Daily Archives: ஜூன் 10, 2010

பள்ளிக்கூடம் போகாத சிறுவன்: ஐ.ஐ.டி., நுழைவு த்தேர்வில் சாதனை

large_15877.jpg

புதுடில்லி : பள்ளிக்கூடத்திற்கே போகாத 14 வயது சிறுவன், ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வில், இந்திய அளவில் 33வது இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளான்.ஐ.ஐ.டி.,யில் சேருவதற்கு வயது வரம்பு எதுவும் இல்லையென்றாலும், பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். ஆனால், பள்ளிக்கூடத்திற்கே போகாமல், வீட்டிலிருந்தபடியே 10ம் வகுப்பு வரை படித்த, ஷால் கவுசிக் என்ற 14 வயது சிறுவன், ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வில் இந்திய அளவில் 33வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளான்.

ஷாலிடம் உள்ள அபூர்வ திறமையை கண்டு, அவன் தாய் ருச்சி கவுசிக், டாக்டர் தொழிலை விட்டுவிட்டு, பல்வேறு விதங்களில் அவனை ஊக்கப்படுத்தியுள்ளார். ஷாலின் தந்தை ராணுவத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.கடந்த 2006ம் ஆண்டு பள்ளியில் சேர்ந்த ஷால், 2008 ம் ஆண்டில், 10ம் வகுப்பை முடித்து விட்டான்.தனது லட்சியம் குறித்து ஷால் கூறுகையில், "எனக்கு இன்ஜினியராவதில் விருப்பமில்லை. இயற்பியல் விஞ்ஞானி ஐன்ஸ்டீனை போன்று, இயற்பியல் மேதையாக வேண்டும்’ என்று தெரிவித்துள்ளான்.

இதுதொடர்பாக, ருச்சி கவுசிக் கூறியதாவது:ஷாலிடம், எதையும் உடனடியாக புரிந்து கொள்ளும் அபூர்வ திறமை இருப்பதை, அவன் குழந்தையாக இருந்தபோதே கண்டுபிடித்தேன். பள்ளிக்கூடத்தில் கற்றுத் தரப்படும் பாடங்கள், அவன் அறிவு பசிக்கு சோளப்பொறி என்பதை உணர்ந்தேன்.எனவே, அவனை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பும் எண்ணத்தை கைவிட்டுவிட்டு, 12 ஆண்டுகளாக, அவனுக்கு நானே வீட்டில் பாடங்களை சொல்லிக் கொடுத்தேன். இதற்காக, எனது டாக்டர் தொழிலை விட்டுவிட்டேன். இதற்காக, சமூகத்தில் நான் மிகப்பெரிய சிக்கல்களையும் சந்தித்திருக்கிறேன். அதையெல்லாம் மறக்கும் விதத்தில், நல்ல பலன் கிடைத்திருப்பது மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது.ஷால் எப்போதும், ஒரே விதமான பாடத்தை படிக்க மாட்டான். சில நேரங்களில் புவியியல் தொடர்பாக படிப்பான்; சில நேரங்களில் வரலாறு. போரடித்தால் நாவல்களை தொடர்ந்து படித்துக் கொண்டிருப்பான். சார்லஸ் டிக்கின்ஸ் நாவல்களை விரும்பி படிப்பான். அவன் படிப்பதற்காக 15 லட்ச ரூபாய் செலவில், வீட்டில் நூலகம் ஒன்றை அமைத்து கொடுத்திருக்கிறேன். இந்த நூலகத்தில் 2,000 புத்தகங்கள் இருக்கின்றன. அவை அனைத்தையும், ஷால் படித்து முடித்துவிட்டான். இந்திய புராணக் கதைகளை படிப்பதில் அவனுக்கு நிறைய ஆர்வம். அதேபோன்று, எகிப்தியர்களின் வரலாறுகளையும் விரும்பி படிப்பான்.இவ்வாறு ருச்சி தெரிவித்தார்.

ஷாலின் தங்கை சரசுக்கு ஒருவிதமான மறதி நோய் உள்ளது. எனினும், அவளுக்கும், ஷாலை போலவே வீட்டிலேயே ருச்சி பாடம் சொல்லித் தருகிறார்.

