அமெரிக்காவின் பயங்கரவாதிகள் பட்டியலில் நெல்சன் மன்டேலா
தொடர்ந்து நீடிக்கிறார்
வாஷிங்டன், மே.5-
அமெரிக்க பயங்கரவாதிகள் பட்டியலில் தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மன்டேலா பெயர் தொடர்ந்து இருந்து வருகிறது. இதனால் அவர் அமெரிக்கா செல்வது என்றால் சிறப்பு அனுமதி பெறவேண்டிய நிலை உள்ளது.
நிறவெறி அரசு
தென்னாப்பிரிக்கா இப்போது ஒரு ஜனநாயக நாடு. தென்னாப்பிரிக்க தேசீய காங்கிரஸ் கட்சி அந்த நாட்டில் ஆளும் கட்சியாக இருக்கிறது. இந்த நாடு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நிறவெறி பிடித்த வெள்ளைக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. ஆட்சியாளர்கள் கறுப்பர்களை அடக்கி ஒடுக்கி வந்தனர். இந்த நிற வெறி ஆட்சிக்கு எதிராக போராடியவர் நெல்சன் மன்டேலா. இவர் இதற்காக கைது செய்யப்பட்டு நீண்டகாலம் சிறையில் இருந்தவர்.
இவரை நிறவெறி தென்னாப்பிரிக்க அரசு பயங்கரவாதியாக சித்தரித்து இருந்தது. இதை ஏற்று அமெரிக்காவும் இவரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்தது.
தொடர்ந்து நீடிக்கிறது
நிறவெறி ஆட்சி போய் தென்னாப்பிரிக்காவின் மெஜாரிட்டி இன மக்கள் ஆட்சி அங்கு ஏற்பட்டது. அந்த அரசின் முதல் அதிபராக நெல்சன் மன்டேலா பதவியில் இருந்து ஓய்வும் பெற்று விட்டார். இன்னும் அவர் பெயர் அமெரிக்காவின் பயங்கரவாதிகள் பட்டியலில் தொடர்ந்து நீடிக்கிறது. இதனால் நெல்சன் மன்டேலாவும், அவரது கட்சிப் பிரமுகர்களும் அமெரிக்கா செல்ல வேண்டுமானால் சிறப்பு அனுமதி பெறவேண்டும் என்ற நிலை உள்ளது.
தென்னாப்பிரிக்க தேசீய காங்கிரஸ் கட்சியின் பெயர் இன்னும் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் இடம் பெற்று இருப்பது தர்மசங்கடமாக இருக்கிறது என்று அமெரிக்க வெளிநாட்டு மந்திரி கண்டலீசா ரைஸ் கூறி இருக்கிறார்.
நீக்குவதற்கான தீர்மானம்
தென்னாப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர்களின் பெயர்களை பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்குவதற்காக ஹோவர்டு பெர்மன் ஒரு தீர்மானத்தை கொண்டு வர இருக்கிறார். அது நிறைவேறுமானால் தான் நெல்சன் மன்டேலாவின் பெயர் பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்கப்படும்.
மன்டேலாவின் 90-வது பிறந்த நாள் வருகிற ஜுலை 18-ந் தேதி வருகிறது. அதற்கு முன்பு அவர் பெயர் நீக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=410783&disdate=5/5/2008