Daily Archives: ஜூன் 1, 2010

எக்ஸெல் டிப்ஸ்….

E_1275212861.jpeg
எக்ஸெல் பதிப்பு எண் என்ன?

நீங்கள் வேறு ஒருவரிடம் இருந்து கம்ப்யூட்டரைப் பரிசாகவோ, இரண்டாவது சிஸ்டமாக விலைக்கோ, வாங்கியிருந்தால், அதில் உள்ள எக்ஸெல் தொகுப்பு பதிப்பு எண் என்ன என்று தெரியாமல் இருப்பீர்கள். அதனால் அதனைப் பயன்படுத்த முடியாத நிலை நிச்சயம் ஏற்படாது. ஆனால் பல டிப்ஸ்கள் அல்லது உதவிக் குறிப்புகளைப் படிக்கும்போது, அவற்றை ஒவ்வொரு பதிப்பிற்கும் ஒரு மாதிரியாகத் தந்திருப்பார்கள். அப்படி கிடைக்கும்போது, எந்த வகைக் குறிப்பினை உங்கள் கம்ப்யூட்டரில் பின்பற்ற வேண்டும் என்று அறிவது, நிச்சயமாய், உங்களிடம் உள்ள எக்ஸெல் தொகுப்பின் பதிப்பு எண் என்ன என்பதை அறிந்து கொள்வதன் மூலமாகத்தான் இருக்கும். அப்படியானால், எக்ஸெல் தொகுப்பின் பதிப்பு எண் என்ன என்பதனை எப்படி அறிந்து கொள்வது? இதற்குச் சில வழிகள் உள்ளன.

முதலாவதாக, எக்ஸெல் தொகுப்பினைத் தொடங்குகையில், உங்கள் சிஸ்டத்தின் இயக்க வேகத்தின் அடிப்படையில், எக்ஸெல் எந்த பதிப்பினைச் சார்ந்தது என்று ஒரு பிளாஷ் வேகத்தில் காட்டப்படும். இதனை நிறுத்திப் பார்ப்பது மிகவும் சிரமமான காரியம்.

ஆனால், எக்ஸெல் தொகுப்பினைத் தொடங்கிய பின் இதனை அறிவது சற்று எளிதானது. நீங்கள் எக்ஸெல் 2007க்கு முந்தைய பதிப்பினைப் பயன்படுத்துவதாக இருந்தால், ஹெல்ப் மெனுவில் இருந்து About Microsoft Excel என்ற பிரிவைப் பெறவும். இங்கு எக்ஸெல் About Microsoft Excel என்ற டயலாக் பாக்ஸைக் காட்டும். இதில் நீங்கள் பயன்படுத்தும் எக்ஸெல் பதிப்பு எண், அப்டேட் பைல் எண் மற்றும் யாருக்கு அதனைப் பயன்படுத்த லைசன்ஸ் வழங்கப்பட்டுள்ளது என்ற அனைத்து விபரங்களும் இருக்கும்.

நீங்கள் பயன்படுத்துவது எக்ஸெல் 2007 எனில், இதே தகவலைப் பெறுவது சற்று சுற்று வழியாக இருக்கும். முதலில் ஆபீஸ் பட்டனைக் கிளிக் செய்திடுங்கள். பின்னர், எக்ஸெல் ஆப்ஷன்ஸ் (Excel Options) என்ற பட்டனைக் கிளிக் செய்திடவும். இப்போது எக்ஸெல், Excel Options என்ற டயலாக் பாக்ஸைக் காட்டும். இந்த பாக்ஸின் இடதுபுறத்தில், Resources என்பதைக் கிளிக் செய்திடவும். பின்னர் About பட்டனைக் கிளிக் செய்திடவும். இங்கு About Microsoft Office Excel என்ற டயலாக் பாக்ஸ் கட்டம் காட்டப்படும். இந்த டயலாக் பாக்ஸின் மேலாக, நீங்கள் பயன்படுத்தும் எக்ஸெல் தொகுப்பின் பதிப்பு எண் காட்டப்படும். இதனைக் குறித்துக் கொண்டு, குளோஸ் பட்டன் அழுத்தி டயலாக் பாக்ஸை மூடலாம்.
எக்ஸெல் டெக்ஸ்ட் காப்பி:

எக்ஸெல் தொகுப்பிலிருந்து, டெக்ஸ்ட்டை காப்பி செய்து வேர்ட் தொகுப்பில் பேஸ்ட் செய்திடுகையில், டெக்ஸ்ட்டில் பல மாற்றங்களை எடிட் செய்திட வேண்டிய சூழ்நிலையைப் பலர் சந்தித்திருப்பீர்கள். இது ஒரு எரிச்சல் உண்டாக்கும் நிலையாகும். இதனால் காப்பி / பேஸ்ட் செய்திடாமல் மீண்டும் டெக்ஸ்ட் அமைக்கும் முயற்சியே தேவலாம் என்று எண்ணலாம். இங்கு நாம் சரியான வழியை விட்டுவிடுகிறோம். அதனால் தான் இந்த வெட்டி வேலை. சரியான வழி எது என்று காணலாம்.

முதலில் எக்ஸெல் தொகுப்பில் உள்ள டெக்ஸ்ட், அது எவ்வளவு பெரிதாக இருந்தாலும், காப்பி செய்து கொள்ளுங்கள். பின் வேர்ட் தொகுப்பினைத் திறந்து கொண்டு, பேஸ்ட் செய்திட வேண்டிய டாகுமெண்ட் திறந்து, ஒட்ட வேண்டிய இடத்திற்குச் செல்லவும்; அல்லது புது டாகுமெண்ட் ஒன்றைத் திறந்து கொள்ளவும். பின் வழக்கமாக நாம் செய்திடும் கண்ட்ரோல் +வி அல்லது எடிட் மெனுவில் பேஸ்ட் தேர்ந்தெடுக்கும் செயல்பாட்டினை மேற்கொள்ள வேண்டாம்.

இனி எடிட் மெனு திறக்கவும். கீழ் விரியும் மெனுவில் Paste Special என்று ஒரு பிரிவு இருக்கும். இதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிளிக் செய்தவுடன் கிடைக்கும் டயலாக் பாக்ஸினைப் பார்க்கவும். இதில் Microsoft Excel Worksheet Object என்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். இப்போது டெக்ஸ்ட் எந்த பிரச்னைக்கும் இடம் இன்றி ஒட்டப்படுவதனைப் பார்க்கலாம். இதற்கான டெக்ஸ்ட் பாக்ஸிலேயே, அதனை ரீசைஸ் செய்வதற்கான ஹேண்டில்களையும் காணலாம். இதனைப் பயன்படுத்தி டெக்ஸ்ட்டை நகர்த்தி அமைக்கலாம்.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

கார் பேன்சி எண்ணுக்கு 10 லட்ச ரூபாய் : பஞ்ச ாப் விவசாயி சாதனை

serif-sample.jpg

சண்டிகர் : தான் வாங்கிய காரின் மொத்த விலையில், பாதி விலை கொடுத்து அதன் பேன்சி எண்ணை வாங்கி இருக்கிறார் ஒரு விவசாயி என்றால், உங்களால் நம்பமுடிகிறதா? ஆம். இப்படி நடந்திருப்பது வெளிநாட்டில் அல்ல; இந்தியாவில் தான்.

பஞ்சாப்பை சேர்ந்த விவசாயி நரேந்தர்சிங் ஷெர்கில். இவருக்கு, காரார் மற்றும் குராலி நகரங்களில், பல ஏக்கர் கணக்கில் நிலங்கள் உள்ளன; ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவர் சமீபத்தில், 20 லட்ச ரூபாய் கொடுத்து, "டொயோட்டா பார்ச்சூனர்’ கார் வாங்கியுள்ளார். பஞ்சாப் மாநில கார் பதிவு மற்றும் உரிமம் வழங்கும் ஆணையம், கார்களுக்கான 50 பேன்சி எண்களை ஏலத்தில் விட்டது. இந்த ஏலத்தில் சிங்கும் கலந்து கொண்டார். 0001 என்ற எண்ணை, என்ன விலை கொடுத்தாவது வாங்கி விட வேண்டும் என்பது இவரது ஆசை. அந்த எண்ணுக்கு ஆரம்ப விலையாக 25 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஏலத்தில் தொகை அதிகரித்து கொண்டே போனது. இறுதியில் சிங்கும், இன்னொருவரும் தான் போட்டியில் இருந்தனர். அதிகபட்ச தொகையாக, ஐந்தரை லட்ச ரூபாய் வரை போனதும், சிங், அந்த எண்ணை 10 லட்ச ரூபாய்க்கு, ஏலத்தில் எடுப்பதாக அறிவித்தார்.

குறிப்பிட்ட தொகையை கொடுத்து, அந்த எண்ணை வாங்கிவிட்டார். "அந்த எண்ணை வாங்க வேண்டும் என்பதுதான் எனது கனவு. இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்’ என்று தெரிவித்தார் சிங். உரிமம் வழங்கும் ஆணையம், இந்த ஏலம் மூலம், 39 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் சம்பாதித்தது. 0001 க்கு அடுத்தபடியாக, 0009 என்ற எண், நான்கு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும், 0003 என்ற எண் இரண்டரை லட்ச ரூபாய்க்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டன. பள்ளி ஆசிரியையான சிங்கின் மனைவி, இவ்வளவு தொகை கொடுத்து, காருக்கு எண் வாங்க வேண்டுமா என்று புலம்பி கொண்டிருக்கிறாராம்.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம்

large_7121.jpg

அவினாசி : மழை பொழிய வேண்டி, அவினாசி அருகே குமாரபாளையத்தில் தவளைகளுக்கு திருமணம் செய்யப்பட்டது. குமாரபாளையம் ஆதிதிராவிடர் காலனியில் இந்த வினோத திருமணத்தில், தண்டுக்காரன்பாளையம், அவிநாயிபுதூர், தாளக்கரை, தொட்டியனூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். திருமணத்துக்காக இரு தவளைகள் தயாராக பிடித்து வைக்கப்பட்டிருந்தன.

நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு நிகழ்ச்சிகள் துவங்கின. கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, ஆண் மற்றும் பெண் தவளைக்கு தனியாக பச்சைத் தென்னை ஓலைகளால் குடிசை கட்டப்பட்டது. குமாரபாளையம் புதுக்காலனியினர் மணமகள் வீட்டாராகவும், பழைய காலனியினர் மணமகன் வீட்டாராகவும் இருந்தனர். திருமண நிகழ்ச்சியில் செய்யப்படுவதைப் போலவே நிச்சயதார்த்தம், முகூர்த்த கால் நடுதல் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் நடந்தன. நேற்று காலை 6 மணி முதல் மீண்டும் பூஜைகள் செய்யப்பட்டு, நாதஸ்வர மேளம் முழங்க 6.30 மணிக்கு பெண் தவளைக்கு, ஆண் தவளையை வைத்திருந்தவர் தாலி கட்டினார். மணமகள் தவளைக்கு சீதனமாக சிறிய மாலையும், துண்டு துணியும் அணிவிக்கப்பட்டது. திருமணத்தையடுத்து, இரு வீட்டாரும் மணமக்களுடன் ஊர்வலமாக தண்டுக்காரன்பாளையம் குளத்துக்குச் சென்றனர். முற்றிலும் வற்றிப் போய், செடி, கொடி, முட்புதர்களுடன் மண்டிக் கிடந்த குளத்திற்கு நடுவில், சிறிய குழி வெட்டி தண்ணீர் நிரப்பினர். மணமக்களுக்கு பூஜை செய்யப்பட்டு, தேங்காய், பழம் உடைக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. கூடியிருந்த இரு வீட்டாரும் ஒரே குரலில், "மழை பெய்ய வேண்டும்’ என்று கூறி, தவளைகளை அக்குழியில் விட்டனர். ஒரே "ஜம்ப்’ அடித்த இரு தவளைகளும் அங்கிருந்து "எஸ்கேப்’ ஆகிவிட்டன. மணமக்கள் வீட்டார் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கலைந்து சென்றனர்.

தவளைகளுக்கு திருமணம் நடத்தி வைத்த மணியாட்டி ரங்கசாமி கூறுகையில், ""கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், இதேபோல் மழை பெய்யவில்லை. உடனே தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்தோம்; நன்றாக மழை பெய்து குளம் நிரம்பியது. அதே போல் இப்போதும் செய்தோம். எங்களது பிரார்த்தனையால், கண்டிப்பாக மழை பெய்யும் என்று நம்புகிறோம்,” என்றார்.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized