எரிகிறது ஜம்மு-காஷ்மீர்!——–அமர்நாத் விவகாரத்தின் நிஜப்பின்னணி


 
 21.08.08  ஹாட் டாபிக்
ரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுக்க. அதுவும் பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு. மாநிலம் தழுவிய அளவில் கலவரம் வெடித்துக் கொண்டிருக்கிறது. 

எங்கு பார்த்தாலும் ஊர்வலங்கள். போராட்டங்கள். உண்ணாவிரதங்கள். இத்யாதி இத்யாதிகள். ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஒருமாத காலமாக விடாமல் வீசிக்கொண்டிருக்கும் புயலுக்குக் காரணம் இரண்டு வார்த்தைகள். அவை, நிலம் மற்றும் மதம்.

அரசுக்குச் சொந்தமான வனப்பகுதியில் இருந்து சிறுபகுதியை எடுத்து அங்குள்ள கோயிலுக்கு வருகின்ற பக்தர்களும் பயணிகளும் பயன்படுத்திக் கொள்வதற்கு வசதியாக `ஸ்ரீ அமர்நாத் ஷ்ரைன் போர்ட்’ என்ற அமைப்புக்கு தாற்காலிகமாகக் குத்தகைக்கு வழங்கியது மாநில அரசு. கொடுத்தது குலாம் நபி ஆசாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு. இதற்கு அங்கு பெரும்பான்மையாக வசித்துக் கொண்டிருக்கும் இஸ்லாமியர்களின் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவிக்க, இருதரப்புக்கும் இடையே கடுமையான மோதல்கள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

இந்தக் கூத்தில் மாநிலத்தில் ஆட்சி செய்த காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்துவிட்டது. தற்போது அங்கே ஆளுநர் ஆட்சி அமலில் இருக்கிறது. பிரச்னை வெடித்தபிறகு பழைய ஆளுநர் மாற்றப்பட்டு, தற்போது புதிய ஆளுநர் அதிகாரத்தில் இருக்கிறார். தொடர்ச்சியான மோதல்களில் இதுவரை பதின்மூன்று உயிர்கள் பலி கொடுக்கப்பட்டிருக்கின்றன. இருநூறுக்கும் மேற்பட்டோர் அடிபட்டு, உதைபட்டு மருத்துவமனைகளில் முடங்கிக் கிடக்கின்றனர்.

ஒரு மாநில அரசு, ஒரு மாநில ஆளுநர் மற்றும் பதின்மூன்று உயிர்களைக் காவு வாங்கும் அளவுக்கு ஜம்மு-காஷ்மீரில் என்ன நடந்து கொண்டிருக்கிறது?

இஸ்லாமியர்களுக்கு மெக்கா எத்தனை புனிதமான தலமோ, அதைப்போலவே இந்துக்களுக்கு அமர்நாத். அங்கிருக்கும் பனி லிங்கத்தை ஆண்டுக்கு ஒருமுறை தரிசனம் செய்வது இந்துக்களின் நடைமுறை. அதுவும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாத்திரமே இந்தப் பனி லிங்கம் காணக் கிடைக்கும். முன்பெல்லாம் ஆகஸ்ட் மாதம் மட்டுமே லிங்கத்தைத் தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், லிங்கத்தைத் தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை வருடா வருடம் ஏறுமுகத்திலேயே இருந்ததால், சமீபகாலமாக பார்வைக்கான கால அளவு ஒரு மாதம் கூடுதலாக அனுமதிக்கப்பட்டது.

வெறும் ஐம்பதாயிரம், அறுபதாயிரம் என்ற அளவில் இருந்த பக்தர்கள் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை தற்போது லட்சங்களைத் தொட்டுவிட்டது. ஆனால், அவர்களுக்கான வசதிகள் எதுவும் அத்தனை போதுமானதாக இல்லை. குறிப்பாக, தங்கும் வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் போன்றவை. போதாக்குறைக்கு தீவிரவாதிகளின் நடமாட்டம் வேறு. எப்போது வேண்டுமானாலும் ஆபத்து நேரலாம் என்ற நிலை. இத்தனை பிரச்னைகள் இருந்தபோதும் அமர்நாத்துக்கு வருகின்ற பக்தர்களின் எண்ணிக்கை துளியும் குறையவில்லை.

இந்நிலையில், அமர்நாத் ஆலயத்தை நிர்வகித்துவரும் ஸ்ரீ அமர்நாத் ஷ்ரைன் போர்ட் நிர்வாகம், மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தது. `ஆலயத்துக்கு வந்து செல்லும் பயணிகளுக்கு தங்குமிடங்களை அமைத்துக்கொள்ள வனப்பகுதியிலிருந்து கொஞ்சம் இடம் கொடுத்தால் வசதியாக இருக்கும்’. தலையசைத்த மாநில அரசு ஆகவேண்டிய காரியங்களைச் செய்தது.

இறுதியாக, கடந்த மே 26, 2008 அன்று நூறு ஏக்கர் நிலம் அமர்நாத் ஷ்ரைன் போர்டுக்கு வழங்கப்பட்டது.

அவ்வளவுதான். வானத்துக்கும் பூமிக்குமாகக் குதிக்கத் தொடங்கிவிட்டனர் ஜம்மு-காஷ்மீரில் வசிக்கும் இஸ்லாமியர்களின் பிரதிநிதிகள். அரசுக்கு எதிராக ஆளாளுக்குக் கூச்சல் போடத் தொடங்கினர். `எங்கள் நிலத்தை எடுத்து எதிரிக்குக் கொடுப்பதா?’ என்று ஒருவர் கேட்டார். இன்னொருவர், `நிலத்தைக் கொடுத்ததால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்’ என்று பயமுறுத்தினார். முக்கிய எதிர்க்கட்சிகளான ஃபரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன நிலத்தைக் கொடுத்ததற்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன.

நிலத்தை விட்டுக்கொடுத்ததன்மூலம் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் சுயாட்சிக்கே ஆபத்து நேர்ந்துவிட்டதாக பிரிவினை பேசும் இயக்கங்கள் உரத்த குரலில் உறுமத் தொடங்கின.

மேலும் இந்துக்களைக் கொண்டுவந்து ஜம்மு-காஷ்மீரில் குடியேற்றம் செய்யும் நடவடிக்கைக்கான முதல்படியே இந்த நில ஒதுக்கீடு என்ற கருத்தையும் சில அமைப்புகள் முன்வைத்தன. ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் ஒட்டுமொத்த மாநிலத்தையும் அசுத்தப்படுத்திவிடுவார்கள் என்றும் அச்சம் தெரிவித்தனர்.

எதிர்ப்பு ஜோதியில் காங்கிரஸின் கூட்டணிக் கட்சியாக இருந்த மெஹ்பூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சியும் இணைந்தது. இத்தனைக்கும் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்தான் மாநில துணை முதல்வர். `நிலத்தைத் திரும்பப் பெறு, இல்லையென்றால் அரசுக்கான ஆதரவு திரும்பப் பெறப்படும்’ என்றார் மெஹ்பூபா. அரசின் பதிலை எதிர்பார்க்காமல் ஆதரவை வாபஸ் வாங்கினார். அரசுக்கு எதிர்ப்பு வலுத்துக்கொண்டே போக, நிலைமையைச் சமாளிக்க நிலத்தைத் திரும்பப் பெற்றது ஆசாத் அரசு. ஆனாலும் அரசுக்கு மீண்டும் ஆதரவளிக்க முடியாது என்று மெஹ்பூபா அறிவித்ததால், பதவியை ராஜினாமா செய்தார் முதல்வர் குலாம் நபி ஆசாத்.

இந்நிலையில், ஹூரியத் போன்ற இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அமர்நாத்துக்கு வந்த பக்தர்கள் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு பா.ஜ.க. மற்றும் வி.ஹெச்.பி தொண்டர்கள் இஸ்லாமியர்களைத் தாக்கத் தொடங்கினர். சாதாரண மோதல் மெல்ல மெல்லக் கலவரமாக உருமாறியது. அடக்கப் பாய்ந்த காவல்துறை துப்பாக்கியைத் தூக்க, ஆறு பேர் பலியாகினர். எழுபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஆசாத் பதவி விலகியதையடுத்து, மாநிலத்தில் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஆனால்  நிலம் கொடுத்ததற்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்த மாநில ஆளுநர் எஸ்.கே. சின்ஹாவை உடனடியாக மாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. தலையசைத்த மத்திய அரசு, சின்ஹாவின் இடத்துக்கு என்.என். வோரா என்பவரைக் கொண்டுவந்தது.

இத்தனை அரசியல் மாற்றங்கள் நடந்துகொண்டிருந்தபோதும் போராட்டங்கள் நின்றபாடில்லை. ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு வன்முறை, போராட்டம், தீவைப்பு எல்லாமே வரிசைக்கிரமமாக நடந்துகொண்டே இருந்தன. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாக அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றைக் கூட்டியது மத்திய அரசு. அதற்குள் நிலத்தை வாபஸ் பெற்றது தவறு என்பதை வலியுறுத்தும் நோக்கத்துடன் ஷ்ரீ அமர்நாத் சங்கர்ஷ் சமிதி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. பாரதிய ஜனதா, விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் வியாபாரிகள் சங்கங்கள், போக்குவரத்து சங்கங்கள், பார் கவுன்சில் உள்ளிட்ட இருபத்தெட்டு சமுதாய மற்றும் அரசியல் இயக்கங்கள் இந்த அமைப்பில் தங்களை இணைத்துக்கொண்டன. 

உருவான வேகத்திலேயே நிலத்தைத் திரும்பப் பெற்றதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக மறியலுக்கு அழைப்பு விடுத்தது இந்த சமிதி அமைப்பு. இதனால் இஸ்லாமிய அமைப்புகளுக்கும் இந்து அமைப்புகளுக்கும்  இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுத்தபோது ஒரு ஹூரியத் தலைவர் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியாக, மேலும் மூன்று பேர் கலவரத்தில் உயிரிழந்தனர். நாட்கள் கடந்துகொண்டே போனாலும்கூட போராட்டத்தின் வீரியம் மட்டும் சிறிதும் குறையவில்லை. இதுவரை பதின்மூன்றுக்கும் மேற்பட்ட உயிர்கள் பலி கொடுக்கப்பட்டுள்ளன. போராட்டம் தொடர்கிறது. நிற்க. 

குடியிருப்புப் பகுதிகளை அமைப்பதற்காகவோ அல்லது புதிய நகரை நிர்மாணிப்பதற்காகவோ நிலம் தரப்பட்டிருந்தால் இஸ்லாமியர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததில் ஓர் அர்த்தம் இருக்கும். ஆனால் ஆலய நிர்வாகக் குழுவுக்குத் தரப்பட்ட அரசு நிலத்தில் செய்யப்படும் வசதிகள் அனைத்தும் நிரந்தரமாக அந்த இடத்திலேயே இருக்கப்போவதில்லை. தாற்காலிகப் பயன்பாடு என்பதால் எளிதில் அகற்றப்படும் வகையிலேயே அமைக்கப்படும். பயன்பாடு முடிந்ததும் பிரித்தெடுக்கப் பட்டுவிடும். ஆகவே, இதில் அச்சம் கொள்வது அவசியமற்றது.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இருக்கும் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலங்களை நிர்வகிக்க வக்ஃப் வாரியம் என்ற தனி அமைப்புக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கென்று தனி சிவில் சட்டம் அமலில் இருக்கிறது. அவர்களுடைய புனிதத் தலமான மெக்காவுக்குச் செல்வதற்கு இந்திய அரசு மானியம் வழங்குகிறது. இந்தியா முழுக்க சிறுபான்மையினராக இருக்கும் இஸ்லாமியர்களுக்கு இத்தனை உரிமைகளை இந்திய அரசு வழங்கியிருக்கிறது. ஆனால், ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் இஸ்லாமியர்கள் அங்கு வருகின்ற இந்துக்களுக்குக் கொடுக்கப்படவேண்டிய குறைந்தபட்ச உரிமைகளுக்குக்கூட முட்டுக்கட்டை போடுவது ஏன்?

நிலம் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களின் நோக்கம் கீழ்க்காணும் இரண்டில் ஒன்றாக இருக்கலாம் அல்லது இரண்டுமாகவும் இருக்கலாம்.

1. இந்துக்கள் தங்கள் பிராந்தியத்துக்குள் நுழையக்கூடாது என்று நினைக்கிறார்கள்.

2. இந்துக்களின் மதவழிபாடு எதுவும் தாங்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் நடத்தப்படக்கூடாது என்று நினைக்கிறார்கள்.

அப்படிப்பட்ட எந்த எண்ணமும் தங்களுக்கு இல்லை என்பதை உறுதி செய்யவேண்டிய பொறுப்பு ஜம்மு_காஷ்மீர் வாழ் இஸ்லாமியர்களுக்கு இருக்கிறது. அதேபோல, துப்பாக்கிப் பிரயோகமும் வெடிகுண்டுத் தாக்குதல்களும் அதிகம் இருக்கும் பிராந்தியத்துக்கு வந்து ஆலய தரிசனம் செய்யும் பக்தர்களுக்குப் பாதுகாப்பு வழங்கவேண்டியது மாநில அரசின் கடமை. அதனைச் சரிவர நிறைவேற்றுவதற்கு யாரேனும் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு நிலைமையைப் பற்றிய புரிதலை ஏற்படுத்துவது எப்படி என்றுதான் அரசு யோசிக்க வேண்டுமே ஒழிய, மிரட்டல்களுக்கு அடிபணிந்து, கொடுத்த நிலத்தைத் திரும்பப் பெறுவது ஆபத்தான விளைவுகளையே ஏற்படுத்தும்.

தற்போது அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் வேறு போராட்டத்தில் குதித்துள்ளனர். விரைவில் கவுன்ட்டர் அட்டாக் கொடுக்கும் விதமாக இஸ்லாமிய மாணவர்கள் களத்தில் இறங்கக்கூடும். ஏற்கெனவே ஜிலீர் பிரதேசம் வேறு. போராட்ட நெருப்பை அணைப்பது அத்தனை சுலபமில்லை.

இறுதியாக ஒரு விஷயம். ஜம்மு_காஷ்மீரில் தற்போது வீறுகொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் மத யானைகளை அடக்க அரசுக்குத் தேவை ஆயுதங்கள் அல்ல, அங்குசங்கள்!               ஸீ

ஸீ ஆர். முத்துக்குமார்

source:http://www.kumudam.com

1 பின்னூட்டம்

Filed under Uncategorized

One response to “எரிகிறது ஜம்மு-காஷ்மீர்!——–அமர்நாத் விவகாரத்தின் நிஜப்பின்னணி

 1. ABDULRAHMAN

  Mr.S R Muthukumar ,if you don’t know the real histry of Amarnath ,kindly read below .but donot give false information to other people.

  இந்துமத வெறியர்களின் சதித்தனம் மண்ணைக் கவ்வியது PDF Print E-mail
  புதிய ஜனநாயகம் – 2008
  Written by புதிய ஜனநாயகம்
  Thursday, 07 August 2008 22:07

  காசுமீர் மாநிலத் தலைநகர் சிறீநகருக்குத் தென்கிழக்கே 111 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அமர்நாத் குகையில் உருவாகும் பனிலிங்கத்தைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதற்காக, 39.88 ஹெக்டேர் வனப்பகுதி நிலத்தை, சிறீஅமர்நாத் ஆலய வாரியத்திற்குச் சில நிபந்தனைகளுடன் கடந்த மே மாத இறுதியில் கை மாற்றிக் கொடுத்தது, காங்கிரசுக் கூட்டணி அரசு.

  பல்டால்தோமெயில் வனப்பகுதியில் உள்ள இந்த நிலத்தை ஒதுக்கிக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையைப் பக்தர்கள் யாரும் முன்வைக்கவில்லை. அம்மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும், சிறீ அமர்நாத் ஆலய வாரியத்தின் முன்னாள் தலைவருமான எஸ்.கே.சின்ஹாதான் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். ஆளுநருக்கு, பக்தர்கள் மீது அப்படியென்ன கரிசனம் என்று கேட்கிறீர்களா? முன்னாள் உயர் இராணுவ அதிகாரியான எஸ்.கே.சின்ஹாவின் மனமும், மூளையும் ஆர்.எஸ்.எஸ். கருத்துக்களால் நிறைந்தது என்பதுதான் இதற்கான காரணம்.

  மாநில ஆளுநரே முன்வைத்தபோதும், இந்தக் கோரிக்கை மாநில அரசின் ஒப்புதலைப் பெற முடியாமல், கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகத் தூசிப் படிந்து கிடந்தது. எஸ்.கே.சின்ஹாவின் பதவிக் காலம் முடியும் தருணத்தில்தான், அவரின் ஆசை நிறைவேறியது. இந்த ஒப்புதலை அளித்ததன் மூலம் அக்.2008இல் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில், ஜம்முவில் உள்ள இந்துக்களின் வாக்குகளை அள்ளிவிட முடியும் எனக் கணக்குப் போட்டது, காங்கிரசுக் கட்சி. ஆளுநர் எஸ்.கே.சின்ஹா மனநிறைவோடு, ஜூன் மாத இறுதியில் காசுமீரை விட்டு வெளியேறிப் போக, காசுமீர் பள்ளத்தாக்கில் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரும் போராட்டங்கள் வெடித்தன. இப்போராட்டங்கள், 1990களில் காசுமீரின் சுயநிர்ணய உரிமைக்காக நடந்த போராட்டங்களுக்கு இணையாக இருந்ததாகத் “தேசிய’ப் பத்திரிகைகள் அரண்டு போய் எழுதியிருந்தன.

  இந்திய அரசுக்கு எதிரான காசுமீர் மக்களின் உணர்வை, 2002இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஓட்டுக்களாக அறுவடை செய்து கொண்ட மக்கள் ஜனநாயகக் கட்சி, அத்தேர்தல் முடிந்தவுடன் காங்கிரசோடு சந்தர்ப்பவாதக் கூட்டணி வைத்துக் கொண்டு, ஆட்சியில் அமர்ந்தது. அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்தான், சீறிஅமர்நாத் ஆலய நிர்வாகத்திற்கு 39.88 ஹெக்டேர் நிலத்தை ஒதுக்கிக் கொடுக்க ஒப்புதலும் கொடுத்தார். ஆனால், இந்த ஒதுக்கீடுக்கு எதிராக காசுமீர் முசுலீம்களின் போராட்டம் வீச்சாக எழுந்தவுடன் தேர்தல் பயத்தால் இக்கட்சி பிளேட்டைத் திருப்பிப் போட்டுத் தட்டியது.

  மக்கள் ஜனநாயகக் கட்சி, இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியதோடு நில்லாமல், கூட்டணி ஆட்சிக்குக் கொடுத்து வந்த ஆதரவையும் விலக்கிக் கொண்டது. காங்கிரசுக் கட்சி சட்டசபையில் பெரும்பான்மையை இழந்துவிட்ட நிலையில், நில ஒதுக்கீடு உத்தரவை ரத்து செய்ததோடு, ஆட்சியையும் பறி கொடுத்தது.

  நில ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை, இந்துக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகப் பிரச்சாரம் செய்தது பா.ஜ.க. ”ஒரு 40 ஹெக்டேர் நிலத்தைப் பெறும் உரிமைகூட இந்துக்களுக்கு இல்லையா?” என்ற கேள்வியைப் போட்டு, “இந்துக்களை’ உருவேற்ற முயன்றது, அக்கட்சி. நில ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து, ஜூலை 3 அன்று ”பாரத் பந்தை” அறிவித்து, நிலப்பிரச்சினையைத் “தேசிய’ப் பிரச்சினையாக்க முயன்றது.

  அமர்நாத் பனிலிங்கத்தைத் தரிசிக்கச் செல்லும் பக்தர்களுக்கு ஒரு 40 ஹெக்டேர் நிலம் ஒதுக்கப்பட்டதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அளவிற்கு, காசுமீர் முசுலீம்கள் மத அடிப்படைவாதத்தில் மூழ்கிப் போய்விட்டதாகத் தேசியப் பத்திரிகைகள் இப்போராட்டத்தைச் சாடி எழுதியிருந்தன. சமகால காசுமீரின் வரலாற்றை அறிந்திராத சாதாரண வாசகன்கூட, இந்தக் கேள்வியை எழுப்பக் கூடும். பா.ஜ.க.வும், தேசியப் பத்திரிகைகளும் எழுப்பிய இக்கேள்வியில் நியாயம் இருப்பதாகக் கருதக்கூடும். ஆனால், அமர்நாத் பனிலிங்க வரலாறு வேறானது.

  ···

  அமர்நாத் யாத்திரை என்பது ஆண்டாண்டு காலமாக நடந்து வருவது அல்ல; மேல்சாதி இந்துக்கள் தங்களின் வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் காசிஇராமேசுவரத்திற்குச் சென்று வருவது போன்ற “புனிதமானதும்’ அல்ல. காணாமல் போன தனது கால்நடைகளைத் தேடிப் பனிக் காடுகளில் அலைந்து திரிந்த ஒரு முசுலீம்தான், அமர்நாத் குகையில் இயற்கையாக உருவாகும் பனிக்குன்றை முதலில் பார்த்தார். அந்த முசுலீம் வந்து சொல்லித்தான் இந்துக்கள் இந்த அதிசயத்தைத் தெரிந்து கொண்டனர். அந்தப் பனிகுன்றுக்குப் பனிலிங்கம் எனப் பெயரிட்டு, அதற்கு ஏதோ மகிமை இருப்பதாகக் கருதி, ஆண் டுதோறும் யாத்திரை போய் தரிசித்து வரத் தொடங்கினர்.

  இந்தப் பனிலிங்கம் மற்றும் அதைத் தரிசிக்கச் செல்லும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளையும் செய்து கொடுக்கும் பொறுப்பு, பேடாகுந்த் பகுதியில் வசிக்கும் முசுலீம் குடும்பங்களிடம் தான் இருந்து வந்தது. 1990களில் காசுமீரில் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் வெடித்த பிறகு, அதற்கு எதிரான ஆயுதமாக, இந்து மதவெறியைத் தூண்டிவிடும் வாய்ப்பாக, இந்த யாத்திரைக்கு அரசியல் சாயம் பூசப்பட்டதோடு, அரசே ஏற்பாடு செய்து நடத்தும் யாத்திரையாக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். கும்பலோ, ஹஜ் யாத்திரையைப் போன்று, அமர்நாத் யாத்திரையை புனிதப்படுத்தும் தில்லு முல்லைச் செய்தது; செய்தும் வருகிறது. பார்ப்பனர்கள் கொண்டாடி வந்த விநாயகர் சதுர்த்தி பண்டிகை, முசுலீம்களுக்கு எதிரான வெறுப்பைத் தூண்டிவிடும் விநாயகர் ஊர்வலமாக மாற்றப்பட்டதைப் போல, அமர்நாத் யாத்திரை, காசுமீர் முசுலீம்களுக்கு எதிரானதாக உருமாற்றப்பட்டது. பக்தி, இந்து பாசிசமாகியது.

  கரசேவைக்குத் தொண்டர்களைத் திரட்டி அனுப்புவதைப் போல, ஒவ்வொரு ஆண்டும் அமர்நாத் யாத்திரைக்கும் “இந்துக்களை’த் திரட்டி அனுப்புவதை ஆர்.எஸ்.எஸ். வெளிப்படையாகவே செய்து வருகிறது. இதனால் பனிலிங்கத்தை வணங்க வரும் “பக்தர்களின்’ எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகமாகிக் கொண்டே செல்லத் தொடங்கியது. இந்த எண்ணிக்கை அதிகரிப்பைக் காரணமாகக் காட்டி, இரண்டு வாரமே நடந்து வந்த அமர்நாத் யாத்திரையின் காலஅளவு, ஒரு மாத காலமாக நீட்டிக்கப்பட்டது. யாத்திரையை நிர்வகிப்பது என்ற பெயரில் தனியாக வாரியம் அமைக்கப்பட்டது. இந்த வாரியத்தின் தலைவராக ஜம்முகாசுமீர் மாநில ஆளுநர் இருப்பார் என்றும்; அதே சமயம் ஆளுநர் இந்துவாக இருந்தால் மட்டுமே வாரியத்தின் தலைவராக முடியும் என்றும் விதிகள் உருவாக்கப்பட்டன. முசுலீம்களின் மேற்பார்வையிலும்; உதவியோடும் நடந்து வந்த அமர்நாத் யாத்திரையை அவர்களிடமிருந்து பறித்து, இந்துமயமாக்கும் சதிகள் 1990க்குப் பிறகு ஒவ்வொன்றாக அரங்கேற்றப்பட்டன.

  எஸ்.கே.சின்ஹா, ஜம்முகாசுமீர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகு, இந்த இந்துமயமாக்கம் மேலும் தீவிரமடைந்தது. ”அமர்நாத் யாத்திரையின் கால அளவை ஒரு மாதத்தில் இருந்து இரண்டு மாதமாக அதிகரிக்க வேண்டும்; பகல்காமிலிருந்து அமர்நாத் செல்லும் பாதையிலும்; பால்தாலில் இருந்து அமர்நாத் செல்லும் பாதையிலும் உள்ள வனப்பகுதி நிலங்களை அமர்நாத் வாரியத்திற்கு ஒதுக்க வேண்டும்; அமர்நாத் வாரியம் அரசின் தலையீடின்றி, சுதந்திரமாக இயங்க வேண்டும்” என மாநில அரசுக்கு நிர்பந்தம் கொடுத்து வந்தார், அவர். அமர்நாத் வாரியத்திற்கு திடீரென 39.88 ஹெக்டேர் நிலம் ஒதுக்கப்பட்டது தொடர்பாக வாரியத்தின் தலைவர் என்ற முறையில் ஆளுநர் பதில் அளிக்க வேண்டும் எனச் சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிய பொழுது, ”ஆளுநர் சட்டமன்றத்துக்கு கட்டுப்படத் தேவையில்லை” எனத் திமிராகப் பதில் அளித்தார், எஸ்.கே.சின்ஹா.

  ஜம்முகாசுமீர் மாநிலத்தை இந்திய ஒன்றியத்துடன் கட்டாயமாக இணைத்துக் கொண்டபொழுது, ”காசுமீரைச் சேராதவர்கள் அம்மாநிலத்தில் ஒரு துண்டு நிலம் வாங்குதற்குக் கூட அனுமதி கிடையாது” என்ற உரிமை அளிக்கப்பட்டது. இந்திய இராணுவம் பாசறைகளை அமைப்பது என்ற பெயரில், ஏராளமான நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டு, இந்த உரிமையை மீறி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில், காசுமீர் பள்ளத்தாக்கு மக்களின் பங்கின்றி உருவாக்கப்பட்டுள்ள அமர்நாத் வாரியத்திற்கு நிலம் ஒதுக்கப்பட்டதை, காசுமீரி முசுலீம்கள் இன உரிமை மீறலாகவும், ஆக்கிரமிப்பாகவும் பார்த்தார்கள். பாக். தீவிரவாதிகளை ஒழிப்பது என்ற பெயரில் காசுமீரி முசுலீம்களை வேட்டையாடிவரும் இந்திய இராணுவத்தின் அக்கிரமங்களுக்கு எதிராக காசுமீரி முசுலீம்களிடம் கனன்று கொண்டிருந்த கோபம், இந்த நில மாற்ற உத்தரவால் பற்றி எரியத் தொடங்கியது.

  அரசு வெளியிட்ட நில மாற்றம் தொடர்பான உத்தரவில், ”அமர்நாத் வாரியம் அந்நிலத்தில் யாத்திரை வரும் பக்தர்கள் தங்கிச் செல்ல வசதியாகத் தற்காலிகக் குடியிருப்புகளை அமைத்துக் கொள்ளலாம்” என்ற சலுகையை வழங்கியிருந்தது. காசுமீரி முசுலீம்கள் அச்சலுகையை, ஜம்முகாசுமீரில் இந்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் சதித்தனம் நிறைந்ததாகவே பார்த்தார்கள். ”இந்துக்கள் இரண்டு மாதம் மட்டுமே தங்கிச் செல்லுவதால், மக்கள் தொகையில் எப்படி மாற்றம் வரும்?” என்ற கேள்வியை எழுப்பிய பா.ஜ.க.வும், தேசியப் பத்திரிகைகளும், காசுமீரி முசுலீம்களின் சந்தேகம் ஊதிப் பெருக்கப்படுவதாகக் குற்றஞ்சுமத்தினர்.

  இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து சிறுபான்மையினர் ஆகிவிடும் அபாயம் இருப்பதாகப் புளுகிவரும் பா.ஜ.க; காசுமீர் முசுலீம்களின் சந்தேகத்தைக் குற்றஞ்சுமத்துவது வேடிக்கையானது. இதுவொருபுறமிருக்க, காசுமீர் பிரச்சினையைத் தீர்க்க, முசுலீம்கள் நிறைந்த காசுமீர் பள்ளத்தாக்கையும்; இந்துக்கள் நிறைந்த ஜம்முவையும் மற்றும் லடாக் பகுதியையும் தனித்தனியாகப் பிரித்து, காசுமீரைக் கூறு போட்டுவிடலாம் என்ற திட்டம் பா.ஜ.க. ஆட்சியில் இருந்த பொழுது பரிசீலிக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்ம், அமெரிக்காவும் இணைந்து உருவாக்கிய இத்திட்டத்தின் அடிப்படையில் பார்த்தால், காசுமீர் முசுலீம்களின் சந்தேகத்தைத் தேவையற்ற அச்சம் என ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.

  அமர்நாத் வாரியத்திற்கு நிலம் ஒதுக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி காசுமீரி முசுலீம்கள் போராடிக் கொண்டிருந்த பொழுதுதான், இந்த ஆண்டிற்கான அமர்நாத் யாத்திரையும் தொடங்கியது. இப்போராட்டத்தை ஒடுக்க போலீசும், துணை இராணுவப் படைகளும் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆறு காசுமீரி முசுலீம்கள் கொல்லப்பட்டனர். எனினும், இப்போராட்டத்தால் அமர்நாத் யாத்திரைக்கோ, அதில் கலந்து கொண்ட “இந்துக்களுக்கோ’, முசுலீம்களாலோ, முசுலீம் அமைப்புகளாலோ சிறு இடையூறும் ஏற்படவில்ல. வழக்கம்போலவே, மலைமேல் ஏற முடியாத பக்தர்களைப் பல்லக்கில் தூக்கிச் செல்வது தொடங்கி, “இந்து’ பக்தர்களுக்கு உணவு, தங்குமிடம் அளிப்பது உள்ளிட்டு எல்லாவிதமான உதவிகளையும் காசுமீரி முசுலீம்கள் செய்துகொடுத்தனர். காசுமீரி முசுலீம்கள் நடத்திய போராட்டம் மதவெறியின் அடிப்படையில் நடைபெறவில்லை என்பதை அமைதியாக நடந்த அமர்நாத் யாத்திரையே நிரூபித்து விட்டது.

  ஆனால், காசுமீர் மக்களின் போராட்டத்திற்கு எதிராக ”பாரத் பந்த்” நடத்திய பா.ஜ.க. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜம்முகாசுமீர் கலைக்கூடத்தை அடித்து நொறுக்கியது; மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள இந்தூர் நகரில், ஆர்.எஸ்.எஸ். குண்டர்களால் முசுலீம்களின் குடியிருப்புகளும், வர்த்தக நிறுவனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இந்தூர் முசுலீம்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள முயன்றபொழுது, நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் இறந்துபோனார்கள்.
  சிறீ அமர்நாத் ஆலய வாரியத்திற்கு அளிக்கப்பட்ட நிலம் ரத்து செய்யப்பட்டதை, காசுமீரி முசுலீம்கள் இந்துக்களின் மீதான வெற்றியாகப் பார்க்கவில்லை. சுயநிர்ணய உரிமையை மறுத்து வரும் இந்திய அரசின் மீதான வெற்றியாகவே கருதுகிறார்கள். அமர்நாத் யாத்திரை பக்தியின் அடிப்படையில் நடைபெறுவதாகக் கருதும் “இந்துக்கள்’, யாத்திரையில் ஆர்.எஸ்.எஸ். தலையீடு செய்வதை எதிர்க்க வேண்டும்; பேடாகுந்த் முசுலீம்களின் உரிமையை மறுத்து அமைக்கப்பட்டுள்ள வாரியத்தைக் கலைக்கக் கோர வேண்டும். இது அவர்களின் “கடமை’ மட்டுமல்ல; இரு நூற்றாண்டுகளாக அமர்நாத் யாத்திரை எவ்விதத் தடங்கலும் இன்றி நடைபெறுவதற்கு பொறுப்போடு உதவி வரும் காசுமீரி முசுலீம்களுக்குச் செலுத்தும் நன்றிக் கடனும் ஆகும்

  · செல்வம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s