ஷாலுக்கு ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்கள் கூறியதாவது:ஷால் அதிபயங்கர புத்திசாலி. மிகப்பெரிய சிக்கலான கணக்குகளைக் கூட, பேப்பர் பேனா உதவியின்றி, மனக்கணக்கு போட்டு, சில வினாடிகளில் பதில் சொல்லிவிடுவான். எங்களிடமிருந்து அவன் கற்றுக் கொண்டதை விட, நாங்கள் தான் அவனிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டோம்.இவ்வாறு கூறி அவர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

இந்த வார இணையதளங்கள்

E_1274527458.jpeg

மாணவர்களுக்கான இலவச இ-நூல்கள்

+2 முடிவு வந்துவிட்டது. மாணவர்கள் தாங்கள் சேரப் போகும் பொறியியல், மருத்துவம், வேளாண்மை மற்றும் கலை அறிவியல் பட்ட வகுப்புகள் குறித்து பலவகைகளிலும் தகவல்களைத் திரட்டி ஆய்வு செய்து கொண்டிருப்பார்கள். தாங்கள் சேரப் போகும் பாடப்பிரிவுகளில் என்னவெல்லாம் பாடங்கள் இருக்கும், இவற்றிற்கான நூல்களை எங்கு வாங்கலாம் என்றும் சிந்திக்கத் தொடங்குவார்கள். குறிப்பாக பொறியியல் மாணவர்கள், பெரிய நகரங்களில் இயங்கும் புக் பேங்க் எனப்படும் புத்தக வங்கிகளில் பணம் செலுத்தி நூல்களைப் பெறும் வழிகளை அறிந்து அவற்றை நாடுவார்கள். அல்லது சீனியர் மாணவர்கள் படித்த நூல்களை வாங்கிப் படிக்கத் தொடங்குவார்கள். கூடுதலாக நூலகத்தில் உள்ள நூல்களையும் எடுத்துப் படிக்கத் தொடங்குவார்கள்.

இவர்களுக்கு இணையமும் உதவி செய்கிறது. பல தளங்கள் நூல்களை இ–நூல்களாக, பி.டி.எப். பார்மட்டில் தருகின்றன. இவை பெரும்பாலும் இலவசமாகவே கிடைக்கின்றன. இவற்றை டவுண்லோட் செய்து, சிடிக்களில் அல்லது பிளாஷ் ட்ரைவ்களில் பதிந்து, நண்பர்களுக்குள் பகிர்ந்து கொள்ளலாம். முக்கிய பக்கங்களையோ அல்லது நூல் முழுவதையுமோ, அச்சிட்டு எடுத்து வைத்துப் படிக்கலாம்.

இவ்வகையில் கீழ்க்காணும் தளங்கள் சிறப்பாக இயங்குவதனை அறிய முடிந்தது. அவை:
1. www.getfreeebooks.com இலவசமாக நூல்களைத் தரும் தளம் இது. எத்தனை நூல்களை வேண்டு மானாலும் டவுண்லோட் செய்து கொள்ளலாம். இணையம் முழுவதும் தேடிப் பார்த்து அனைத்து இ–புக்குகளையும் இங்கு வெளியிட்டுள்ளனர். சில நூல்களை அவர்களே தயாரித்து வழங்குகின்றனர். நீங்கள் சிறப்பானது என்று எண்ணும் இ–புக் இந்த தளத்தில் இல்லையா? இந்த தளத்தின் அட்மினிஸ்ட்ரேட்டருக்கு இமெயில் மூலம் தெரிவித்தால் அவர் அதனைத் தேடி, எடுத்து பதிந்துவிடுவார்.
2. அடுத்ததாகக் குறிப்பிட வேண்டிய தளம் www.freeebooks.net. இதில் உள்ள நூல்களில் எத்தனை நூல்களை வேண்டுமானாலும் இலவசமாக டவுண்லோட் செய்திடலாம். உங்களுக்கு வேண்டிய உதவியினைத் தந்து தேவையான பொருளில் உள்ள நூல்களைக் காட்டுகிறது. வகைப்படுத்தி தரப்படுவதால், மாணவர்கள் தேடும் நேரம் மிச்சமாகிறது.
3. www.ebooklobby.com என்ற முகவரியில் உள்ள இந்த தளம் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. இந்த தளத்தில் நூல்கள் அருமையாக வகைப்படுத்தப்படுள்ளன. வர்த்தகம், கலை, கம்ப்யூட்டிங், கல்வியியல் என அத்தனை பிரிவுகளிலும் நூல்கள் உள்ளன. எந்த வகையில் நூல்களைத் தேடுகிறீர்களோ அதனை கிளிக் செய்து உங்களுக்கான நூல்களை எடுக்கலாம், படிக்கலாம். பதிந்து வைத்துக் கொள்ளலாம்.

மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்களும் இந்த தளங்களை நாடித் தாங்கள் வகுப்புகளில் மாணவர்களுக்குக் கற்றுத் தர இந்த நூல்களை நாடுகின்றனர். பன்னாட்டளவில் உள்ள சிறந்த ஆசிரியர்களின் நூல்களை இந்த தளங்கள் வழங்குவதால், ஒரு பொருளில் மிகச் சிறந்த கருத்துக்கள் மாணவர்களுக்கு இந்த நூல்கள் வழியாகக் கிடைக்கின்றன. மாணவர்கள் அனைவரும் கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய தளங்கள் இவை.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized