Daily Archives: ஜூன் 11, 2008

பள்ளிப் புத்தகத்தில் ரஜினி பாடமா?

http://thamilislam.blogspot.com/2008/06/blog-post_09.html

 
 12.06.08  ஹாட் டாபிக்
வாழும் போதே வரலாறு ஆனவர்’ என்று சிலரைப் பற்றிச் சொல் வார்கள். அதுபோல வாழும்போதே பள்ளிப் பாடப்புத்தகங்களில் பாடமாக இடம்பெறும் பாக்கியம் எத்தனை பேருக்குக் கிடைத்துவிடும்? அப்படி யொரு வாய்ப்பு இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிக்குக் கிடைத்திருக்கிறது. அதையொட்டி சர்ச்சைகளும் சரமாரியாக  வீசத் தொடங்கியிருக்கின்றன.

மத்திய அரசுக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கில் உள்ளன. இந்தப் பள்ளிகளில் முதல் வகுப்பில் இருந்து மேல்நிலை வகுப்பு வரை அடக்கம்.   மத்திய அரசின் கல்வித்துறையின் கீழ் இயங்கும் தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் எனப்படும் என்.சி.இ.டி.  அமைப்புதான் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டங்களை வகுத்து வருகிறது. சராசரியாக மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை இவர்கள் பாடத்திட்டங்களை மாற்றியமைப்பார்கள்.  அதன்படி இந்த ஆண்டும்  சி.பி.எஸ்.இ. பாடங்கள் மாற்றி அமைக்கப்பட்டு புதிய பாடப்புத்தகங்கள் வெளிவந்துள்ளன.

அதில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கான, `நியூ! லேர்னிங் டு கம்யூனிகேட்’ என்ற புதிய பாடப்புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தவர்களுக்கு ஓர் அதிர்ச்சி. அதில் நான்காவது பாடமாக இடம் பெற்றிருந்தவர் நடிகர் ரஜினிகாந்த். பஸ் கண்டக்டராக இருந்த ரஜினிகாந்த் எப்படி நடிகரானார்? என்ற விவரம் அதில் இடம்பெற்றுள்ளது. எந்தத் தொழிலையும் கேவலமாக மதிக்கக் கூடாது என்பதை மாணவர்களுக்கு உணர்த்தும் விதமாக ரஜினி பற்றிய பாடம் அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது.

பள்ளிகள் திறந்து ஓரிரு நாட்களே ஆன நிலையில் மாணவர்களோ அல்லது அவர்களுக்குப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களோ கூட ரஜினி பற்றிய அந்தப் பாடத்தைப் பார்த்திருப்பார்களா? அல்லது படித்திருப்  பார்களா? என்பது சந்தேகம்தான். இந்த நிலையில் சி.பி.எஸ்.இ. பாடப்புத் தகத்தில் ரஜினி பற்றிய பாடம் இடம் பெற்றிருப்பது கல்வியாளர்கள் மற்றும் சமூக சிந்தனையாளர்களுக்குத் தெரிந்து விட,  “பிஞ்சு வயதில் நடிகர் ரஜினியைப் பற்றிய பாடத்தை மாணவர்கள் படித்தால்,  அவர்களது சிந்தனையே தடம் மாறிவிடும் அபாயம் இருக்கிறது” என்று தடதடக்கிறார்கள் அவர்கள்.

அந்தப் பாடப்புத்தகம் குறித்து சி.பி.எஸ்.இ. பள்ளி ஆசிரியர் ஒருவரிடம் பேசினோம்.

“மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்கவும், சிந்திக்கும் ஆற்றலைக் கூர்மைப்படுத்தவும்தான் ஆறாம் வகுப்பு சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்காக, `லேர்னிங் டு கம்யூனிகேட்’ என்ற புத்தகத்தை வைத்திருக்கிறார்கள். அந்தப் பாடப்புத்தகத்தில் உள்ள எட்டுப் பாடப்பிரிவுகளில் நான்காவது பிரிவில்தான்  ரஜினியைப் பற்றிய பாடம் இடம் பெற்றுள்ளது.

நமது வாழ்க்கை முறையில் உள்ள தொழில்களைப் பற்றியும், அதில் ஈடுபடும் தொழிலாளர்களைப் பற்றியும் விவரித்து, எந்தத் தொழிலையும் குறைவாக மதிப்பிடக் கூடாது. அவற்றில் ஈடுபடும் தொழிலாளர்களிடம் பாரபட்சம் காட்டக்கூடாது என்பதை விளக்குவதுதான் அந்தப் பாடப்பிரிவின் முக்கிய நோக்கம்.

புளு, வொய்ட், பிங்க் கலர்களில் ஆடை அணிந்து வேலை பார்க்கும் தொழிலாளர்களைப் பற்றி விவரிக்கப்பட்டுள்ள அந்தப் பாடங்களில், முதல் மூன்று பாடங்களில் தனிப்பட்ட யாரைப்பற்றியும் குறிப்பிடப் படவில்லை. ஆனால் நான்காம் பாடப்பிரிவில் ரஜினி என்ற தனிமனிதர் இடம் பெற்றிருக்கிறார். அதில் அரசு வேலை ஒன்றை உதறிவிட்டு  சினிமாவில் சேர்ந்து ரஜினி வெற்றி பெற்று மிக உயர்ந்த இடத்திற்குச் சென்றுள்ளார் என்பதை விளக்கும் விதமாக பாடம் அமைந்துள்ளது. இதுதான் தற்போது சர்ச்சைக்குரிய விஷயமாக உருவெடுத்துள்ளது” என்றார் அவர்.

அந்த ஆறாம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் ரஜினி பற்றிய பாடம் இடம்பெற்றிருப்பது தெரிந்ததும் பரபரப்பு  பந்தல் போடத் தொடங் கியுள்ளது. சி.பி.எஸ்.இ. மாணவர்களை விட அதிகமாக ரஜினி ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு அந்தப் பாடப் புத்தகத்தை வாங்கத் தொடங்கியுள்ளனர். அந்தப் புத்தகத்தில் என்னதான் இடம்பெற்றிருக்கிறது என்ற ஆவல் உந்த, நாமும் அந்தப் புத்தகத்தை வாங்கிப் பார்த்தோம்.

புத்தகத்தின் 65-ம் பக்கம் ரஜினியின் வண்ணப்படத்துடன் இருந்தது அந்தப் பாடம். அதை வாசித்தோம்.

“ஓய்வு பெற்ற பஸ் டிரைவர் ராஜா பகதூர், வெள்ளிக்கிழமை சினிமா பார்க்கச் சென்றார். இதில் என்ன விசேஷம் என்று கேட்கத் தோன்று கிறதா? அந்தப் படத்தில் நடித்திருந்தவர் ராஜா பகதூரின் நெருங்கிய நண்பரான சிவாஜிராவ் கெய்க்வாட் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த். ரஜினியின் மிகப் பிரபலமான `சிவாஜி’ படத்தை லட்சோப லட்சம் சினிமா ரசிகர்களுடன் சேர்ந்து முதல் நாள், முதல் ஷோவாகப் பார்த்தார் ராஜா பகதூர்.

எழுபதுகளின் ஆரம்பத்தில் தொடங்கிய நட்பு அது. பெங்களூரு நகரின் அப்போதைய பெங்களூர் டிரான்ஸ்போர்ட் சர்வீஸின் மெஜஸ்டிக் பகுதியில் இருந்து, ஸ்ரீநகர் செல்லும் 10ஏ ரூட்டில் டிரைவராக இருந் தவர்  ராஜா பகதூர். அதே பஸ்ஸில் கண்டக்டராக இருந்தவர் சிவாஜிராவ். டூட்டி இல்லாத நேரங்களில் இந்த நண்பர்கள் இருவரும் சினிமா, நாடகம் பார்ப்பார்கள். குப்பி வீரண்ணா ரங்கா மந்திர் அரங்கில் சிவாஜிராவ், துரியோ தனனாகவும், யெச்சம்ம நாயக்கா என்ற கன்னட வீரன் வேடத்திலும் நடிப்பார். ரசிகர்களின் கைதட்டலை அபரிமிதமாக அறுவடை செய்வார். `சிவாஜிராவ் இனி சினிமாவில் நடிக்க வேண்டும்’ என்று வற்புறுத்தத் தொடங்கினார் பகதூர்.

அந்தக் காலகட்டத்தில்தான் சென்னையில் அடையாறு ஃபிலிம் இன்ஸ் டிடியூட் ஆரம்பமானது. அதில் சேரும்படி சிவாஜிராவை பகதூர் வற்புறுத்த ஆரம்பித்தார். கண்டக்டர் வேலையை விட்டுவிட்டு ஃபிலிம்  இன்ஸ்டி டியூட்டில் சேருவது சிவாஜிராவுக்கு உடன்பாடாக இருக்கவில்லை. பணப்பிரச்னை வேறு. “அரசு வேலையை யாராவது விடுவார்களா?” என்று கேட்டார் சிவாஜிராவ். அதற்கு பகதூர் அளித்த பதில் இதுதான். “நீ வேலையை விடு. உன் தேவைகளை நான் பார்த்துக் கொள்கிறேன்”.

பகதூர் அவரது வார்த்தையைக் காப்பாற்றினார். 1974-ல் இருந்து 1976 வரை இரண்டுவருட காலம் அவரது சம்பளத்தில் கணிசமான ஒரு தொகையை சிவாஜிராவின் சினிமா படிப்புக்காக அவர் செலவிட்டார். கோர்ஸ் முற்றுப் பெற்றது. இயக்குநர் கே.பாலசந்தரின் கண்ணில் பட்டு தமிழ்த்திரைப்பட உலகுக்கு அறிமுகமானார் சிவாஜிராவ். மற்றதெல்லாம் வரலாறு.”

இதுதான் அந்தப் பாடத்தில் இடம்பெற்றுள்ளது. “பாடப்புத்தகத்தில் ரஜினி பற்றிய பாடம் இடம்பெற்றுள்ள நிலையில் அந்தப் பாடத்தின்  நோக்கமே அடிபட்டுப்போய் விடும். மாணவர்களுக்குத் தவறான சிந்தனையை உருவாக்கிவிடும்” என்கிறார் டாக்டர் வசந்தா கந்தசாமி. சென்னையிலுள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் கணிதத்துறையில் இணைப் பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் அவரிடம் நாம் பேசினோம்.

“மனிதர்களை மாண்புமிக்கவர்களாக மாற்றி அமைக்கும் பாதையாக கல்வித்துறை அன்று விளங்கி வந்தது. அதனால் சமூக சிந்தனை, அரசி யல் உணர்வு, தேசிய உணர்வுடன் மாணவர்கள் வளர்ந்தனர். உலகம் போற்றும் தலைவர்கள் இந்தியாவில் உருவானார்கள். இன்று கல்வி நிறுவனங்கள்  வியாபார நிறுவனங்களாக  மாறிவிட்டன. இதனால், இப்போதைய மாணவர்களுக்கு சமூக சிந்தனையோ, அரசியல் சிந்தனையோ இல்லாமல் போகிறது.

`பொறியியல் அல்லது கணினி பட்டப்படிப்பை முடித்து வெளிநாட்டுக்குச் சென்றுவிட வேண்டும். லட்சம் லட்சமாய் பணம் சம்பாதிக்க வேண்டும்’ என்ற சுயநல எண்ணம்தான் இன்றைய இளம் சமுதாயத்தினரிடம் அதிகமாக காணப்படுகிறது. மற்றபடி சமூகம், நாட்டு வளர்ச்சி, தேச வளர்ச்சியில் இவர்களுக்கு அக்கறை யில்லாமல் போய்விடுகிறது.

அதைப் போக்கும் விதத்தில், ஆரம்பக் கல்வியில் இருந்தே மாணவர்களுக்கு சமூக சிந்தனையும், தேசப்பற்றும்  உருவாக்கும் விதத்தில் புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என நாங்கள் எல்லாம் குரல் கொடுத்து வரும் இந்த நேரத்தில்தான், ரஜினி பற்றிய பாடத்தை வைத்து மீண்டும், மீண்டும் மாணவ சமுதாயத்தை தவறான பாதைக்குத்தான் கொண்டு செல்கின்றனர். இதனால் எங்களுக்கு ஏற்படும் வேதனை கொஞ்ச நஞ்சமல்ல.

ரஜினி பற்றிய அந்தப் பாடத்தின் மூலம், `சினிமாவில் நடித்தால் ரஜினி யைப் போல உயர்ந்துவிடலாம்’ என்ற தவறான எண்ணம் இளவயதில் மாணவர்கள் மனதில் கண்டிப்பாக முளைவிடும். ரஜினிக்குப் பதிலாக கல்வித்துறை, தொழில் துறை, அறிவியல் துறையில் உயர்ந்தவர்களின் வாழ்க்கையைப் பற்றி அதில் குறிப்பிட்டிருந்தால், அது மாணவர்களுக்கு பயனுள்ளதாகவும், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் இருந்திருக்கும்.

பொதுவாக இன்றைய இளைஞர்களை மட்டுமல்ல, பொதுமக்களையும் சினிமாவும், மீடியாவும்தான் குட்டிச்சுவராக்கி வருகிறது. அந்தப் பட்டியலில் இப்போது கல்வித்துறையும் சேர்ந்துவிட்டது என்பதை நினைக்கும் போது வேதனைதான் மிஞ்சுகிறது,” என்றார் டாக்டர் வசந்தா கந்தசாமி.

சரி. இது அவரது கருத்து. இதுபற்றி நாம் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவரும், மாநில தகவல் ஆணையத்தின் ஆணையருமான முனைவர் சாரதா நம்பி ஆரூரனிடம் பேசியபோது அவர் முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் கருத்துத் தெரிவித்தார்.

“தமிழ்நாட்டில் இன்று போலியோ சொட்டு மருந்தைக்கூட நடிகர், நடிகைகள் சொன்னால்தான் போட்டுக் கொள்ளும் நிலை இருக்கிறது. பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திக்கொள்பவர்களை மீண்டும் படிக்கச் சொல்லக் கூட நமக்கு விஜய், சூர்யா, ஜோதிகா தேவைப்படுகின்றனர். அந்தளவிற்கு தமிழக மக்களிடம் கல்வியறிவு குறைவாக இருக்கிறது. அந்தவகையில் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து நிற்கும் ரஜினியின் வாழ்க்கையைப் பாடமாகப் படிக்கும் மாணவர்களுக்கு, நாமும் அவரைப் போல வாழ்க்கையில் உயர வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதில் தவறில்லை அல்லவா? ரஜினி நடத்துனராக இருந்ததை எந்த மேடையிலும் சொல்லாமல் இருந்ததில்லை. ஒரு மனிதன் பழையதை மறக்காமல் இருந்தாலே அந்த மனிதன் உயர்வானவன்தான்.

`ஒரு மேடையிலும் பேசிப் பரிசு பெறாத நான்தான், நாற்பதாண்டுகளுக்கு மேல் கல்வித்துறையில் பணியாற்றியும், இலக்கிய மேடைகளில் பேசியும் உயர்ந்து, கலைமாமணி விருது பெற்றுள்ளேன்’ என பள்ளிகளில், கல்லூரிகளில் நான் பேசும் போது மாணவச் செல்வங்களுக்கு ஓர் உத்வேகம் உருவாகிவிடுகிறது. அதனால், ஒவ்வொருவரிடமும் இருக்கும் நல்ல விஷயங்களை எடுத்துக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற நற்சிந்தனை வேண்டும்.

அமைதியைத் தேடி ரஜினி இமயமலை செல்வதை எல்லாம் நான் வியப்புடன் பார்த்ததுண்டு. ஆனால்,  சுகி சிவம் போன்ற ஆன்மிகச் சொற்பொழிவாளர்களின் கூட்டங்களுக்கு எல்லாம் சத்தமில்லாமல் வந்து, இரண்டு மணி நேரத்திற்கு மேலாக அவர்களின் பேச்சை ரஜினி கேட்கிறார் என்பதைப் பார்க்கும் போது, ஆன்மிகத் தேடல் இல்லாமல் இதெல்லாம் சாத்தியமாகாது என்பதை நான் உணர்கிறேன். அதனால், பிரபலமானவர்களின் வாழ்க்கையை, பள்ளிகளில் பாடமாக வைப்பதில் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை,” என்று முடித்துக்கொண்டார் முனைவர் சாரதா நம்பி ஆரூரன்  சாந்தமான குரலில்.       ஸீ

ஸீ தாரை. இளமதி

http://www.kumudam.com

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized