்ந்து உழைத்துவரும் ஆர்வலர்கள் அனைவருக்கும் உற்சாகம் தந்து உரமூட்டுவோம்.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s