நான் எங்கதான் போறது? மகராஷ்ட்ரா போனா தமிழன்னு சொல்றாங்க. கர்நாடகா போனா மராட்டிக்காரன்னு சொல்றாங்க. தமிழ்நாட்டுக்கு வந்தா கன்னடக்காரன்னு சொல்றாங்க. நான் எங்கதான் போறது… இப்படி வேதனையோடு புலம்பியவர் சாதாரணமானவர் அல்ல. உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.
சில ஆண்டுகளுக்கு முன்பு காவிரி பிரச்னையில் தமிழ் திரையுலகமே திரண்டு, நெய்வேலியில் மாபெரும் கண்டனப் பேரணி நடத்திய போது, அதில் ரஜினி பங்கேற்கவில்லை. அப்போது எழுந்த காரசாரமான விமர்சனத்தைத் தாங்க முடியாமல்தான் இப்படி தனது வேதனையை வெளியிட்டார் ரஜினி.
அதன்பின் மறுநாளே சென்னையில் காலை முதல் மாலை வரை உண்ணாவிரதம் இருந்து தமிழகத்துக்கு தனது விசுவாசத்தைக் காட்டினார். இப்போது இரண்டாவது முறையாக, ஒகேனக்கல் குடிநீர் திட்ட விவகாரத்தில் கர்நாடகாவை கண்டித்து சமீபத்தில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்திலும் பங்கேற்று தான் தமிழன்தான், தமிழகத்துக்கு ஆதரவானவன்தான் என்பதை நிரூபித்தார்.
தமிழகத்தில் ரஜினிக்கு இந்தப் பிரச்னை என்றால் மகாராஷ்ட்ராவில் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்புக்கு பிரச்னை. அமிதாப் தான் பிறந்து வளர்ந்த உத்தரப்பிரதேசத்தில் ஆஸ்பத்திரி கட்டியிருக்கிறார். தனது மருமகள் ஐஸ்வர்யா பெயரில் கல்வி நிறுவனம் ஆரம்பித்துள்ளார்.
பணம் சம்பாதிப்பது மும்பையில், முதலீடு செய்வது சொந்த ஊரிலா என மகராஷ்ட்ராவின் மண்ணின் மைந்தர்கள் குரல் கொடுக்க அமிதாப்புக்கு பிரச்னை ஆரம்பித்திருக்கிறது. பிரபலமாய் இருப்பதற்கான விலைதான் இதெல்லாம்.
பிறக்கும் ஊரிலேயே யாரும் பெரிய ஆளாய் ஆகிவிட முடியாது. அதற்கான வாய்ப்பும் வசதியும் எங்கு இருக்கிறதோ அங்குதான் அது நடக்கும். அதேபோல், தான் சம்பாதித்த பணத்தை செலவு செய்யவும் ஒருவருக்கு உரிமை இருக்கிறது. யாருக்கு தானமாய் கொடுக்க விரும்புகிறாரோ, அவருக்குக் கொடுக்கலாம். எங்கு காடு, கழனி வாங்க விரும்புகிறாரோ அங்கு வாங்கலாம். இதை குறை சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது.
சென்னையில் சம்பாதிக்கும் திருநெல்வேலிக்காரர் ஒருவர், நிலம் வாங்க விரும்பினால் எங்கு வாங்குவார்? சொந்த ஊரில்தானே. அப்படித்தானே எல்லோரும். இதில் என்ன தப்பு இருக்க முடியும்? இதை எப்படி பிரச்னை ஆக்க முடியும்? ஆனால் ஆக்குவார்கள்.
காரணம், பாழாய் போன அரசியல். அதற்கென ஒரு கூட்டம் ஒவ்வொரு இடத்திலும் இருக்கிறது. மண்ணின் மைந்தர்கள் என சொல்லிக் கொண்டு, மொழியையும், மண்ணையும் தூக்கிப் பிடிப்பது போல் பேசி, பிடிக்காதவர்களை பழி வாங்கும். அதற்கு பின்னணியில் பெரிய அரசியல் கட்சிகளும் இருக்கும்.
ஆனால் இப்போது காலம் மாறி விட்டது. காலையில் சென்னையில் குடும்பம் சகிதமாக டிபன். தொழில் கூட்டாளிகளுடன் சிங்கப்பூரில் லஞ்ச் மீட்டிங். பின்னர் மும்பையில் நண்பர்களுடன் டின்னர் என காலம் வேகமாய் பறக்கிறது. கடல் தாண்டி கம்பெனி மூலம் நாடு பிடித்தது அந்தக் காலம். இப்போது பல நாடுகளில் கம்பெனிகள்தான் ஆளும் அரசாங்கத்தையே முடிவு செய்கின்றன.
கோககோலாவும் பெப்சியும் உலக நாடுகள் அனைத்திலும் விற்பனையாகிறது. இந்தியரான ரத்தன் டாடா, இங்கிலாந¢தின் கோரஸ் ஸ்டீல் நிறுவனத்தை வாங்கினார். அமெரிக்காவின் போர்டு நிறுவனத்திடமிருந்து ஜாகுவார், லேண்ட் ரோவர் கார் நிறுவனங்களை வாங்குகிறார். இந்தியாவில் தயாராகப் போகும் டாடா நானோ கார் உலகம் முழுவதும் பவனி வரப் போகிறது.
இந்தியாவில் பிறந்து இங்கிலாந்தில் கொடி கட்டிப் பறக்கும் லட்சுமி மிட்டல், லக்சம்பெர்க் நாட்டைச் சேர்ந்த ஆர்சிலர் நிறுவனத்தை வாங்கினார். உலகிலேயே ஸ்டீல் உற்பத்தியில் நம்பர் ஒன் நிறுவனம் அது. விஜய் மல்லையா உலகின் பிரபலமான மது பிராண்டுகளை வாங்கி வருகிறார். அமெரிக்காவின் மோட்டாரோலா செல்போன் நிறுவனத்தை இந்தியாவின் வீடியோகான் வாங்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
பணம். அதுதான் அனைத்தையும் முடிவு செய்கிறது. அது இருந்தால் யாரும் எந்த நிறுவனத்தையும் வாங்கலாம். எந்த நாட்டிலும் நிறுவனத்தைத் தொடங்கலாம். இதை எல்லோரும் ஏற்றுக் கொள்கிறோம். புதிதாக முதலீடு கிடைக்கிறது. வேலை வாய்ப்பு உருவாகும் என அதை வரவேற்கிறோம். ஆனால் சினிமா பிரபலங்கள் இதைச் செய்தால் மட்டும் கடுமையான எதிர்ப்பு கிளம்புகிறது.
காவிரி பிரச்னையில் தமிழகம், கர்நாடகம் இடையே இவ்வளவு பகையுணர்வு தேவையில்லை. இரண்டு மாநிலங்களுமே இந்தியாவின் அங்கங்கள். இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்வது ஒரு கையில் அரிவாளை எடுத்து, மறு கையை வெட்டுவது போன்றதுதான்.
எங்கேயோ எத்தியோப்பியாவில் பஞ்சம் என்றால் கண்ணீர் வடிக்கிறோம். பரிதவிக்கிறோம். இங்கே பக்கத்தில் குடிக்க தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டால், அதற்காக புதிதாக ஒரு திட்டம் கொண்டு வந்தால் அதை எதிர்க்கிறது ஒரு கோஷ்டி. இது என்ன நியாயம்?
இரு தரப்பிலும் பஸ் போக்குவரத்துக்கு தடை, தியேட்டர்கள், உணவகங்களில் ரகளை. இங்கேயும் கலைத் துறையினர் உண்ணாவிரதப் போராட்டம். அங்கேயும் இதே போல் போராட்டம். எல்லாம் சரி.. இதில் யாருக்கு லாபம்? யாருக்கும் இல்லை.
நஷ்டம்தான் இரு தரப்புக்கும். தமிழ் படங்களை கர்நாடகாவில் திரையிட முடியாததால் பல கோடி ரூபாய் நஷ்டம் தமிழ் பட உலகுக்கு. அதே போல், பிரம்மாண்டம், ஸ்டார் வேல்யூ, மெகா பட்ஜெட், சூப்பர் மசாலா என அனைத்தும் கொண்ட புதிய தமிழ் படங்களை பார்க்க முடியாததால், டப் செய்ய முடியாததால், திரையிட முடியாததால் அவர்களுக்கும் சில கோடி நஷ்டம்.
நாடுகளே ஒற்றுமையாய் நதி நீரைப் பிரித்துக் கொள்கின்றன. ஒன்று சேர்ந்து வன வளத்தைப் பாதுகாக்கின்றன. உலக வெப்பமயமாதலை தடுக்க கரம் கோர்க்கின்றன. ஆனால் இந்தியாவில் குடிநீர் பிரச்னையில் இரண்டு மாநிலங்கள் அடித்துக் கொள்கின்றன.
மாநிலங்கள் அடித்துக் கொள்ளும்போது, நியாயம் சொல்லி பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. இந்தியாவில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறது என்கிறார்கள்.
சட்டம் அனைவருக்கும் பொதுதானே. இது இப்படித்தான் என அடித்துச் சொல்லி, பிரச்னையை தீர்க்க வேண்டியது மத்திய அரசுதான். அதற்கு வலுவான அரசு தேவை. அண்ணன், தம்பிகள் அடித்துக் கொண்டால், அப்பா தானே தீர்த்து வைப்பார்.
அதுபோல் மாநிலங்கள் அடித்துக் கொள்ளும்போது, அறிவுரை சொல்லியும், அடித்தும் திருத்த வேண்டியது மத்திய அரசுதான். வெளிநாடுகளில் இருந்து தாக்குதல் அபாயம் ஏற்பட்டால் மட்டும்தான் மார்தட்ட வேண்டும் என்பதில்லை. உள்நாட்டிலேயே ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் பாதிப்பு ஏற்படும் போது, சட்டத்தின் துணையோடு, இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டிய பொறுப்பும் மத்திய அரசுக்கு இருக்கிறது.
ஒரு நாள் நள்ளிரவில் அப்போதிருந்த அனைத்து பெரிய வங்கிகளும் இரவோடு இரவாக தேசிய மயமாக்கப்பட்டன. அதே போல் ஒரு நாள் நதிகளும் தேசிய மயமாக்கப்படும். அப்போதுதான் காவிரி பிரச்னை போன்ற நதி நீர்ப் பங்கீடு பிரச்னைகள் முடிவுக்கு வரும். அந்த நாளும் வரும். அது வரைக்கும் காத்திருப்போம்.