பெரியார் பேசுகிறார்
திருக்குறளை மெச்சுகின்றவர்கள் கீதையை ஒழிக்க மறுப்பதேன்?
கடவுளுடைய முகம், தோள், தொடை, கால் ஆகியவற்றில் இருந்து நான்கு ஜாதிகள் தோன்றின என்பது, இந்து சனாதன மதக்காரர்கள் மாத்திரமன்றி, இந்து ஆஸ்திகக்காரர்கள் பெரும்பாலோரும் நம்புகின்ற கொள்கையாகும். பறையன், சக்கிலி, பள்ளன் முதலிய சூத்திரர்கள் அல்லாத ஜாதியார்கள் எதிலிருந்து பிறந்தார்கள் என்பதும், இந்தியா தவிர மற்ற தேசத்திலுள்ள மக்களான கிறிஸ்தவர், மகம்மதியர், பவுத்தர்கள் முதலிய 180 கோடி மக்கள் எதிலிருந்து, யாரால் பிறப்பிக்கப்பட்டார்கள்? என்ற கேள்விக்கு இடமாய் இருந்தாலும், இந்த நான்கு வர்ணத்தையும் மறுக்க எந்த ஓர் இந்துவும் துணிவதில்லை.
ஏதோ சீர்திருத்தக்காரர்கள் என்று கூறிக்கொண்ட சிலர், சூத்திரர் என்ற அவமானம் பொறுக்க மாட்டாதவர்களாய் நான்கு வர்ணத்தை ஒப்புக் கொள்ளாமல், தன் வரையில் கூறிக் கொண்டிருந்தார்களே தவிர, வெளியில் துணிவாக எதிர்க்கவில்லை. மறுபுறம் அக்கொள்கைக்கு அடிமைகளாகவே இருந்து வருகிறார்கள். எப்படி எனில், ராமாயணக் கதைக்கு வேறு வியாக்கியானம் செய்கின்றவர்களும், நல்லவர்களும்கூட, பாரதக் கதையில் வரும் பாத்திரங்களான ராமனையும், கிருஷ்ணனையும் தெய்வமாகக் கொண்டாடாமல் இருப்பதில்லை. பாரதக் கதையில் ஒரு சமயத்தில் வரும் சிறு சம்பவமான ‘கிருஷ்ணன் சம்பாஷனை’ என்னும் கீதையை பிரமாதப்படுத்தி மதிக்கிறார்கள்.
கீதையை மறுக்க, இன்று இந்துக்களில் பதினாயிரத்தில் ஒருவனுக்குக்கூட தைரியம் வருமா என்பது சந்தேகம். கீதையில் கிருஷ்ணன், பேத நிலை உண்டாக்கும் வர்ண தருமத்துக்கு தானே காரணம் என்கிறான். ”நான்கு வர்ணங்களை நான்தான் சிருஷ்டி செய்தேன்” என்று சொன்னதாக வாசகம் இருக்கிறது. ஆகவே, கீதையை மத ஆதாரமாகக் கொண்டவன், சூத்திரப் பட்டம் ஒழிய வேண்டும் என்றோ, ஜாதிப் பிரிவு ஒழிய வேண்டும் என்றோ எப்படிச் சொல்ல முடியும்?
நமது பிரச்சாரத்தின் பயனாய் ஓர் அளவுக்கு மநு (அ) தருமசாஸ்திரத்தின் மீது பலருக்கு வெறுப்பும், அலட்சியம் ஏற்பட்டிருக்கிறது. கிருஷ்ணன் மீது, கீதை மீது வெறுப்பு அலட்சியம் ஏற்படவில்லை, ஒழிக்கத் தைரியம் வருவதில்லை. இந்நாட்டில் பல ஆயிர வருஷங்களாகவே இந்த இழிவும் முட்டாள்தனமும், அயோக்கியத் தனமும் நிலவி வந்திருக்கிறது. திருவள்ளுவரின் குறளை மெச்சுகிறார்களே ஒழிய, காரியத்தில் அதை மலந்துடைக்கும் துண்டுக் காகிதமாகவே மக்கள் கருதுகிறார்கள். அதோடு அதற்கு நேர்விரோதமான கீதையைப் போற்றுகிறார்கள். இது, முட்டாள்தனமான காரியக்காரர்களிடம் மாத்திரம் இருப்பதாக நான் சொல்ல வரவில்லை. சைவன்களும், வைணவன்களும் கீதையை, கிருஷ்ணனை, பிரம்மாவை மறுக்கவே மாட்டார்கள்.
ஆனால், தங்களுக்குள் பேதம் இல்லை என்று வாயால் சொல்லுவார்கள். கபிலர் சொன்னவையும், சித்தர்கள் ஞானிகள் சொன்ன வாக்குகளும் பேச்சளவில் மாத்திரம் போற்றப்படுகின்றன. ஆனால், காரியத்தில் சிறிதுகூட லட்சியம் செய்யப்படுவதில்லை. இந்நிலையில் ஜாதி எப்படி ஒழியும்? பேத நிலை எப்படி மாறும் என்பதைச் சிந்தியுங்கள்.
நமக்கு இன்று வேண்டிய சுயாட்சி என்பதானது, ஜாதிக் கொடுமைகளையும், ஜாதிப் பிரிவுகளையும், உயர் ஜாதி சலுகைகளையும் ஒழிப்பதாகவும், அழிப்பதாகவும் இருக்கத்தக்கதாய் இருந்தால்தான் நல்லதாகும். இப்படிப்பட்ட பேத நிலை நீக்கும் ஆட்சியை ஆதரிப்பதற்கு, நமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. மனப்பூர்வமாக வரவேற்கவும் ஆசைப்படுகிறேன்.
‘பெரியார் களஞ்சியம்’: ஜாதி – தீண்டாமை பாகம் 11; பக்கம்: 35
not only krishnabagavan or bagavadgita, we are ready to fire kuran, bible, allah everything together
எந்த மத புத்தகமானலும் ஒரு சில ஜாதிகள் பிறப்பினால் தாழ்ந்தவர்கள் என்று சொல்லுமானால் அதை எரிப்பதினால் என்ன வந்து விடப்போகிறது,தாராளமாக எரிக்கலாம்